மந்திரச்சொல்
வாழ்க்கையில் நிறைய இழந்துவிட்டதாக வருந்தலாம். ஆசைப்பட்டதை அடையமுடியவில்லை என்று ஏங்கலாம். ஆனால், போட்டிகள் நிறைந்த உலகத்தில் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை என்பதும் ஒரு சாதனை.
பணம் சம்பாதித்தவர்கள், உயர்ந்த பதவிக்குச் சென்றவர்கள், புகழ்பெற்றவர்கள், பெரிய வீடு கட்டியவர்களையே வெற்றியாளர்கள் என்று நினைக்கிறோம். அவர்களுடன் நம்முடைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, எதையும் சாதிக்கவில்லை என்று வருந்துகிறோம்.
வாழ்க்கை நெருக்கடியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சிலர் தங்கள் முடிவை தேடிக்கொள்கிறார்கள். கடனுக்குப் பயந்து வீட்டைவிட்டு ஓடுகிறார்கள். சாமியாராக சிலர் திரிகிறார்கள். இத்தனை மனிதர்களுக்கு இடையில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பதே ஒரு சாதனை என்பதே உண்மை.
இளமைக் காலத்திலேயே ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய் கண்டறியப்பட்டது. அவரது உடல் இயக்கத்திறன் காலப்போக்கில் கடுமையாகக் குறைந்தது. பின்னாளில் பேசுவதற்குக்கூட தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டது.
அவரது வாழ்க்கையில் இருந்த சவால்கள் சாதாரணமானவை அல்ல. ஆனால், அவரது உடல்நிலை அவரது அறிவியல் பங்களிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கருந்துளைகள், அண்டவியல், பிரபஞ்சத்தின் இயல்பு போன்ற துறைகளில் அவர் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, அறிவியல் உலகில் தனித்த இடத்தைப் பெற்றார்.
வாழ்க்கை நாம் திட்டமிட்டபடி அமையவில்லை என்பதற்காக, அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று முடிவெடுக்கக் கூடாது. நாம் எவ்வளவு வசதியாக வாழ்கிறோம் என்பதில் வாழ்க்கை இல்லை; நமக்குக் கிடைத்த சூழ்நிலைக்குள் நம்மால் என்ன அர்த்தமுள்ள செயல்களைச் செய்ய முடிகிறது என்பதில்தான் இருக்கிறது. இதையே ஹாக்கிங் வாழ்க்கை கற்றுத்தருகிறது.
உங்களைப் பார்த்து யாரும் கைதட்டாமல் இருக்கலாம். உங்கள் முயற்சிகளை யாரும் பாராட்டாமல் இருக்கலாம். உங்களுடைய வலியைப் புரிந்துகொள்ளவும் யாரும் இல்லாமல் இருக்கலாம்.
எல்லோரும் உலகத்தையே வெல்ல வேண்டியதில்லை. உங்கள் நாளை நேற்றைவிடச் சிறிது அர்த்தமுள்ளதாக மாற்றினாலே போதும். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தாலும், குடும்பத்திற்காகத் தொடர்ந்து உழைப்பவரின் வெற்றி அப்படிப்பட்டதுதான்.
வாழ்க்கை உங்களைச் சோர்வடையச் செய்திருந்தால், உங்களை நீங்களே குற்றம் சொல்லிக்கொள்ளாதீர்கள். சிறிது ஓய்வெடுங்கள். தேவையான உதவியைப் பெறுங்கள். உங்களால் முடிந்த இடத்திலிருந்து மீண்டும் தொடங்குங்கள்.
இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். இன்னமும் கற்றுக்கொள்ள முடியும். இன்னமும் அன்பு செலுத்த முடியும். இன்னமும் உங்கள் வாழ்க்கையில் புதிய அர்த்தத்தை உருவாக்க முடியும் என்று நம்புங்கள். அதுவே வெற்றி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
