மந்திரச்சொல்
அன்பு என்பது அழகான உணர்வு. ஆனால், அதுவே அளவுக்கு மீறும்போது நம் மகிழ்ச்சியை, மன அமைதியை பறித்துவிடுகிறது. அன்பு செலுத்துவது தவறல்ல. அந்த அன்புக்காக நம்மையே இழந்துவிடுவதுதான் தவறு.
மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் பல துயரங்களுக்கு மற்றவர்கள் காரணமாக இருப்பதில்லை. சில நேரங்களில் நம்முடைய எதிர்பார்ப்புகளே நமக்குத் துயரத்தை உருவாக்குகின்றன.
அவர்கள் பேசினால் மகிழ்ச்சி, பேசாவிட்டால் வேதனை. அவர்கள் நம்மைத் தேடினால் சந்தோஷம், தேடாவிட்டால் ஏமாற்றம். அவர்கள் நமக்கு முக்கியத்துவம் கொடுத்தால் வாழ்க்கை அழகாகத் தெரிகிறது. கொடுக்கத் தவறினால் வாழ்க்கையே அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.
ஒருவரை நேசிப்பது தவறல்ல. ஆனால், அந்த அன்பில் நம்மையே தொலைத்துவிட்டு, பின்னர் நம்மைத் தேடி அலைவதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய துயரம்.
நாம் ஒருவருக்கு எவ்வளவு அன்பு கொடுக்கிறோமோ, அதே அளவு அன்பை அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கத் தொடங்குகிறோம். நாம் அவர்களுக்காக நேரத்தை ஒதுக்கியிருக்கலாம். நம்முடைய விருப்பங்களைத் தியாகம் செய்திருக்கலாம். நம்முடைய தேவைகளைக்கூட ஒதுக்கி வைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதேபோல நமக்காகச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
ஏனெனில், நாம் கொடுக்கும் அன்பு நம்முடைய விருப்பம். அதற்குப் பதிலாக அதே அளவு அன்பு கிடைக்க வேண்டும் என்பது நம்முடைய எதிர்பார்ப்பு. இந்த இரண்டுக்கும் இடையில்தான் பல உறவுகளின் வலியும் வேதனையும் மறைந்திருக்கின்றன.
நாம் ஒருவருக்காகச் செய்யும் தியாகங்கள், அவர்களைக் கடன்பட்டவர்களாக மாற்றிவிடுவதில்லை. இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் பல ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.
இதற்கு வாழும் பிரபலமாக ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் (Jennifer Aniston) வாழ்க்கையை உதாரணமாகக் காட்டலாம்.
உலகப் புகழ்பெற்ற நடிகை ஜெனிபர் அனிஸ்டனின் வாழ்க்கையில் காதல், திருமணம், விவாகரத்து எனப் பல தனிப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நடிகர் பிராட் பிட்டுடனான அவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தபோது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை உலக ஊடகங்களின் விவாதப் பொருளானது. திருமணம், குழந்தைப்பேறு போன்ற தனிப்பட்ட விஷயங்களில் அவர் தொடர்ந்து பொதுவெளி அழுத்தத்தை எதிர்கொண்டார்.
ஆனால், தன்னுடைய வாழ்க்கையின் மதிப்பை ஒரு திருமணத்தின் வெற்றியோ, இன்னொருவரின் அங்கீகாரமோ தீர்மானிக்க அனுமதிக்காமல், தொடர்ந்து தன்னுடைய கலைப்பயணத்திலும் தனிப்பட்ட வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார்.
ஒருவர் நம்மை விட்டுப் பிரிவதால் நம்முடைய வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒருவரை அளவுக்கு மீறி நேசித்ததற்காக நம்முடைய சுயமரியாதையையும் அடையாளத்தையும் இழக்க வேண்டியதில்லை என்பதை ஜெனிபர் காட்டியிருக்கிறார்.
எனவே, அன்பு என்ற பெயரில் உங்களை இழந்துவிடாதீர்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
