இரவு எவ்வளவு நீண்டாலும் விடியலைத் தடுக்க முடியாது.

மந்திரச்சொல்

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை, எல்லாமே மாறிவிடும் என்பதுதான் வாழ்க்கையில் நிலைகுலைந்து நிற்கும் ஒவ்வொரு மனிதருக்கும் நம்பிக்கை தரும் உண்மை. இன்பத்தால் தன்னை மறந்து வெற்றிக் களிப்புடன் துள்ளுபவருக்கும் இந்த விதி பொருந்தும்.

இரவு என்பது இருளாக இருக்கலாம், தோல்வியாக இருக்கலாம். பிரிவாக இருக்கலாம். பணக்கஷ்டமாக இருக்கலாம். தொழில் நஷ்டமாக இருக்கலாம். நண்பரின் துரோகமாக இருக்கலாம். நம்மை விட்டுச்சென்ற வாய்ப்பாக இருக்கலாம். தெளிவில்லாத குழப்பமாக இருக்கலாம். எத்தனை முயற்சிகள் செய்தும் கிடைக்காத வெற்றியாக இருக்கலாம்.

ஆனால் எந்த இரவுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. இருள் நிரந்தரமானது அல்ல. வாழ்க்கையில் சில நேரங்களில், ’இனி எதுவும் மாறப்போவதில்லை, எல்லாம் முடிந்துவிட்டது’ என்று தோன்றும். இரவு எவ்வளவு இருட்டாக இருக்கிறது என்பது முக்கியமல்ல, விடியல் வருவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இருளுக்கும் வெளிச்சத்துக்கும் ஆபிரகாம் லிங்கன் நல்ல உதாரணம். லிங்கன் பல தேர்தல்களில் தோல்வியடைந்தார். தொழிலில் சிரமங்களை சந்தித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல துயரங்களை அனுபவித்தார். ஒரு கட்டத்தில் அவருடைய வாழ்க்கை முழுவதும் தோல்விகளால் நிரம்பியதாகவே தோன்றியது. ஆனால் அவர் ஒருபோதும் அந்தத் தோல்விகளை எல்லாம் தனது வாழ்க்கையின் முடிவு என்று பார்க்கவில்லை. அதனாலே அமெரிக்காவின் அதிபராக உயர்ந்தார். இன்றைய தோல்விகள் எல்லாம் நாளைய வெற்றிக்கு எதிரான தீர்ப்பு அல்ல என்பதுதான் லிங்கன் வாழ்க்கை காட்டும் நம்பிக்கை ஒளி.

சில நேரங்களில் வாழ்க்கை நம்மை தாமதப்படுத்தும். ஆனால் அதற்காக அது நம்மை மறந்துவிட்டது என்று அர்த்தமில்லை.

ஸ்டீவ் ஜாப்ஸ் இருட்டுக்குள் தள்ளப்பட்ட வரலாற்றை அறிந்திருப்பீர்கள். ஸ்டீவ் ஜாப்ஸ், அவரது சொந்த நிறுவனமான ஆப்பிளில் இருந்து ஒருகட்டத்தில் வெளியேற்றப்பட்டார். ஒரு மனிதன், தான் உருவாக்கிய நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுவது எவ்வளவு பெரிய கொடுமை?

அந்த நேரத்தில் அது அவருடைய வாழ்க்கையின் மிகப்பெரிய தோல்வி. ஆனால் அந்த இரவு அவருடைய வாழ்க்கையை முடிக்கவில்லை. அவர் புதிய முயற்சிகளைத் தொடங்கினார். புதிய அனுபவங்களைப் பெற்றார். பின்னர் ஆப்பிளுக்குத் திரும்பினார். அதன்பிறகு உலக தொழில்நுட்ப வரலாற்றை மாற்றிய மனிதராக உயர்ந்தார். சில நேரங்களில் வாழ்க்கை நம்மிடமிருந்து ஒன்றை எடுத்துக்கொள்வது,
நம்மை இன்னும் பெரிய ஒன்றுக்குத் தயார்படுத்துவதாக இருக்கலாம்.

ஜே.கே. ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் புத்தகம் பல பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டது. அதனால் அவர் மனம் உடைந்து முயற்சியைக் கைவிட்டிருந்தால், அந்தக் கதையை உலகமே அறிந்திருக்காமல் போயிருக்கலாம். ஆனால் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. இருள் நீங்கியது, ஒளி பிறந்தது. அதனாலே, இன்று ஹாரிபாட்டர் உலகின் மிகப் பிரபலமான கொண்டாட்டப் படைப்புகளில் ஒன்றாக இருக்கிறது. இதுதான் வாழ்க்கையின் விசித்திரம். முடிவு என்று நினைக்கும் இடத்தில்தான், புதிய தொடக்கம் காத்திருக்கிறது.

எனவே, விடியல் வரும் என்று நம்புவது மட்டும் போதாது. விடியல் வரும் வரை நாம் விழித்திருக்க வேண்டும். தோல்வி வந்தால் முயற்சியை நிறுத்தக்கூடாது. பணம் குறைந்தால் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஒருவர் நம்மை விட்டு சென்றால் நம் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. ஒரு வாய்ப்பு தவறிவிட்டால் வாழ்க்கையில் இனி வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்யக்கூடாது.

நம்பிக்கையுடன், வேலை, முயற்சி செய்வது நமது பணி. சரியான நேரத்தில் விடியலைக் கொண்டுவருவது இயற்கையின் வேலை. கஷ்டத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தால், கஷ்டம் மட்டுமே தெரியும். ஆனால் நம்பிக்கையுடன் முன்னால் பார்த்தால், விடியலுக்கான பாதை தெரியும். இன்று இரவு என்றால், நாளை விடியல் என்பதுதான் இயற்கை விதி.

ஆகவே, வாழ்க்கை இருட்டாக இருக்கிறது என்று பயப்படாதீர்கள். இருள் இருப்பதால்தான் வெளிச்சத்தின் மதிப்பு தெரிகிறது. தோல்வி இருப்பதால்தான் வெற்றியின் சுவை தெரிகிறது. கண்ணீர் இருப்பதால்தான் புன்னகையின் அருமை புரிகிறது. காத்திருப்பு இருப்பதால்தான் கிடைத்ததன் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.

எனவே இன்று உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சினை இருந்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் மறந்துவிடாதீர்கள், அது, ‘இந்த இரவும் கடந்து போகும்’ என்பதுதான்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment