மந்திரச்சொல்
யாராவது ஒருவர் நம் வாழ்க்கையை மாற்றிவிட மாட்டாரா என்று பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், யாரும் யாரையும் மாற்றிவிட முடியாது. நாமே மாற வேண்டும்.
அதாவது வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையை மாற்றிவிடுவதில்லை. அவர்களை சந்தித்த அனுபவங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் திசையை மாற்றுகிறது.
ஒரு நல்ல மனிதரைச் சந்திப்பதால் மட்டும் ஒருவரால் நல்லவராகிவிட முடியாது. அவருடைய நல்ல குணங்களில் ஒன்றையாவது வாழ்க்கையில் பின்பற்றினால், அந்தச் சந்திப்பு அர்த்தமுள்ளதாகிறது.
ஒருவர் நம்மை ஏமாற்றிவிட்டார் என்பதற்காக வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்தது என்று முடிவெடுத்துவிட்டால், நாம் தோற்றுப்போகிறோம். அந்த ஏமாற்றத்திலிருந்து மனிதர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி, யாரை நம்ப வேண்டும், எங்கே எல்லை வகுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டால், அந்த ஏமாற்றமே ஒரு பாடமாக மாறிவிடுகிறது. மனிதர்கள் நமக்குக் கொடுப்பது அனுபவங்கள்; அந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்பவையே வாழ்க்கைப் பாடங்களாக மாறுகிறது.
விராட் கோலி தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் திறமைசாலியாக இருந்தாலும், கோபத்தைக் கட்டுப்படுத்துவதிலும், உணர்ச்சிகளைச் சமாளிப்பதிலும் சில சவால்களை எதிர்கொண்டார்.
அவருடைய சிறுவயதுப் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, தவறு செய்தால் நேரடியாகச் சுட்டிக்காட்டி அவரைச் சரியான பாதையில் திருப்பினார். ஒன்பது வயதில் அவரிடம் பயிற்சி பெறத் தொடங்கிய கோலி, இன்றும் அவருடன் தனது கிரிக்கெட் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறியுள்ளார்.
அதேபோல, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனிடம் இருந்து ஆட்டத்தின் மீதான மனநிலையையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டதாகவும் கோலி தெரிவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டியது, கோலி சந்தித்த ஒவ்வொருவரையும் போல மாறவில்லை. அவர்களிடம் இருந்த நல்ல குணங்களையும், திறமைகளையும் அடையாளம் கண்டு தனக்குள் வளர்த்துக்கொண்டார்.
எனவே, நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களை இரண்டு வகையாகப் பார்க்கலாம். சிலர் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கிறார்கள். இன்னும் சிலர் எப்படி வாழக்கூடாது என்பதைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
நம்மை நேசிப்பவர்களிடமிருந்து அன்பைக் கற்றுக்கொள்ளுங்கள். நம்மை மதிப்பவர்களிடமிருந்து மரியாதையைக் கற்றுக்கொள்ளுங்கள். நம்மை ஏமாற்றுபவர்களிடமிருந்து எச்சரிக்கையைக் கற்றுக்கொள்ளுங்கள். நம்மை விமர்சிப்பவர்களிடமிருந்து நம்முடைய குறைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்.
அதேநேரம், எல்லோரிடமும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. நல்லவற்றை ஏற்றுக்கொள்ளவும், தவறானவற்றை நிராகரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் நம்முடன் கடைசிவரை பயணிக்கப் போவதில்லை. சிலர் பாதியிலேயே விலகிவிடுவார்கள். சிலர் நம்மை விட்டுப் பிரிந்துவிடுவார்கள். சிலர் நம்முடைய எதிரிகளாகக்கூட மாறிவிடுவார்கள்.
ஆனால், அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மட்டும் நம்மைவிட்டு விலகுவதில்லை. எனவே, வாழ்க்கையில் யாரைச் சந்தித்தோம் என்பதைவிட, அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்பதுதான் முக்கியம். சில மனிதர்கள் நம் வாழ்க்கையில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் கற்றுக்கொடுத்த பாடங்கள் எதிர்காலத்தையே மாற்றிவிடலாம்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
