மந்திரச்சொல்
வாழ்க்கையில் சில நேரங்களில் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்காது. முயற்சி செய்தும் பலன் கிடைக்காது. நம்பிய ஒருவர் ஏமாற்றலாம். எதிர்பார்த்த வாய்ப்பு கைவிட்டுப் போகலாம். பணம், உறவு, வேலை உடல் நலத்தால் மனம் சோர்ந்து போகும் தருணங்கள் எல்லோருக்கும் வரும்.
அந்த நேரத்தில் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு, எப்படியாவது உடனடியாக பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று பதற்றத்துடன் தொடர்ந்து செயல்படுகிறார்கள். இது, ஒரு சிக்கலான நேரம் என்பதை உணர்வது அவசியம்.
ஏனென்றால், சோர்ந்த மனம் சரியான முடிவை எடுக்காது. மன அழுத்தம் அதிகரிக்கும்போது நமது கவனமும், முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்படலாம். ஒரே பிரச்சினையை மீண்டும் மீண்டும் நினைப்பது, அதற்குத் தீர்வு காண்பதைவிட அந்த எண்ணத்தை மேலும் பெரிதாக்கும். அதனால் பிரச்சினையிலிருந்து முழுமையாக கொஞ்சநேரம் விலகுவது அவசியம்.
தோல்வியடைந்த ஒரு நாளை வைத்து முழு வாழ்க்கையையும் மதிப்பிட முடியாது. இன்று வேலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கை முடிந்துவிட்டதில்லை. இன்று ஒருவர் நம்மைப் புரிந்துகொள்ளவில்லை என்பதால் அந்த உறவு என்றென்றும் முடிந்துவிட்டதில்லை. இன்று பணநெருக்கடி இருப்பதால் நாளையும் அதே நிலைதான் இருக்கும் என்று அர்த்தமில்லை. இன்று ஒரு மோசமான நாள் மட்டுமே. அது மோசமான வாழ்க்கை அல்ல.
சிக்கலான நேரங்களில் ஓய்வும், தூக்கமும் நல்ல தேர்வாக இருக்கும். இந்த ஓய்வு மனதின் உணர்ச்சி அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பிரச்சினையை ஓய்வும், தூக்கமும் தீர்ப்பதில்லை. ஆனால் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய மன ஆற்றலை மீட்டெடுக்கிறது. அதனால், இன்றைக்கு இதைத் தீர்க்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. நாளை மீண்டும் பார்க்கலாம் என்று நமக்கே அனுமதி கொடுப்பது பல நேரங்களில் மிகவும் ஆரோக்கியமான அணுகுமுறை.
இரண்டாம் உலகப்போரின் மிகக் கடினமான காலத்தில் பிரிட்டனை வழிநடத்திய வின்ஸ்டன் சர்ச்சிலின் வாழ்க்கையிலும் கடுமையான அழுத்தங்கள் இருந்தன. நீண்ட நேரப் பணிகளுக்கு இடையே ஓய்வு, தூக்கம், சிறிய இடைவெளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஏனென்றால், எப்போதும் போராடிக்கொண்டே இருக்க முடியாது. போராளிக்கும் ஓய்வு தேவை என்பதை சர்ச்சில் உணர்ந்திருந்தார்.
எனவே, மனம் சுணங்கும்போது சிறிது நேரம் அமைதியாக இருங்கள். செல்போனை விலக்கி வையுங்கள். மெதுவாக நடந்து வாருங்கள். நம்பிக்கையான ஒருவரிடம் பேசுங்கள். இசை கேளுங்கள். முடிந்தால் நன்றாகத் தூங்குங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் இன்றே சரிசெய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஓய்வெடுப்பது பிரச்சினையிலிருந்து ஓடுவது அல்ல. மீண்டும் அதை எதிர்கொள்ளும் சக்தியைச் சேமிப்பது.
நாளைக்குள் வாழ்க்கை மாறாமல் இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல இரவு ஓய்வுக்குப் பிறகு, அதே வாழ்க்கையைப் பார்க்கும் உங்கள் மனம் மாறியிருக்கலாம். அந்த மாற்றம்தான் பல நேரங்களில் அடுத்த தீர்வுக்கான முதல் படி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
