மந்திரச்சொல்
மனிதர்களின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று, தனக்குத் தேவையில்லாததையும் விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது.
ஒருவர் நம்மை அவமானப்படுத்தியிருக்கலாம். ஏமாற்றியிருக்கலாம். அந்தச் சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், அதை நினைக்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் மனம் காயப்படும். அதேநேரம், நம்மை ஏமாற்றியவர் வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடர்ந்துகொண்டிருக்கலாம். ஆனால், அவர் மீது கோபம், வெறுப்பை நாம் மட்டும் சுமந்துகொண்டிருக்கிறோம்.
இங்கே கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், அந்தச் சம்பவம் தற்போது நம்மைத் துன்புறுத்தவில்லை. அந்தச் சம்பவத்தை மனதிற்குள் தொடர்ந்து உயிரோடு வைத்திருக்கும் நமது நினைவுகள்தான் நம்மைத் துன்புறுத்துகின்றன.
நடந்ததை மாற்ற முடியாது. ஆனால், நடந்ததைப் பற்றிச் சிந்திக்கும் நேரத்தையும் அணுகுமுறையையும் மாற்ற முடியும்.
நமது வாழ்க்கையில் இன்னொரு பெரிய மனச்சுமை, நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதுதான்.
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? நம்முடைய அன்புக்கு அவர்கள் எப்படி பதிலளிக்கிறார்கள்? நாம் எதிர்பார்த்தபடி ஏன் நடக்கவில்லை? நம்மை ஏன் புரிந்துகொள்ளவில்லை? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் தேடிக்கொண்டே இருக்கிறோம்.
ஆனால், ஓர் அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் நம்மால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. நம்முடைய எண்ணங்கள், முடிவுகள், செயல்கள் ஆகியவற்றின் மீதுதான் நமக்கு அதிகமான அதிகாரம் இருக்கிறது.
எனவே, யாராவது நம்மைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், அவர்களைப் புரிய வைப்பதற்காகவே வாழ்க்கையைச் செலவிட வேண்டியதில்லை. நம்முடைய மதிப்பை உணராதவர்களிடம் தொடர்ந்து அங்கீகாரம் கேட்க வேண்டியதுமில்லை.
பலர் விட்டுக்கொடுப்பதைத் தோல்வியாக நினைக்கிறார்கள். ஒரு உறவை விட்டு விலகுவது தோல்வி, ஒரு போட்டியிலிருந்து விலகுவது தோல்வி, ஒரு எதிர்பார்ப்பைக் கைவிடுவது தோல்வி என்று நினைக்கிறார்கள்.
ஆனால், எல்லாப் போராட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை. சில போராட்டங்களில் இருந்து விலகுவதுதான் நமக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி.
பிரபல உளவியலாளர் ஸ்டீவன் ஹேய்ஸ் (Steven C. Hayes) உருவாக்கிய Acceptance and Commitment Therapy (ACT) என்ற சிகிச்சை அணுகுமுறை ஒரு முக்கியமான உண்மையை வலியுறுத்துகிறது.
ஒருவர் நம்மை வெறுக்கிறார் என்றால், அந்த எண்ணத்தை மாற்றுவதற்காகவே நமது நேரத்தையும் மன அமைதியையும் செலவிட வேண்டியதில்லை. அவர் வெறுப்பது அவருடைய உணர்வு. நாம் எப்படி வாழ்கிறோம் என்பது நமது தேர்வு.
அதேபோல், கடந்த காலத் தவறுகளுக்காக வாழ்நாள் முழுவதும் நம்மை நாமே தண்டித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.
மன அமைதி என்பது வாழ்க்கையில் பிரச்சினைகளே இல்லாத நிலை அல்ல; பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை மனதிற்குள் சுமந்துகொண்டே வாழாத பக்குவம்.
மன்னிக்க முடிந்தால் மன்னியுங்கள். முடியாவிட்டால் குறைந்தபட்சம் அந்தக் கோபத்தை தினமும் சுமக்காதீர்கள். மாற்ற முடியாத கடந்த காலத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். கட்டுப்படுத்த முடியாத மனிதர்களை அவர்களுடைய போக்கில் விட்டுவிடுங்கள். உங்கள் மன அமைதியை அழிக்கும் எதிர்பார்ப்புகளிலிருந்து வெளியே வாருங்கள்.
ஏனென்றால், வாழ்க்கையில் நாம் எதைப் பிடித்துக்கொள்கிறோம் என்பது மட்டுமல்ல, எதை விட்டுவிடுகிறோம் என்பதும்கூட நம்முடைய மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது. எல்லாவற்றையும் சுமந்துகொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல; சுமையைக் குறைத்துக்கொண்டு மனநிறைவுடன் வாழ்வதுதான் வாழ்க்கை.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
