மந்திரச்சொல்
வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லா நாட்களும் ஒரே மாதிரி அமைவதில்லை. சில நாட்கள் நினைத்ததைவிட அழகாக அமையும். சில நாட்கள் எதிர்பார்க்காத ஏமாற்றம், தோல்வி, அவமானம், இழப்புகளையும் கொடுத்துவிட்டுச் செல்லும். நம்பிய ஒருவர் ஏமாற்றலாம். எதிர்பார்த்த வாய்ப்பு கைநழுவிப் போகலாம்.
இத்தகைய நேரங்களில் பலரும், ஒரு நாளில் நடந்த மோசமான சம்பவத்தை, தங்கள் ஒட்டுமொத்த எதிர்காலத்தின் அடையாளமாக நினைத்து அச்சப்படுகிறார்கள்.
இன்று தோற்றுவிட்டோம் என்பதற்காக நாளையும் தோற்போம் என்று அர்த்தமில்லை. ஒரு நேர்காணலில் வேலை கிடைக்கவில்லை என்றால், ‘எனக்கு எந்த வேலையும் கிடைக்காது’ என்று முடிவெடுப்பது. ஒரு உறவில் ஏமாற்றம் ஏற்பட்டால், ‘இனி யாரையும் நம்ப முடியாது’ என்று நினைப்பது உண்மையல்ல.
ஒரு காலத்தில் இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய அமிதாப்பச்ச்சன், வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவையும் சந்தித்திருக்கிறார்.
1990-களின் இறுதியில் அமிதாப்பச்சனின் வாழ்க்கை மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளானது. அவர் தொடங்கிய ஏபிசிஎல் நிறுவனம் பெரும் நிதி இழப்புகளைச் சந்தித்தது. கடன்கள் அதிகரித்தன. தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார்.
ஒரு காலத்தில் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற மனிதர், மீண்டும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஆனால் அவர் கடந்த காலத் தவறுகளை எண்ணி அச்சப்படவில்லை. தொலைக்காட்சியில் புதிய வாய்ப்பாக வந்த ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியை ஏற்றுக்கொண்டார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தன்னுடைய வயது, முந்தைய புகழ், தொழில் சரிவு ஆகியவற்றைத் தடையாக நினைக்காமல் புதிய பாதையை உருவாக்கினார்.
அமிதாப் பச்சனின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் இதுதான். நேற்று எந்த உயரத்தில் இருந்தீர்கள் என்பது முக்கியமல்ல. இன்று எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதும் இறுதியானது அல்ல. நாளை மீண்டும் எழுவதற்கான வாய்ப்பை மட்டும் இழந்துவிடாதீர்கள்.
இரவு எவ்வளவு நீண்டதாக இருந்தாலும், அதற்குப் பிறகு விடியல் வந்தே தீருகிறது. ஒரு மரம் இலையுதிர் காலத்தில் இலைகளை இழந்துவிட்டால், அது தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதில்லை. மீண்டும் துளிர்விடும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
மனித வாழ்க்கையும் அப்படித்தான்.
ஒரு தோல்வி உங்களை நிறுத்திவிடலாம். ஒரு ஏமாற்றம் உங்களை அழ வைத்துவிடலாம். ஒரு இழப்பு உங்களை நிலைகுலையச் செய்துவிடலாம். ஆனால் அவை எதுவுமே உங்களுடைய எதிர்காலத்தை நிரந்தரமாகத் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள்.
ஏனென்றால், வாழ்க்கையில் சில அற்புதமான திருப்பங்கள், நாம் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கும் தருணத்திற்குப் பிறகுதான் தொடங்குகின்றன.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
