மந்திரச்சொல்
நமக்கு கீழே இருப்பவரை கிண்டல், கேலி செய்து அவமானப்படுத்துவது, வேண்டுமென்றே புண்படுத்துவது, அவரது பலவீனத்தை பிறர் முன் குத்திக்காட்டுவது சில நொடிகள் இன்பமும், அதிகாரப் போதையும் கொடுக்கலாம். ஆனால் உளவியல் ரீதியில் அது பழிவாங்கும் சுழற்சியை உருவாக்குகிறது.
அவன் என்னை காயப்படுத்தினான், அதனால் நானும் அவனைக் காயப்படுத்துவேன் என்று ஒருவர் எண்ணத் தொடங்கும்போது போட்டியாக மாறுகிறது. நேருக்கு நேராக இல்லையென்றாலும், வெவ்வேறு வழிகளில் ஒருவரையொருவர் காயப்படுத்தத் தொடங்குகிறார்கள்.
உண்மையான மனவலிமை என்பது பிறரைத் தோற்கடிப்பது அல்ல.
பிறர் நம்மை காயப்படுத்தியபோதும், அதே வலியை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பது.
அதேநேரம், “நான் நல்லவன்; அதனால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியும்” என்பதும் ஆரோக்கியமான உறவு கிடையாது. ஒருவர் தொடர்ந்து அவமதிக்கிறார், கட்டுப்படுத்துகிறார், மிரட்டுகிறார், உங்கள் சுயமரியாதையை சீண்டுகிறார் என்றால், அதை அமைதியாக சகிப்பது பொறுமை அல்ல. அது எல்லைகள் இல்லாத நிலை.
அப்படிப்பட்ட தருணங்களில், “இந்த செயலுக்காக உங்களை வெறுக்கவில்லை. ஆனால் நீங்கள் என்னை இப்படி தொடர்ந்து நடத்த நான் அனுமதிக்க மாட்டேன்.” என்று நிதானமாக கூறலாம். இது கோபம் அல்ல, சுயமரியாதை.
நெல்சன் மண்டேலா பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவருக்கு எதிராக நடந்த அநீதிக்கு பதிலாக அதே வெறுப்பையும் வன்முறையையும் திருப்பிக் கொடுப்பது ஒரு வழியாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் தனது வாழ்க்கையை பழிவாங்குதலைச் சுற்றி அமைக்கவில்லை. அதே நேரத்தில், அநீதியை ஏற்றுக்கொண்டு அமைதியாக வாழவும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை.
இதில் ஒரு ஆழமான உளவியல் பாடம் இருக்கிறது. மன்னிப்பது என்பது நடந்த தவறை சரி என்று சொல்வது அல்ல. எல்லைகள் நிர்ணயிப்பது என்பது வெறுப்பை வளர்ப்பது அல்ல. ஒருவரை மன்னித்துவிட்டு, அவரிடமிருந்து தூரமாக விலகலாம் .ஒருவரை நேசித்துவிட்டு, அவருடைய தவறான நடத்தையை ஏற்காமல் இருக்கலாம்.
அதனால் வாழ்க்கையில் இரண்டு விதிகளை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். முதலாவது, என் வார்த்தைகளால் யார் மனதையும் காயப்படுத்த மாட்டேன். அடுத்தது பிறரது வார்த்தை அல்லது செயல் என்னை காயப்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பது முதிர்ச்சியான மன நிலை.
முதல் விதி மனிதநேயம். இரண்டாவது விதி சுயமரியாதை. இரண்டும் மனிதரின் நிம்மதிக்குத் தேவை.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
