உதவி செய்ததை மறந்துவிடுங்கள்… உதவி பெற்றதை நினைவில் வையுங்கள்.

மந்திரச்சொல்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய சுயசரிதையில், அவரது சிந்தனையை மாற்றிய ஆசிரியர் என்று சிவசுப்பிரமணியத்தை குறிப்பிட்டுள்ளார். ஆசிரியரின் வேலை பாடம் எடுப்பதுதான். எல்லோருக்கும் ஒன்றாகவே சொல்லித்தருகிறார்கள். ஆனால், ஆசிரியரின் பேச்சு ஒரு சில மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி வாழ்க்கையை மாற்றுகிறது.

அந்த ஆசிரியருக்கு அப்துல் கலாம் பெயர் நினைவில் இல்லை. அப்துல்கலாமை உருவாக்கியதாக அவர் உரிமை எடுக்கவில்லை. அது, அவரது பெருந்தன்மை.  ஆனால், அப்துல் கலாம் அவரை மறக்கவில்லை என்பது நன்றியுணர்வு.

பொதுவாக உதவி செய்வது கடமையாக, மகிழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு பிரதிபலன் எதிர்பார்க்கும்போது, ஏமாற்றமாகிறது. ஒருவர் கஷ்டத்தில் இருந்தபோது பணம் கொடுக்கிறீர்கள். மனம் உடைந்திருந்தபோது ஆறுதல் சொல்கிறீர்கள். வாய்ப்பு கிடைக்காமல் தவித்தபோது வேலை வாங்கிக் கொடுக்கிறீர்கள். அவர் வாழ்க்கையில் முன்னேறுகிறார். ஆனால், அவர் உங்களை கண்டுகொள்ளவில்லை. இந்த நேரத்தில் அவர் முன்னேறியதற்காக மகிழுங்கள். நன்றி செலுத்தவில்லை என்ற ஏமாற்றமும், கோபவுணர்ச்சியும் செய்த உதவியை அசிங்கப்படுத்திவிடும்.

ஏனென்றால், உதவி என்பது ஒருவருடைய துயரத்தைக் குறைப்பதற்குச் செய்வதே தவிர, அவருடைய எதிர்காலத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு அல்ல. நல்ல மனதுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படும் உதவியினால் கிடைக்கும் மகிழ்ச்சியே பேரின்பம். அதைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. எனவே, வலக்கை கொடுப்பதை இடக்கை மறக்கட்டும்.

அதேநேரம், உதவியவர்களுக்கு நன்றியுணர்வுடன் இருப்பது நேர்மை. நன்றியுணர்வு என்பது கடந்த காலத்தை நினைத்துக்கொண்டு வாழ்வது அல்ல. கடந்த காலத்தில் கிடைத்த நன்மைகளை மறக்காமல் நிகழ்காலத்தில் நல்ல மனிதராக வாழ்வது, எதிர்காலத்தில் மேலும் நிறைய உதவிகள் பெற்றுத்தரும்.

உலகின் புகழ்பெற்ற முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட் வாழ்க்கையில் முக்கியமான வழிகாட்டிகளில் ஒருவர் பெஞ்சமின் கிரஹாம். முதலீட்டுத் துறையில் பஃபெட்டின் சிந்தனையை வடிவமைத்தவர்களில் கிரஹாமுக்கு முக்கியமான இடம் உண்டு. பஃபெட்டின் வெற்றிக்குக் கிடைத்த வழிகாட்டுதல், வாய்ப்புகள், அனுபவங்களுக்கு பெஞ்சமின் காரணம் என்று சொல்கிறார். இதுதான் நன்றியுணர்வின் அடிப்படை.

நாம் சாதனை படைக்கும்போது, “எனக்கு வழிகாட்டியவர்கள் இருந்தார்கள்” என்று நினைப்பதுதான் மனப்பக்குவம். வெற்றிக்குப் பிறகும் நமக்கு வழிகாட்டியவர்களை மதிப்பது, வெற்றியைக் குறைப்பதில்லை. அது, மனிதத் தன்மையை உயர்த்துகிறது.

நமக்கு உதவி செய்தவருக்குத் திருப்பிச் செய்ய முடியாத சூழ்நிலை வரலாம். அப்போது மனம் வருந்த வேண்டியதில்லை. அந்த உதவியின் மதிப்பை உணர்ந்து, வேறொருவருக்கு நன்மை செய்யலாம். நன்றியுணர்வு என்பது பழைய கணக்கைத் தீர்ப்பது மட்டுமல்ல. அடுத்த மனிதருக்கும் உதவி செய்வதை கடமையாக மாற்றுகிறது.

நீங்கள் செய்த நன்மையைப் பற்றிப் பெருமை பேசாதீர்கள். உங்களுக்கு நடந்த நன்மையைப் பற்றிப் பெருமையுடன் நினைத்துப் பாருங்கள். உதவி செய்ததை மறந்துவிடுங்கள். அது பெருந்தன்மை. உதவி பெற்றதை மறந்துவிடாதீர்கள், அது மனிதநேயம்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment