எல்லாவற்றையும் புரிந்துகொள்ள அவசியமில்லை. சிலவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வது போதும்.

மந்திரச்சொல்.

முக்கியமான வேலையாக வெளியே கிளம்புகிறீர்கள். திடீரென பயணத்தை நிறுத்தும் அளவுக்கு பெரிய மழை பெய்யத் தொடங்குகிறது. ஏன் இப்போது மழை பெய்கிறது, என் பயணத்தை இயற்கை தடுக்கிறதா என்று சிந்திப்பது தேவையில்லாத வேலை.  

முற்றிய நிலையில் ஒரு நோய் சிகிச்சைக்கு மருத்துவமனை செல்பவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புகிறார். அதேநோய் ஆரம்பநிலையில் சிகிச்சைக்குச் செல்பவர் மரணமடையலாம். இதற்கு தெளிவான விடை கிடைக்காது.

நாலைந்து வருடங்கள் காதலித்திருப்பார்கள். ஏதேனும் ஒரு வார்த்தையால் சண்டை வந்து உறவு உடைந்து பிரிந்து போகலாம். எல்லா இடங்களிலும் ஜோராக நடக்கும் ஒரு தொழிலை ஒரு நல்ல இடத்தில் சிறப்பாகத் தொடங்கினாலும், அது வரவேற்பு கிடைக்காமல் நஷ்டமாகலாம்.

போட்டிகளில் அட்டகாசமாக பேட்டிங் செய்யும் ஒரு வீரர், அணி வெற்றி பெறுவதற்கு அவசியமான ஒரு நேரத்தில் டக் அவுட் ஆகிவிடலாம். இதுபோன்று வாழ்க்கையில் நிறைய நிறைய நடந்துகொண்டே இருக்கும். இவற்றுக்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்துகொண்டே இருந்தால், தெளிவு கிடைக்காது. நடந்தது நடந்துவிட்டது, அடுத்து ஆகவேண்டியதைப் பார்க்கலாம் என்பதே சரியான சிந்தனை. சில நேரங்களில் பிரிவு, நஷ்டம், தோல்வி போன்றவைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது மனதிற்கு நிம்மதி தரும்.

அதேபோல், அவர் ஏன் இப்படிச் செய்தார்?, அவர் ஏன் என்னைப் புரிந்துகொள்ளவில்லை?, இது ஏன் எனக்கு நடந்தது? என்பது போன்ற எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைக்காது. நாமாக ஒரு பதில் யூகிப்பது மேலும் குழப்பத்தையே உருவாக்கும்.

நடந்த ஒரு விஷயத்தின் காரணத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது அறிவின் அடையாளம். அதேநேரம், ஒவ்வொரு விஷயத்திற்கும் இதுதான் காரணம் என்று கண்டுபிடிக்க தொடர்ந்து போராடுவதும், வேறு யாரையாவது குற்றம் சாட்டுவதும் மன அழுத்தமாக மாறிவிடும்.

ஒருவர் நம்மை விட்டு விலகிவிட்டார் என்றால், அவர் ஏன் விலகினார் என்பதை நாம் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். உண்மை என்னவென்றால், சிலர் விலகுவதற்கு காலமும், சூழலும் காரணமாக இருக்கலாம். திட்டமிட்டு அல்லது திட்டமிடாலும் நடக்கலாம்.

கடந்த காலத்தை மாற்ற முடியாது. மற்றவர்களின் மனதை கட்டுப்படுத்த முடியாது. வயதைத் தடுக்க முடியாது. சில இழப்புகளைத் திரும்பப் பெற முடியாது. இப்படிப்பட்ட விஷயங்களுடன் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பது, நம்முடைய ஆற்றலை இழக்கச் செய்துவிடும். இவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது பிரச்னையைக் கண்டு அஞ்சுவது அல்ல. பிரச்சினையுடன் தேவையற்ற போராட்டத்தை நிறுத்துவதுதான்.

சில உறவுகளுக்கு விளக்கம் கிடைக்காது. சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. சில அநீதிகளுக்கு நியாயம் கிடைக்காது. சில மனிதர்களை நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. அப்படிப்பட்ட நேரத்தில், பதில் தெரியவில்லை; இருந்தாலும் நான் முன்னேறப் போகிறேன் என்று பயணத்தைத் தொடர்வதே மன வலிமை.

எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும் மனிதன் கடந்த காலத்தில் வாழ்கிறான். சிலவற்றை ஏற்றுக்கொள்பவர் நிகழ்காலத்தில் வாழத் தொடங்குகிறார். ஒன்றை புரிந்துகொள்வதற்கு அறிவு தேவை என்பதுடன் எவற்றை எல்லாம் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் விட வேண்டும் என்பதற்கு, கூடுதல் அறிவு தேவை.

அதனால், வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. சில நேரங்களில் அது முடியவே முடியாது. எனவே, அர்த்தமுள்ளதாக வாழத் தெரிந்தால் போதும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment