மந்திரச்சொல்
நல்ல பெற்றோர், அன்பான மனைவி, புரிந்துகொண்டு நடக்கும் பிள்ளைகள், இணக்கமான பணியாளர்கள், எதிர்பார்ப்பில்லாத நண்பர்களிடமே மகிழ்ச்சியின் சாவி இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். இவர்கள் நம்முடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடக்கவில்லை என்றவுடன் கோபம் வேதனை உருவாகிறது.
நாம் நிறைய அன்பு கொடுக்கிறோம். கேட்ட நேரமெல்லாம் உதவி செய்கிறோம். எல்லோருக்கும் மரியாதை கொடுக்கிறோம். இவை எல்லாமே நாம் கொடுக்கும் அளவு திரும்பக் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த எதிர்பார்ப்பு நியாயமான ஒன்று என்றும் நம்புகிறோம். அப்படி கிடைக்கவில்லை என்றால் மனம் காயப்படத் தொடங்குகிறது.
இங்கே ஒரு உண்மையை மறந்துவிடுகிறோம்.
நாம் அன்பு கொடுப்பது நிஜம். ஆனால், நாம் கொடுக்கும் அன்பு போதவில்லை என்று நினைக்கலாம். நாம் செய்த உதவி சாதாரணமாகத் தோன்றலாம். நாம் கொடுத்த மரியாதை அவர்களுக்குத் தேவைப்படாத ஒன்றாக இருக்கலாம். இப்படிப்பட்ட நிலையில், எதிர்பார்ப்பு எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது நாம் மட்டும்தான். மற்றவருக்கு அப்படி ஒரு ஒப்பந்தம் இருப்பதே தெரியாது.
அதனால், ஒவ்வொருவரும் அவரவர் தேவை, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள் என்ற உண்மை புரிந்துவிட்டால், நம்மை எதுவும் காயப்படுத்துவதில்லை. யாராலும் நமக்கு வேதனை கிடைக்காது. எனவே, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். உதவி செய்வதற்கு விரும்புங்கள். இதுவே, உண்மையான சுதந்திரம். எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன். நீ என்ன செய்ய வேண்டும் என்பதை நீயே முடிவு செய்துகொள் என்பது மகிழ்ச்சிக்கான வாசல்.
யாரையும் எதற்காகவும் எதிர்பார்க்காமல் வாழக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை என்பது அமைதியான நதியாக மகிழ்ச்சி தரும். ஒருவர் நன்றி சொன்னால் மகிழ்ச்சி வரும். நன்றி சொல்லவில்லை என்றாலும் ஏமாற்றம் வராது. ஒருவர் நம்மை அழைத்தால் மகிழ்ச்சி. அப்படி அழைக்கவில்லை என்றாலும் பிரச்னையில்லை. ஒருவர் நம்மை பாராட்டினால் மகிழ்ச்சி. பாராட்டவில்லை என்றாலும் நம்முடைய மதிப்பு குறையாது.
ஒருவரை மகிழ்விப்பது மற்றவர்களின் கடமை அல்ல என்பதை புரிந்துகொள்வதே தெளிவு. அவரவர் மகிழ்ச்சி அவரவர்களே பொறுப்பு. இதை உணர்ந்துகொண்டால், பிறர் மீதான எதிர்பார்ப்பு குறையும். ஏமாற்றம் குறையும். மனக்கசப்பு குறையும். இதுதான் மன அமைதியின் தொடக்கம்.
நான் செய்வது என் குணம். அவர் செய்வது அவரது குணம். அவரது செயல் என் மன அமைதியை நிர்ணயிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைக்கு ஒருவர் வந்துவிட்டால், மகிழ்ச்சிக்காக மற்றவர்களைத் தேட வேண்டியதில்லை. தன்னிடமே மகிழ்ச்சியை உருவாக்கக் கற்றுக்கொள்ள முடியும்.
எதிர்பார்ப்பு குறையும் இடத்தில் ஏமாற்றம் குறைகிறது. ஏமாற்றம் குறையும் இடத்தில் மன அமைதி அதிகரிக்கிறது. மன அமைதி அதிகரிக்கும் இடத்தில்தான் உண்மையான மகிழ்ச்சி பிறக்கிறது.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
