அதிகம் பேர் நம்புவதால் மட்டும் பொய் உண்மையாகிவிடாது, தீமை நன்மையாகாது.

மந்திரச்சொல்

இன்று ஒரு பறக்கும் தட்டு பார்த்தேன் என்று ஒருவர் பொய் சொன்னால், அது சந்தேகத்திற்குரியதாக இருக்கலாம். அதையே பத்து பேர் சொன்னால், உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வரும். ஆயிரம் பேர் சொன்னால் அதை உண்மை என்று நம்பிவிடுவார்கள்.

ஏனென்றால், மனிதர்களுக்கு உண்மையைத் தேடுவதைவிட மற்றவர்களுடன் ஒத்துப்போவது எளிது. அதேபோல் எல்லோரும் ஒரு விஷயத்தை நம்புவதால் அது உண்மையாக இருக்க வேண்டும் என்று மனித மூளை தவறாக முடிவெடுக்கிறது. ஒரே தகவலைத் திரும்பத் திரும்பக் கேட்பதும் அது உண்மை என்ற உணர்வை அதிகரிக்கலாம்.

ஆனால், ஒரு கருத்துக்கு ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பது அதன் புகழைக் காட்டலாம்; அதன் உண்மைத்தன்மையை நிரூபிக்காது. இதற்கு உதாரணமே கலிலியோ கலிலி.

ஒரு காலத்தில் பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்றும், சூரியனும் மற்ற கோள்களும் பூமியைச் சுற்றுகின்றன என்றும் பலர் நம்பினர். ஆனால், வானியல் ஆய்வுகள் மூலம் சூரிய மையக் கோட்பாட்டை கலிலியோ உறுதிப்படுத்தினார். இதற்காக அவர் கடுமையான மத அதிகார விசாரணையை எதிர்கொண்டார். 1633-ஆம் ஆண்டு விசாரணைக்குப் பிறகு, தனது கருத்துகளைத் தொடர்ந்து ஆதரிப்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

அன்று பூமியை மற்ற கிரகங்கள் சுற்றுவதை ஏராளமானவர்கள் நம்பினார்கள் என்பதனால் மட்டும் அது அறிவியல் உண்மையாகவில்லை. கூட்டம் தவறாக இருக்கலாம். அதிகாரம் தவறாக இருக்கலாம். ஆனால் உண்மை ஒன்றுதான்.

ஒரு தவறை எல்லோரும் செய்கிறார்கள் என்பதால் அது சரியான பழக்கமாகிவிடாது. ஒருவரை எல்லோரும் வெறுக்கிறார்கள் என்பதால் அவர் கெட்டவராகிவிட மாட்டார். ஒருவரை எல்லோரும் புகழ்கிறார்கள் என்பதால் அவர் செய்யும் அனைத்தும் நல்லதாகிவிடாது.

இன்று ஒரு தகவல் உண்மையா என்பதை ஆராய்வதற்கு முன்பே, எத்தனை பேர் அதைப் பகிர்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கிறோம். ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்த செய்தி உண்மையாக இருக்கலாம்; பொய்யாகவும் இருக்கலாம். அதிகமானோர் விரும்பிய ஒரு பதிவில் தவறான தகவல் இருக்கலாம். பிரபலமான ஒருவர் சொல்வதால் மட்டும் ஒரு கருத்து அறிவியல் உண்மையாகிவிடாது.

எல்லோரையும் எதிர்த்துப் பேசுபவர் வலிமையானவர் அல்ல. எல்லோரும் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்பவரும் வலிமையானவர் அல்ல. எப்போது கூட்டத்துடன் நிற்க வேண்டும், எப்போது தனியாக நின்றாலும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பதை அறிந்திருப்பவரே மனவலிமை கொண்டவர். தவறை ஒப்புக்கொள்வது பலவீனம் அல்ல. உண்மையை அறிந்த பிறகும் ஈகோவுக்காகத் தவறைப் பிடித்துக்கொண்டிருப்பதுதான் பலவீனம்.

வாழ்க்கையில் சில நேரங்களில் உண்மை பேசுபவர் தனியாக நிற்க வேண்டியிருக்கும். அநீதியை எதிர்ப்பவர் கேலி செய்யப்படலாம். நேர்மையாக இருப்பவர் மற்றவர்களின் ஆதரவை இழக்கலாம். கூட்டத்தின் கைதட்டலைப் பெறுவதற்காக மனசாட்சியை விற்றுவிடாதீர்கள். மற்றவர்கள் நம்புகிறார்கள் என்பதற்காக ஆராயாமல் நம்பிவிடாதீர்கள். அனைவரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காக உண்மையை விட்டுவிடாதீர்கள்.

.

கூட்டம் சொல்வது கருத்து. ஆதாரம் சொல்வது உண்மை. மனசாட்சி சொல்வது அறம். இந்த மூன்றையும் வேறுபடுத்திப் பார்க்கக் கற்றுக்கொண்டால், உண்மையைக் கண்டுபிடிக்கலாம்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment