மந்திரச்சொல்
ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து எலக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்குகிறீர்கள். இந்த பொருளில் எந்த பிரச்னையும் வராது, வாழ்நாள் கேரண்டி என்று விற்பனையாளர் சொல்வதை நம்புகிறீர்கள். ஏதோ ஒரு காரணத்தால் அந்த பொருள் வேலை செய்யாமல் போகிறது. அந்த நிறுவனத்துக்கு கொண்டுசெல்கிறீர்கள். ஆனால், நிறுவனம் பொறுப்பு ஏற்காமல் தட்டிக் கழிக்கிறார்கள். உங்களால் எதுவும் செய்ய முடியாமல் முழு நஷ்டத்தையும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
அப்படித்தான் ஜோதிடமும் உறுதி கொடுக்கிறது. நட்சத்திரம், ராசி, கணம், யோனி, ரஜ்ஜு, நாடி போன்ற பல அம்சங்களை வைத்து மணமக்களின் பொருத்தம் பார்க்கப்படுகிறது. எட்டு பொருத்தங்களுக்கு மேல் சரியாக இருந்தால், அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கணக்கு போடுகிறது.
ஜாதகம் பொருந்தினால் மட்டுமே நிறைய திருமணங்கள் நடக்கின்றன. ஆனால், அந்த தம்பதியரின் திருமண வாழ்க்கையில் சிக்கல், குளறுபடி, சண்டை வரும்போது, அதற்கு ஜோதிடம் பொறுப்பேற்பதில்லை. ஏதேனும் காரணம் சொல்லி சமாளிக்கிறது.
ஏனென்றால், தம்பதியர் உறவு மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஜாதகப் பொருத்தம் தேவையில்லை, அவர்களுடைய மனம் ஒத்துப்போக வேண்டும். அதாவது, அன்பு, பணம், கோபம், குழந்தை வளர்ப்பு, மரியாதை, மதிப்பு, சந்தேகம், உறவுகள், எதிர்பார்ப்புகள், விட்டுக்கொடுத்தல் போன்றவற்றில் மட்டுமே பொருத்தம் தேவைப்படுகிறது. பாரம்பரிய ஜோதிடப் பொருத்தங்களுக்கும் திருமணம் வெற்றியடைவதற்கும் நேரடியான அறிவியல் தொடர்பு இல்லை என உறவுநிலை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
அதனாலே பத்துக்குப் பத்து பொருத்தம் என்று ஜோதிடர் உறுதியளித்த திருமணங்களும் விவாகரத்தில் முடிகிறது. ஜோதிட ரீதியாக பொருத்தமான தம்பதிகளும் விருப்பமே இல்லாமல் சேர்ந்து வாழ்கிறார்கள். திருமண வெற்றிக்கும் ஜாதகப் பொருத்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறது உளவியல்.
ஜாதகம் பார்ப்பது ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை. ஆனால், திருமணம் என்பது இரண்டு பேரின் வாழ்க்கை. எனவே, ஜாதகத்தை வைத்து இரண்டு பேரை ஒன்று சேர்ப்பதும், பிரிப்பதும் நியாயம் இல்லை. ஜாதகமே பார்க்காமல் சந்தோஷமாக வாழும் தம்பதியர் உண்டு. ஜாதகம் பார்த்து நன்றாக வாழ்பவர்களும் உண்டு. ஜாதகம் பார்க்காமல் சண்டை போடுபவர்கள் உண்டு. பத்துப் பொருத்தம் இருந்தும் சண்டை போடுபவர்களும் உண்டு. இதெல்லாம் தெரிந்தும் ஜாதகம் பார்த்தே திருமணம் முடிப்பது என்று பலரும் உறுதியாக இருப்பதுதான் வேடிக்கை.
கிரகங்கள் பாடப்புத்தகத்தில் மட்டும் இருந்தால் போதும். மனித வாழ்க்கையில் வேண்டாம். திருமணத்திற்கு நட்சத்திரம், ராசிப் பொருத்தம் பார்ப்பதைவிட, மனப் பொருத்தம் பாருங்கள். மணமக்கள் இருவரும் பேசிப் பழகி குணத்தில் பொருத்தம் பார்க்கட்டும். இதுதான் திருமணத்திற்குப் பிறகான வெற்றிக்கு நல்லது.
திருமணம் என்பது இரண்டு நட்சத்திரங்களின் சங்கமம் அல்ல. அது இரண்டு மனித மனங்களின் புரிதல். இருவரும் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்பதற்கான உறுதி. ஜாதகக் கட்டங்களை விட, மனிதர்களின் மனக்கட்டமைப்பும் பரஸ்பர மரியாதையுமே குடும்ப வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
