சொத்து நிரந்தரமான நண்பன் இல்லை. ஆனால் நண்பர்கள் நிரந்தரமான சொத்து.

மந்திரச்சொல்

மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் இரண்டு விஷயங்களைத் தேடியே ஓடுகிறார்கள். ஒன்று பணம் இரண்டாவது மனிதர்கள். பணம் இருக்கும் மனிதர்களை விட, அதிக நண்பர்கள் இருக்கும் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

பணத்தால் வீடு வாங்கலாம். நிலம் வாங்கலாம். தொழில் தொடங்கலாம். வங்கியில் பணம் சேர்க்கலாம். ஆனால் இவற்றில் எதுவும் நம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளாது. சொத்து நம்மிடம் இருக்கும் வரை அது நமக்குச் சொந்தம். சூழ்நிலை மாறினால் அது விற்கப்படலாம். மதிப்பு குறையலாம். சட்டம், பொருளாதாரம், குடும்பப் பிரச்சினை, உடல்நிலையால் உரிமை மாற்றிவிடலாம்.

ஆனால், வெற்றியில் மட்டுமின்றி தோல்வியிலும் நண்பர்கள் அருகில் இருக்கிறார்கள். நிறைய நிறைய பேச முடியும். மனதில் இருப்பதை பகிர முடியும். அதனாலே பணத்தை விட மனிதர்களையே அதிகம் பேர் தேடுகிறார்கள். மனிதன் தனியாக வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட உயிரினம் அல்ல. ஒவ்வொரு மனிதருக்கும், தன்னைப் புரிந்துகொள்ள ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு தேவைப்படுகிறது. அதற்கு உறவுகளை விட நட்பு முழுமையாக கை கொடுக்கிறது.

நல்ல நண்பர் நம்மிடம் பணத்தைச் சேர்ப்பதில்லை. நண்பர் நம்பிக்கை தருகிறார். இனிப்பான நினைவுகள் தருகிறார். மன அமைதிக்கு காரணமாக இருக்கிறார்.
வாழ்க்கையின் அர்த்தமாக இருக்கிறார். நாம் கீழே விழும்போது தூக்கி நிறுத்தும் ஒருவர் இருந்தால், வாழ்க்கையின் சுமை பாதியாகிவிடுகிறது.

நாம் வெற்றி பெற்றபோது பொறாமைப்படாமல் மகிழக்கூடிய ஒருவர் இருந்தால், வெற்றியின் சந்தோஷம் இரட்டிப்பாகிறது. நாம் தவறு செய்தபோது ;இங்கே நீ தவறு செய்கிறாய்’ என்று சொல்லக்கூடிய ஒருவர் இருந்தால், அந்த நட்பு மிகப்பெரிய சொத்து.

அதேநேரம், நம்முடன் பள்ளியில் படித்தவர், அலுவலகத்தில் வேலை செய்தவர், தொழிலில் சேர்ந்தவர் என அனைவரும் வாழ்நாள் நண்பர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. வாழ்க்கை மாறும்போது நட்புகளும் மாறும். இதில் எந்த தவறும் இல்லை.

சிலர் நம் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காக மட்டுமே வருகிறார்கள். அதனால் நட்பை எண்ணிக்கையால் அளக்கக் கூடாது; அதன் ஆழத்தால் அளக்க வேண்டும். நூறு நண்பர்கள் இருப்பதைவிட, “என்ன நடந்தாலும் இந்த மனிதரிடம் நான் உண்மையாகப் பேச முடியும்” என்று சொல்லக்கூடிய இரண்டு பேர் இருப்பது பெரிய செல்வம்.

ஒரு மனிதன் வாழ்க்கையின் முடிவில் தன் வங்கிக் கணக்கைப் பார்த்து மட்டும் திருப்தி அடைவதில்லை. நினைவுகளை திரும்பிப்பார்க்கிறார். யாருடன் சிரித்தேன்? யாருடன் பயணித்தேன்? யார் என்னுடைய கஷ்டத்தைப் புரிந்துகொண்டார் என்று சிந்திக்கும் போது மகிழ்ச்சி தருகிறார்.

