மந்திரச்சொல்
முட்டாள் என்று மூன்றாம் நபர் சொல்வதை பொருட்படுத்த மாட்டோம். ஆனால் அதே வார்த்தையை நம் அன்புக்குரிய ஒருவர் சொன்னால், அதிர்ந்து போகிறோம். அந்த ஒரு வார்த்தை மனதை உடைத்துவிடுகிறது.
உண்மையில், அந்த வார்த்தைக்கு என்று தனியாக சிறப்பு சக்தி இல்லை. அந்த வார்த்தைகளுக்குப் பின்னே இருக்கும் உறவும், எதிர்பாராத அதிர்ச்சியும் அப்படிப்பட்ட சக்தி கொடுக்கிறது. அதனால்தான், நாம் அதிகமாக நேசிக்கும் ஒருவரின் ஒரு சிறிய புறக்கணிப்பைக்கூட மறக்க முடியாமல் தவிக்கிறோம்.
இதுதான் அன்பின் விசித்திரமான வலிமை. நம் அன்புக்குரியவர் சொல்லும் ஒரு கடுமையான வார்த்தை, வெறும் வார்த்தையாக மனதில் பதிவாகாது. அது நம்முடைய மதிப்பு, பாதுகாப்பு, உறவு, நம்பிக்கை ஆகியவற்றோடு இணைந்து விடுகிறது. அதனால் ஒருவருடைய கோபமான வார்த்தையைவிட, அவருடைய மௌனம் சில நேரங்களில் அதிகமாகக் காயப்படுத்துகிறது.
அன்பு இருக்கும் இடத்தில்தான் எதிர்பார்ப்பும் இருக்கும். அவர் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் நம்மை மதிக்க வேண்டும். நம்முடைய உணர்வுகளை கவனிக்க வேண்டும். கோபம் வந்தாலும் நம்மை காயப்படுத்தக்கூடாது என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் இருக்கும் இடத்தில் வலியும் உருவாகிறது.
இந்த அன்பு நம்மை பலவீனமாக்கவில்லை. அது நம்மை உணர்வுபூர்வமாக திறந்த மனிதராக மாற்றுகிறது. ஒருவரை உண்மையாக நேசிக்கும்போது, அவருடைய பாராட்டும் ஆழமாக மகிழ்விக்கிறது. அவருடைய புறக்கணிப்பும் ஆழமாக வலிக்கிறது. ஆனால் இங்கே ஒரு முக்கியமான உண்மை இருக்கிறது. அதாவது, நம்மை நேசிக்கும் ஒருவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் உண்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. கோபத்தில் சொல்லப்பட்ட வார்த்தை அவருடைய முழுமையான எண்ணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் மனிதர்கள் தங்களுடைய மன அழுத்தத்தை, கோபத்தை, பயத்தை, ஏமாற்றத்தை தவறான வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறார்கள்.
அதனால், அவர் என்ன சொன்னார்? என்பதோடு நிறுத்தாமல், அவர் ஏன் அப்படிச் சொன்னார்? என்பதையும் பார்க்க வேண்டும். எப்போதோ ஒரு முறை வேறு ஒருவர் மீதான கோபத்தை நம்மிடம் காட்டியிருக்கலாம். சூழல் அவரை நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கலாம். ஆனால், ஒருவர் தொடர்ந்து அவமதிப்பது, இழிவுபடுத்துவது, பயமுறுத்துவது, கட்டுப்படுத்துவது அல்லது மனரீதியாக துன்புறுத்துவதை நியாயப்படுத்தக்கூடாது.
ஏனென்றால், அன்பும் மரியாதையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். நாம் நேசிக்கும் மனிதர் ஒருபோதும் நம்மைக் காயப்படுத்த மாட்டார் என்பதல்ல. அப்படி காயப்படுத்தினாலும் தவறை உணர்ந்து வருந்தி, “நான் தவறாகப் பேசிவிட்டேன், மன்னித்துவிடு.” என்று சொல்லும் மனமே அன்பின் அடையாளம்.
சில வார்த்தைகள் காதில் விழுகின்றன. சில வார்த்தைகள் மூளையில் விழுகின்றன. ஆனால் சில வார்த்தைகள் மட்டும் இதயத்தில் விழுகின்றன. அதனால் அன்புக்குரியவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். நாம் மறந்துவிடும் ஒரு கோப வார்த்தையை, அவர்கள் பல ஆண்டுகள் நினைவில் வைத்திருக்கலாம்.
நாம் நேசிப்பவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருப்பது மட்டும் அன்பல்ல. அவர்களுடைய மனம் நம்மிடம் பாதுகாப்பாக இருக்கிறது என்று அவர்கள் உணரச் செய்வதே உண்மையான அன்பு.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
