உலகிலேயே சுலபமான வேலை குறை சொல்வது. அதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை.

மந்திரச்சொல்

நண்பர் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை மிச்சப்படுத்தி, மிகவும் சிரமப்பட்டு ஒரு வீடு கட்டியிருப்பார். அதன் கிரஹப்பிரவேசத்துக்குச் செல்பவர்கள் வீட்டை சுற்றிப் பார்த்ததும் சும்மா இருப்பதில்லை.

‘கிச்சனை இன்னும் கொஞ்சம் அகலமாக்கியிருக்கலாம்’, ‘இந்த ஜன்னலை மறுபுறம் வைத்திருக்கலாம்’, ‘பாத்ரூமில் டைல்ஸ் வேறு கலரில் போட்டிருக்கலாம்’, ‘உள்ளே போதுமான வெளிச்சம் வரவில்லை’ என்று ஆளுக்கொரு குறை சொல்லிவிட்டுப் போவார்கள். அந்தக் கட்டிடத்தைத் திட்டமிட்டு வடிவமைத்து, பணம் திரட்டி, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, அதை உருவாக்கிய சிரமம் அவருக்குத்தான் தெரியும்.  

அதேபோல், தன்னுடைய கனவுகளை நனவாக்கும் வகையில் முதல் சினிமாவை ஒரு இயக்குனர் வெளியிடுவார். தயாரிப்பாளர் பணம் புரட்ட முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்ததால், நிறைய சமரசம் செய்து படத்தை இயக்கியிருப்பார்.

அந்த படத்தைப் பார்ப்பவர்கள், ‘ரொம்பக் குப்பையா இருக்குது, யாரும் பார்க்காதீங்க…’ என்று ஒரு வீடியோ போட்டு தீர்ப்பு எழுதிவிடுவார். ஒரு கதையை உருவாக்கி, நூற்றுக்கணக்கான மனிதர்களை ஒருங்கிணைத்து, பல கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு படைப்பை உருவாக்குவது எத்தனை கடினம் என்பது அவருக்குத் தெரிவதில்லை. ஏனென்றால், குறை சொல்வதற்கு எந்த தகுதியும் தேவையில்லை, எந்த உழைப்பும் தேவையில்லை. அதனால் எளிதில் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள்.

குறையைச் சுட்டிக்காட்டுவதைத் தங்களது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறார்கள். அவன் இப்படிச் செய்திருக்க வேண்டும், இந்த அரசு சரியாகச் செயல்படவில்லை, இந்த நிறுவனம் மோசமாக நடத்தப்படுகிறது, ‘இந்தப் பெற்றோர் குழந்தையைச் சரியாக வளர்க்கவில்லை, ‘இந்த ஆசிரியருக்கு கற்பிக்கத் தெரியவில்லை’ என்றெலாம் குறை சொல்வது மிகவும் எளிது.

நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள், இதை எப்படி சமாளித்திருப்பீர்கள் என்று கேள்வி கேட்டால், அவர்களுக்குப் பதில் தெரியாது. எதுவும் செய்யாதவர்களுக்கு எல்லா வேலையும் எளிதாகத் தெரியும். செய்பவர்களுக்குத்தான் ஒவ்வொரு வேலையின் சிரமமும் தெரியும்.

அதேநேரம், விமர்சனம் தவறல்ல. விமர்சிக்கும் விதம் சரியாக இருக்கவேண்டும். ஏனென்றால், ஆக்கபூர்வமான விமர்சனம் ஒரு மனிதரை வளர்க்கும். எந்த நோக்கமும் இல்லாமல் சொல்லப்படும் விமர்சனம் ஒரு மனிதனை உடைத்துவிடும். முட்டாள்தனமான முயற்சி என்பது மோசமான விமர்சனம். இந்த முயற்சியில் சில தவறுகள் இருக்கின்றன. இதை இப்படி மாற்றிச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது ஆக்கபூர்வ விமர்சனம். முதல் விமர்சனம் மனிதனைத் தாழ்த்துகிறது. இரண்டாவது விமர்சனம் மனிதனை உயர்த்துகிறது.

இன்று ஒரு செல்போன் இருந்தால் போதும். யாரைப் பற்றியும் கருத்து சொல்லலாம். ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி தீர்ப்பு வழங்கலாம். ஒருவரின் தொழிலை விமர்சிக்கலாம். ஒருவரின் தோல்வியைக் கேலி செய்யலாம் என்று நினைக்கிறார்கள். குறை சொல்வதற்கு முன்பு, யாரையாவது விமர்சிக்கும் முன்பு, ‘நான் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய ஏதாவது தீர்வு வைத்திருக்கிறேனா? அதையும் சேர்த்து சுட்டிக்காட்ட முடியுமா?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். அப்படி விமர்சனம் செய்வது மட்டுமே உண்மையான பொறுப்புணர்வு.

ஒருவரை கீழே தள்ளுவதற்கு குறை சொல்கிறோமா, அவர் முன்னேறுவதற்கு குறை சொல்கிறோமா என்பது அடுத்த கேள்வி. ஒருவர் உயர்வதற்காக குறை சொல்பவர்கள் ஒருபோதும் அவமானப்படுத்த மாட்டார்கள்.  கடினமான உண்மைகளைச் சொல்வார்கள். இவர்களை இழந்துவிடக் கூடாது.

ஒரு விஷயத்தில் குறை காண்பது முக்கியமல்ல, அந்தக் குறையைச் சரிசெய்ய முயற்சிப்பதுதான் தகுதி. ஒரு மனிதனை விமர்சிப்பது அல்ல. அவனது திறமையை வெளிக்கொணர்வதுதான் மனிதநேயம். ஒரு சமூகத்தின் பிரச்சினையைப் பற்றி பேசுவது அல்ல. அந்தப் பிரச்சினைக்கான தீர்வில் பங்கெடுப்பதுதான் பொறுப்பு.

குறை சொல்வதற்கு அறிவு தேவையில்லை. ஆனால், குறையை புரிந்துகொள்ள அறிவும், திறமையும் வேண்டும். வாழ்க்கையில் நாம் வெறுமனே குறை சொல்பவர்களாக இருக்க வேண்டாம். குறையைச் சுட்டிக்காட்டுபவர்களாக மட்டுமல்லாமல், தீர்வை உருவாக்குபவர்களாக மாறுவோம்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment