நீங்கள் இல்லாமலும் உலகம் இயங்கும்… எனவே உங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழுங்கள்

மந்திரச்சொல்

ஒவ்வொரு நபரும் தன்னை ஒரு முக்கியமான மனிதராக கருதுகிறார்கள். நாம் இல்லாவிட்டால் குடும்பம் என்னாகும்? நாம் இல்லையென்றால் அலுவலகத்தில் எதுவும் சரியாக நடக்காது. தன்னை மற்றவர்கள் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பது போன்ற சிந்தனைகளுடன் வாழ்கிறார்கள்.

ஆனால், கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் அலுவலகத்திற்குச் செல்லாவிட்டால், உங்கள் பணியைச் செய்ய வேறொருவர் வரக்கூடும். நீங்கள் ஒரு பொறுப்பிலிருந்து விலகினால், அதை ஏற்றுக்கொள்ள இன்னொருவர் கிடைக்கலாம். நீங்கள் இல்லாத ஒரு நாளிலும் உங்கள் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள். பேருந்துகள் ஓடும். பூக்கள் மலரும்.

குடும்பத்திற்காக உழைப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகச் சேமிப்பது நல்லது. உறவுகளைப் பாதுகாப்பது நல்லது. சமூகத்தில் மதிப்புடன் வாழ விரும்புவதும் இயல்பானதுதான். ஆனால், இங்கு யாரையும் முழுதாக திருப்திபடுத்த முடியாது என்பது முழு உண்மை.  

உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சி ஆளுமையும் தொழில்முனைவோருமான ஓப்ரா வின்ஃப்ரே முதலில் பிறருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். புகழ் அடைந்தார். ஆனால், பிறருடைய கட்டுப்பாடுகளை, எதிர்பார்ப்புகளை விரும்பவில்லை. எனவே, சொந்தத் தொலைக்காட்சி தொடங்கி, தனது நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்தார்.

மற்றவர்கள் உங்களுக்காக உருவாக்கிய வாழ்க்கையில் வெற்றி பெறுவதைவிட, உங்களுடைய திறமைக்கும் விருப்பத்திற்கும் பொருந்திய வாழ்க்கையை உருவாக்குவது முக்கியம் என்பதை உணர்த்துகிறார் ஓப்ரா. அவரைப் போன்று புகழ்பெற வேண்டும் என்பது இங்கே நோக்கமல்ல. உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அது ஒரு சிறிய தொழிலாக இருக்கலாம். நீங்கள் எழுத விரும்பும் புத்தகமாக இருக்கலாம். கற்றுக்கொள்ள விரும்பும் கலையாக இருக்கலாம். நீண்ட காலமாக ஒத்திவைத்த பயணமாக இருக்கலாம். அல்லது மனநிம்மதியுடன் வாழத் தொடங்குவதாக இருக்கலாம்.

வெற்றி என்பது உலகம் உங்களை எவ்வளவு பெரியவராகக் கருதுகிறது என்பதில் மட்டுமில்லை. நீங்கள் வாழும் வாழ்க்கையை எவ்வளவு மனநிறைவுடன் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதிலும் இருக்கிறது. நிறைய பேர் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழாமைக்குக் காரணம் அச்சம் அல்ல, ஒத்திவைக்கும் பழக்கம். பிறகு படிக்கலாம். பிறகு பயணம் செல்லலாம். பிறகு உடல்நலத்தில் கவனம் செலுத்தலாம். பிறகு எனக்குப் பிடித்த வேலையைச் செய்யலாம். பிள்ளைகள் வளர்ந்த பிறகு எனக்காக வாழலாம் என்று தள்ளிப்போடுவார்கள். ஆனால், அந்தப் பிறகு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது.

எனவே தினமும் அரை மணி நேரமாவது உங்களுக்குப் பிடித்த ஒன்றைச் செய்யுங்கள். ஒரு புத்தகத்தைப் படியுங்கள். புதிய திறமையைக் கற்றுக்கொள்ளுங்கள். இயற்கையோடு நேரம் செலவிடுங்கள்.  மகிழ்ச்சியான வாழ்க்கை எப்போதும் மிகப்பெரிய சாதனைகளிலிருந்து தொடங்குவதில்லை. சில நேரங்களில், நமக்காக ஒதுக்கும் சிறிய நேரத்திலிருந்தே தொடங்குகிறது.

எல்லோராலும் பாராட்டப்பட வேண்டும், எல்லோருடைய பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் மனநிம்மதியைத் தொலைத்துவிடாதீர்கள். நாளை என்ன நடக்கும் என்ற பயத்தில் இன்றைய மகிழ்ச்சியைத் தவறவிடாதீர்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment