தொடங்கிய காரியத்தை முடித்துவிடுங்கள்..!

மந்திரச்சொல்

வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய திறமையாளராக இருக்கத் தேவையில்லை. ஆரம்பித்ததை முடிக்கும் பழக்கமே நிறைய நேரங்களில் வெற்றிக்குப் போதுமானது.

வாழ்க்கையில் பலர் பெரிய கனவுகளோடு புதிய தொழில் தொடங்குகிறார்கள். புத்தகம் எழுதத் தொடங்குகிறார்கள். உடற்பயிற்சியை ஆரம்பிக்கிறார்கள். புதிய மொழியைக் கற்கிறார்கள். டைரி எழுதுகிறார்கள். ஆனால் சில நாட்களில் அந்த ஆர்வம் குறைந்துவிடுகிறது. சில தடைகள் அல்லது எதிர்பார்த்த பலன் அல்லது வரவேற்பு உடனடியாகக் கிடைக்கவில்லை என்றதும், ஆரம்பித்ததை அப்படியே விடுகிறார்கள். இதுதான் வெற்றியாளர், தோல்வியாளர் இடையிலான மிகப்பெரிய வேறுபாடு.

ஒரு செயலைத் தொடங்கும்போது மனதில் உற்சாகம் இருக்கும். புதிய வாய்ப்புகள் கண்களுக்குத் தெரியும். வெற்றியின் காட்சிகள் மனதில் ஓடும். ஆனால் பயணத்தைத் தொடங்கிய பிறகுதான் உண்மையான சவால்கள் வெளிப்படும். இந்த நிலையில் ஒரு பிரிவினர் சிரமம் வந்ததும் தொடங்கியதை நிறுத்துகிறார்கள். இன்னொரு பிரிவினர், சிரமம் வந்தாலும் தங்களுடைய இலக்கை நோக்கிப் பயணிக்கிறார்கள்.

இதற்காக ஆரம்பித்த ஒவ்வொரு செயலையும் எந்தச் சூழலிலும் முடித்தே ஆக வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒரு செயல் தீங்கு விளைவிக்கிறது அல்லது இலக்குக்குப் பொருந்தவில்லை என்றால் அதை மாற்றுவது புத்திசாலித்தனம். ஆனால் சிறிய சிரமங்கள், தற்காலிகச் சோர்வு, தோல்விக்குப் பயந்து தொடங்கியதைக் கைவிடுவது வளர்ச்சிக்கு ஆபத்து.

கார்ட்டூன் உலகில் புதிய கற்பனைகளை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு பயணித்தார் வால்ட் டிஸ்னி. அவரது அனிமேஷன் சினிமாக்கள் முதலில் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணித்து அனிமேஷன் திரைப்படங்களைப் புதிய உயரத்துக்குக் கொண்டுசென்றார்.

ஒரு பிரமாண்ட பொழுதுபோக்கு உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் 1955ம் ஆண்டு டிஸ்னிலேண்ட் திறக்கப்பட்டது. இதற்கு ஏகப்பட்ட இடைஞ்சல்கல், எதிர்ப்புகள், தடைகள் இருந்தன. ஆனாலும், முயற்சித்து வெற்றியைத் தொட்டார். டிஸ்னியின் வாழ்க்கை சொல்லும் முக்கியமான பாடம் இதுதான். பயணத்தில் சிக்கல், இடைஞ்சலுக்கு அடுத்து என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் அடுத்த அத்தியாயம் தொடங்குகிறது.

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எல்லோருக்கும் ஒரே அளவு திறமையும் வசதியும் இருப்பதில்லை. ஆனால் நம்மால் முடிந்த அளவில் தொடர்ந்து முயற்சி செய்வதற்கான பழக்கத்தை வளர்த்துக்கொள்ள முடியும். வேகமாக ஓட வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களை முந்த வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் எடுத்து வைத்த அடிகளை வீணாக்காமல் முன்னேற முயற்சி செய்யுங்கள்.

நூறு வேலைகளை ஆரம்பித்து ஒன்றையும் முடிக்காத வாழ்க்கையைவிட, பத்து வேலைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவு செய்யும் வாழ்க்கை அதிக திருப்தி தரும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment