மந்திரச்சொல்
தனது வாழ்க்கையைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக்கொள்ள எதுவும் இல்லாத மனிதர்கள், சில நேரங்களில் அவன் தனது பிறப்பு, இனம், மொழி, மதம், சாதி, நாடு அல்லது சமூகத்தின் பெருமையைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள்.
ஒரு குழுவின் உறுப்பினராக அடையாளப்படுத்துவது, அவர்களுக்குப் பாதுகாப்பு, ஒற்றுமை உணர்வு, தன்னம்பிக்கை கொடுக்கிறது.
தன்னிடம் தனிப்பட்ட திறமை இருக்கிறது என்று பேச முடியாதவர், எங்கள் சமூகத்தில் பல மேதைகள் பிறந்திருக்கிறார்கள் என்று பெருமைப்படலாம். இதற்குப் பின்னால் இருப்பது தாழ்வு மனப்பான்மை மட்டுமல்ல. சில நேரங்களில் அது சமூகப் பெருமிதம், அடையாளப் பாதுகாப்பாக இருக்கலாம்.
தன்னுடைய இனத்தை நேசிப்பதும், போற்றுவதும் பெருமைக்குரிய விஷயம். ஆனால், அதன் பேரால் யாரையும் சிறுமைப்படுத்தக்கூடாது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879-ல் ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளராக உயர்ந்தார். சார்பியல் கோட்பாட்டின் மூலம் அறிவியல் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.
ஐரோப்பாவில் யூதர்களுக்கு எதிரான வெறுப்பும் இனப் பாகுபாடும் அதிகரித்த காலத்தில் ஐன்ஸ்டீன் வாழ்ந்தார். நாஜி ஆட்சியின் எழுச்சிக்குப் பிறகு ஜெர்மனியை விட்டு வெளியேறினார். யூதர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையைத் துணிச்சலாக எதிர்த்தார். அதே நேரத்தில், குறுகிய இனவாதத்தையும் தேசியவாத வெறியையும் அவர் ஆதரிக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் சமமான கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
1952-ல் இஸ்ரேலின் முதல் அதிபர் சைம் வைஸ்மேன் மறைந்தபோது, ஐன்ஸ்டீனுக்கு இஸ்ரேல் அதிபர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்தார். யூதப் பின்னணியைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் என்றாலும், தனது இன அடையாளத்தை அரசியல் அதிகாரமாக மாற்றிக்கொள்ள அவர் முயற்சிக்கவில்லை.
ஒரு மனிதனின் பெருமை அவர் எந்த இனத்தில் பிறந்தார் என்பதில் இல்லை. அவர் மனிதகுலத்திற்கு என்ன பங்களித்தார் என்பதில்தான் இருக்கிறது.
ஒருவர் எந்த இனத்தில் பிறக்க வேண்டும், எந்தக் குடும்பத்தில் பிறக்க வேண்டும், எந்த மொழியைத் தாய்மொழியாகப் பெற வேண்டும் என்பதை அவரால் தீர்மானிக்க முடியாது. அவை அவருக்குக் கிடைத்த அடையாளங்கள். ஆனால், அந்த அடையாளங்களைக் கடந்து அவர் என்னவாக உருவாகிறார், சமூகத்திற்கு என்ன செய்கிறார், மனிதகுலத்திற்கு என்ன பங்களிக்கிறார் என்பதுதான் அவரது வெற்றி
தங்களுடைய மொழி, இனம், மதம், நாடு, கலாசாரம் ஆகியவற்றைப் பெருமையாகக் கருதுவதும், நேசிப்பதும் தவறில்லை. முன்னோர்களின் சாதனைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதும் நல்ல விஷயங்கள்தான். ஆனால், அதற்காக மற்றவர்களை இழிவுபடுத்தக்கூடாது.
எனவே எந்த ஒரு மனிதரிடமும், இனத்தைப் பற்றி கேட்காதீர்கள். பேசாதீர்கள். இந்த உலகில் யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் இல்லை. யாரும் யாரை விடவும் தாழ்ந்ந்தவர் இல்லை.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