சொத்து நம்மிடம் இருக்கும் வரை நம்முடையது. நல்ல நண்பர் நம் வாழ்க்கையில் இருக்கும் வரை மட்டுமல்ல, அவர் விட்டுச் சென்ற நினைவுகளிலும் நம்முடன் இருப்பவர். அதனால் செல்வந்தர் என்பவர் அதிக சொத்து வைத்திருப்பவர் அல்ல.  தன் உண்மையான மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள சில உண்மையான மனிதர்களை வைத்திருப்பவர்தான்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

மந்திரச்சொல்

மூளையின் முக்கியமான வேலை உடலையும் மனதையும் காப்பாற்றுவதுதான்.  அதனால் எந்த ஒரு ஆபத்தையும் முன்கூட்டி கணித்து, நம்மைப் பாதுகாக்க முயற்சிக்கிறது.

எதிர்காலத்துக்குத் தேவையான முன்னெச்சரிக்கை என்பதற்கும், தேவையற்ற கவலைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை மூளை உணர்த்துவதில்லை. அதாவது, எதிர்காலத்துக்குத் தயாராவது புத்திசாலித்தனம். நடக்காத ஒன்றுக்காக மீண்டும் மீண்டும் கவலைப்படுவது மூடத்தனம்.

நாளைக்கான திட்டம் தேவை. எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கலாம். ஆனால் நாளைய பயத்தை இன்றே அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. இன்று செய்ய வேண்டியதை இன்று செய்யுங்கள். நாளை செய்ய வேண்டியதை நாளை செய்யுங்கள்.

நாளை இன்னும் பிறக்கவில்லை என்பதால் அந்த கவலையை இன்று பிறக்க விடாதீர்கள். இதற்கு ஒரு குட்டிக் கதை.

நான்கு பேர் இண்டர்வியூ வந்தனர். அவர்கள் நால்வருக்கும் பொதுவான கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் ஒரு தனி அறையில் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். திடீரென்று மேல்கூரை இடிந்து விழப்போகிறது. வாசல் பக்கம் தீ எரிகிறது. ஜன்னல் பக்கம் ஒரு பாம்பு நிற்கிறது. பூகம்பத்தில் திடீரென கட்டடம் ஆடத் தொடங்குகிறது. இந்த சூழலில் என்ன செய்வீர்கள்.

ஒருவர் தீயைத் தாண்டிச் செல்வேன் என்கிறார். ஒருவர் பாம்பை தீயில் தள்ளிவிட்டு ஜன்னல் வழியே வெளியேறுவேன் என்கிறார். இன்னொருவர் டேபிளுக்கு அடியில் ஒளிந்துகொள்வேன் என்கிறார். நான்காவது நபர் அமைதியாக, ‘என் கற்பனைய நிறுத்திக் கொல்வேன்’ என்று சொன்னார்.

இதுதான் சரியான வழி. தேவையற்ற கற்பனைகளை நிறுத்துவதுதான் நாளைய தினத்தை எதிர்கொள்வதற்கு சரியான வழி. நம் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் நிஜமாக நடப்பதற்கு முன்பே, நம் மனதில் நடந்து முடிந்துவிடுகின்றன.

நாளை அந்தப் பிரச்சினை வந்தால் என்ன செய்வது?, அப்படி நடந்தால் என்ன செய்ய முடியும். இப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது என்று கற்பனைக் குதிரை ஓடிக்கொண்டே இருக்கும். நிஜ வாழ்க்கையில் நாளை எனப்படும் கதவு திறக்கவே இல்லை. ஆனால், நம் கற்பனைக்குள் அந்தக் கதவுக்குப் பின்னால் ஆயிரம் பிரச்சினைகளை உருவாக்குகிறோம். கற்பனையை நிறுத்துங்கள். இன்றைய தினத்தில் வாழுங்கள். அதுவே, நாளைய திட்டம் தீட்டுவதற்கு சிறப்பான வழி.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment