மந்திரச்சொல்
திறமைசாலி, கடினமான உழைப்பாளி, விசுவாசி என்றாலும், எதிர்த்துப் பேச மாட்டார் என்பது தெரிந்துவிட்டால், அவருக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்கப்படாது. ஒருவருக்கு நியாயமாக சேரவேண்டியதை கேட்கவும், பெறவும், பாதுகாக்கவும் தெரிந்தவருக்கு மட்டுமே எல்லாம் கிடைக்கும். இதுதான், அதிகாரத்தின் கோட்பாடு. கேட்டால் மட்டுமே கொடுக்கப்படும். தட்டினால் மட்டுமே திறக்கப்படும்.
அமெரிக்காவின் குடியுரிமை இயக்கத்தில் முக்கியமான இடம் பெற்றவர் ரோசா பார்க்ஸ். 1955ம் ஆண்டு, அமெரிக்காவின் அலபாமா மாநிலம் மான்ட்கோமெரியில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார் ரோசா பார்க்ஸ். ஒரு வெள்ளையருக்கு இருக்கையை விட்டுக்கொடுக்கும்படி கேட்டனர். அவர் அதற்கு உறுதியாக மறுத்தார். அதற்காக கைது செய்யப்பட்டார். நியாயத்துக்குப் போராடினார்.
ஒரு கட்டத்தில் அவரது கைது, அதிகாரத்துக்கு எதிரான போராட்டமாக மாறியது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நியாயம் வென்றது. அமெரிக்க வரலாற்றில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை. இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கும்போதுதான், அநீதியை மாற்றுவதற்கு வாய்ப்பு உருவாகிறது.
நம் வாழ்க்கையிலும் இந்த தத்துவத்தைப் பயன்படுத்தலாம். அலுவலகத்தில் அநியாயம் நடந்தால் ஆதாரத்துடன் பேசலாம். குடும்பத்தில் ஒருவரின் கருத்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் அதைக் கவனத்திற்குக் கொண்டுவரலாம். அநீதியை அடையாளம் காண்பதற்கும் அதை மாற்ற முயற்சிப்பதற்கும் துணிச்சல் மட்டுமே தேவை.
குடும்பத்தின் முக்கியமான முடிவுகள் ஒருவரால் மட்டுமே எடுக்கப்படுகின்றன. பணம் எப்படிச் செலவிட வேண்டும், பிள்ளைகளின் கல்வி குறித்து என்ன முடிவெடுக்க வேண்டும், எங்கு வசிக்க வேண்டும் என்பதையெல்லாம் ஒருவர் மட்டுமே தீர்மானிக்கிறார். இதற்கெல்லாம் மற்றவர் அமைதியாக இருந்தால், அந்த நிலை நாளடைவில் இயல்பாக மாறிவிடலாம். எனவே, ஆரம்பத்திலேயே, இருவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும்.
அலுவலகத்தில் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், அமைதியாக வருந்துவதைவிட, துணிச்சலுடன் கிடைக்க வேண்டியதைக் கேளுங்கள். ஊதிய உயர்வு, பதவி உயர்வுக்குத் தகுதியான பங்களிப்புகளை ஆதாரத்துடன் முன்வையுங்கள். அநீதி அல்லது துன்புறுத்தல் இருந்தால், நிறுவனத்தின் புகார் வழிமுறைகளைப் பயன்படுத்துங்கள். தட்டிக் கேட்பவருக்கு மட்டுமே அதிகாரத்தின் கதவுகள் திறக்கும்.
வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டும் என்றால், நேரம் வரட்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. அப்படி ஒரு எண்ணம் வந்ததுமே செயல்படத் தொடங்குங்கள். உங்கள் உழைப்பு கவனிக்கப்படாவிட்டால், அதைப் பற்றிப் பேசுங்கள். உங்கள் கருத்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், அதைத் தெளிவாக முன்வையுங்கள். உங்கள் எல்லைகள் மீறப்பட்டால், அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். ஒரு தெளிவான முடிவு மாற்றத்தின் தொடக்கமாக இருக்கலாம்.
நல்லவராக இருங்கள்; ஆனால் உங்கள் உரிமைகளை மறந்துவிடாதீர்கள். பொறுமையாக இருங்கள், ஆனால் அநீதியை நிரந்தரமாக ஏற்றுக்கொள்ளாதீர்கள். அன்பாக இருங்கள். ஆனால் உங்கள் எல்லைகளை இழந்துவிடாதீர்கள். தானாக அதிகாரம் எதையும் கொடுப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
