மந்திரச்சொல்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முதுமை வருகிறது. அந்த முதுமையை எப்படி வரவேற்கிறீர்கள் என்பதில்தான் மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது. கவலைப்படுபவர்கள் மேலும் முதுமை அடைகிறார்கள். கண்டுகொள்ளாதவர்கள் இளமைக்கான மிடுக்குடனே வாழ்கிறார்கள்.
முதுமையில் இளமையைப் போலத் தோன்ற விரும்புவதில் அர்த்தமே இல்லை. மனிதருக்கு 20 வயதில் இருக்கும் உடல் வலிமை, 60 வயதில் இருக்காது என்பதுதான் இயற்கை. இந்த உடல் மாற்றம் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல. அதேநேரம், இளமையில் புரியாத வாழ்க்கையின் அர்த்தங்கள் தெரியும் என்பதால் உலகை புதிதாகப் பார்க்க முடியும்.
குழந்தை போன்று முதுமையிலும் பொறுப்புகள் இருப்பதில்லை. மனைவிக்காக, பிள்ளைக்காக என்று ஓடாமல் உங்களுக்காக வாழமுடியும். முதுமையில் இளைஞனைப் போல் செயல்பட முடியாமல் போகலாம். ஆனால் சில விஷயங்களில் இளைஞனை விட சிறப்பாக சிந்திக்க முடியும். அதனால் முதுமையில் வெற்றியும் மகிழ்ச்சியும் எளிதில் கிடைக்கும்.
வயது சிலவற்றை எடுத்துக்கொள்கிறது. அதே நேரத்தில், பலவற்றைத் தருகிறது. இளமை வேகத்தைக் கொடுக்கிறது. முதுமை விவேகத்தைக் கொடுக்கிறது. இளமை வாய்ப்புகளைத் தேடுகிறது. வயது அனுபவத்திலிருந்து வாய்ப்புகளை உருவாக்குகிறது.
உண்மையில் மனிதனை முதுமையாக்குவது வயது அல்ல, உடம்பும் அல்ல. அவரது மனம்தான். எனக்கு வயதாகிவிட்டது. இனிமேல் என்னால் எதுவும் முடியாது என்ற எண்ணம் தினமும் மனதில் ஓடத் தொடங்கினால், உடல் வேகமாக சோர்ந்துவிடும். அதற்குப் பதிலாக, “என்னால் இப்போது என்ன செய்ய முடியும்?” என்று கேட்கத் தொடங்கினால், வாழ்க்கையின் புதிய கதவுகள் திறக்கத் தொடங்கும்.
அதனால் வயதானவர்கள் ஆசைகளைக் குறைக்கத் தேவையில்லை. தேவையற்ற கவலைகளைக் குறைத்தால் போதும். இளமையில் நிறைய விஷயங்களுக்காகக் கவலைப்படுகிறோம். யார் என்ன சொல்வார்கள்? என்ன நினைப்பார்கள்? நான் மற்றவர்களைப் போல இருக்கிறேனா? என்றெல்லாம் கவலை இருக்கும்.
வயது அதிகரிக்கும்போது ஒரு மிகப்பெரிய உண்மை புரிகிறது. அதாவது, நாம் மற்றவர் பற்றி யோசித்த கவலைகளுக்கு உண்மையில் எந்த அர்த்தமும் இல்லை. தேவையில்லாமல் மனதில் எதையும் சுமந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்பது தெரிகிறது.
அதனால் சில மனிதர்களை மன்னித்துவிடுங்கள். எல்லோரிடமும் அன்பாகப் பேசுங்கள். நீண்ட நாட்களாக பேசாத நண்பரைத் தொடர்பு கொள்ளுங்கள். குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசுங்கள். மனைவியுடன் ஒரு தேநீர் குடியுங்கள். ஒரு மரம் நடுங்கள். ஒரு புத்தகம் படியுங்கள். உங்களுக்குத் தெரிந்ததை இன்னொருவருக்குக் கற்றுக்கொடுங்கள். உதவி தேவைப்படுகிற ஒருவருக்கு உதவுங்கள். உங்களை மகிழ்ச்சியாக்கும் ஒரு சிறிய விஷயத்தைச் செய்யுங்கள்.
வாழ்க்கையின் நீளம் நம் கையில் இல்லை. ஆனால் அதன் ஆழம் நம் கையில் இருக்கிறது. எனவே, முதுமையைக் கொண்டாட வேண்டும். வயதாகிவிட்டது என்று வருந்துவதற்குப் பதிலாக, நான் இத்தனை ஆண்டுகளை ஜெயித்திருக்கிறேன் என்று பெருமைப்படுங்கள். வாழ்க்கையில் விழுந்தும் எழுந்தும், இழந்தும் பெற்றும், அழுதும் சிரித்தும், மனிதர்களை நேசித்தும், சிலரால் காயப்பட்டும் இன்றுவரை வாழ்ந்திருக்கிறீர்கள். அதுவே சாதனை என்று மகிழ்ச்சி அடையுங்கள்.
உடலுக்கு வயதாகலாம். ஆனால் அன்புக்கு வயதாகாது. கனவுக்கு வயதாகாது. நம்பிக்கைக்கு வயதாகாது. கற்றுக்கொள்ளும் ஆர்வத்துக்கு வயதாகாது. மற்றவர்களுக்கு உதவும் மனசுக்கு வயதாகாது. அதனால் முடிவு பற்றி கவலைப்படாதீர்கள். வாழும் நாட்களுக்கு அர்த்தம் கொடுத்து மகிழ்ச்சி அடையுங்கள். கவலையைத் தூக்கி எறிவதுதான் வயதை வெல்லும் வழி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
