செய்த தவறுகளைவிட, செய்யத் துணியாமல் விட்டவைகளுக்கே அதிகம் வருந்துகிறோம்

மந்திரச்சொல்

வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கையில், தோல்வி அடைந்ததைவிட முயற்சி செய்யாமல் விட்ட வருத்தமே நிறைய பேர் மனதை அதிகமாகக் காயப்படுத்துகிறது. ஏனென்றால், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். ஆனால், சொல்லத் தயங்கிய வார்த்தைகள், தொடங்கத் துணியாத முயற்சிகள், எதிர்கொள்ள அஞ்சிய சவால்கள் மனதில் நீண்ட கால வேதனையாக தங்கிவிடுகின்றன.

உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் நாவல்களின் எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் தனது கதையை எழுதிக்கொண்டிருந்தபோது, அவர் எதிர்காலத்தில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பதிப்பகங்களின் நிராகரிப்புகளைச் சந்தித்தபோதும், தனது கதையை வெளியிடுவதற்கான முயற்சியை அவர் கைவிடவில்லை. இறுதியில், 1997-ஆம் ஆண்டு ஹாரிபாட்டர் வெளியானது.

ரௌலிங்கின் வாழ்க்கையில் புரிந்துகொள்ளவேண்டியது, அவர் ஒருபோதும் தோல்வியடையவில்லை என்பதல்ல. தோல்வி அச்சத்தால் தனது முயற்சியைக் கைவிடவில்லை என்பதுதான். நிராகரிப்புகளுக்குப் பயந்து கையெழுத்துப் பிரதியைப் பதிப்பகங்களுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் இன்று உலகம் அறிந்த ஹாரி பாட்டர் கதைகள் கிடைத்திருக்காது.

வாழ்க்கையும் இப்படித்தான். முயற்சி செய்தால் வெற்றி உறுதி கிடையாது. ஆனால், முயற்சி செய்யாவிட்டால் வெற்றிக்கான வாய்ப்பை இழந்துவிடுகிறோம்.

ஒரு தொழில் தொடங்கி, அது தோல்வியடைகிறது என்றால் பணத்தை இழக்கலாம். அனுபவமின்மையை உணரலாம். சில காலம் மனவேதனைப்படலாம். ஆனால், அந்தத் தோல்வி உங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத்தரும்.

ஆனால், தோல்வி பயத்தால் தொழில் தொடங்கவே இல்லை என்றால்? வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் விட்ட உணர்வு நெஞ்சை அரிக்கும்.  அதற்காக யோசிக்காமல் எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும் என்பதல்ல. நன்றாக யோசித்து முடிவெடுத்த பிறகும், செயல்படாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இந்தத் தத்துவம் குடும்ப உறவுகளுக்கும் பொருந்தும். தந்தையிடம் மனம் திறந்து பேச நினைத்திருப்பீர்கள். ஆனால், தயக்கத்தால் பேசாமல் விட்டிருக்கலாம். தாயிடம் அன்பாக ஒரு வார்த்தை சொல்ல நினைத்திருப்பீர்கள். ஆனால், நாளை என்று தள்ளிப்போட்டிருக்கலாம்.

மனைவியிடம் அல்லது கணவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருந்திருக்கலாம். ஆனால், ஈகோவால் அமைதியாக இருந்திருக்கலாம். நண்பரிடம் ஏற்பட்ட தவறான புரிதலைச் சரிசெய்ய வாய்ப்பிருந்தும், தவிர்த்திருக்கலாம். காலம் கடந்த பிறகு, அந்த உறவைச் சரிசெய்யும் வாய்ப்பு இல்லாமல் போகலாம்.

எனவே, அன்பை வெளிப்படுத்துவதற்கும் மன்னிப்புக் கேட்பதற்கும் சரியான நேரம் கிடைக்கும் என்று காத்திருக்க வேண்டாம். வாய்ப்பு இருக்கும்போதே மனதில் இருப்பதைச் சொல்லிவிடுங்கள். யோசிக்காமல் செயல்படுவது அவசரம்; யோசித்த பிறகும் பயத்தால் செயல்படாமல் இருப்பது தயக்கம்.

எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பும், இதைச் செய்யாமல் விட்டால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வருந்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள். இது, தெளிவான பாதையைக் காட்டும்.

தோல்வி என்பது நீங்கள் முயற்சி செய்ததற்கான அடையாளமாக இருக்கலாம். முயற்சி செய்யவில்லை என்றால், திறமையை உலகம் அறியாமலே போய்விடும். எனவே, வருத்தமில்லாமல் வாழ்வதற்கான நல்ல செயல்களை இன்றே செய்யத் தொடங்குங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment