கோபத்திற்கு ஒரே ஒரு மருந்து மட்டுமே இருக்கிறது. அது பொறுமை

மந்திரச்சொல்

எதிரில் இருக்கும் மனிதரால் மட்டும் கோபம் வருவதில்லை. நம்முடைய எதிர்பார்ப்புக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையிலான முரண்பாட்டில் கோபம் பிறக்கிறது.

அதாவது எதிர்பார்த்தது நடக்காத நேரத்தில் கோபம் வருகிறது. யாராவது அவமதித்தால், புறக்கணித்தால், ஏமாற்றினால் கோபம் வருகிறது. கட்டுப்பாட்டை இழந்து கோபப்படுவதால் எதிரில் இருப்பவரை காயப்படுத்துவதாக நினைக்கிறோம்.

உண்மையில் கோபப்ப்படுபவரையே அது காயப்படுத்துகிறது. நிம்மதியைப் பறிக்கிறது. உறவுகளைப் பாதிக்கிறது. நல்ல பெயரை கெடுக்கிறது. தவறான முடிவுகளை எடுக்கச் செய்கிறது. பின்னர் வருத்தப்பட வைக்கிறது. அதனால், கோபம் வருகையில் அதை எப்படி கையாள வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதே பக்குவம். கோபத்தை அடக்குவது பிறரை வெல்வதல்ல, தன்னை வெல்வது. இதற்கு பொறுமை மட்டுமே கை கொடுக்கிறது.

கோபம் எல்லோருக்கும் வருகிறது. எனவே, கோபப்படுவது தவறல்ல. ஆனால், கோபத்தில் பேசுவதும், எடுக்கும் முடிவுகளும் பிரச்சினையாகின்றன. கோபத்தில் கொதிக்கும்போது மூளை சிந்திக்கும் திறனை இழக்கிறது. அதனால் அவசரப்பட்டு பேசும் ஒரு வார்த்தை, பல வருட உறவை காயப்படுத்திவிடலாம்.

பொறுமை என்பது கோபப்படாமல் இருப்பது அல்ல. கோபம் வந்தாலும் உடனே செயல்படாமல் அமைதியை கடைப்பிடிப்பது. பொறுமையாக இருப்பதால் கோபம் முழுமையாக மறைந்துவிடாது. ஆனால், கோபத்திற்கும் செயலுக்கும் இடையில் அழகான இடைவெளி உருவாகிறது. அந்த இடைவெளி சிந்திக்கத் தூண்டுகிறது. சொல்லும் பதிலில் வேகம் குறைகிறது, மாற்றம் ஏற்படுகிறது. அதனால் பொறுமை என்பது பலவீனம் அல்ல. அது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மன வலிமை.

யாராவது அவமதிக்கும்போது, உடனடியாக பதிலடி கொடுப்பது மிகவும் எளிது. ஆனால், அதன் பின்விளைவுகள் என்னவாகும் என்பதை யோசிப்பதற்கு மனப்பக்குவம் வேண்டும். அந்த பக்குவத்தை பொறுமை தருகிறது. ஏனென்றால், அந்த அவமதிப்பு நாம் செய்த தவறுக்குக் கிடைத்த தண்டனையாகவும் இருக்கலாம். எனவே, கோபத்தின் எதிரி உடனடி செயல்பாடு. கோபத்தின் நண்பன் பொறுமை.

ஒருவர் நம்மை கோபப்படுத்தும்போது, பதிலடி கொடுக்கிறோம் என்றால், அவரே நம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறார் என்று அர்த்தம். அதாவது, நாம் என்ன செய்யவேண்டும் என்பதை அவர் முடிவு செய்கிறார். அதேநேரம், பொறுமையாக இருந்தால், அவர் ஏமாற்றம் அடைகிறார். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதுதான் உண்மையான வெற்றி.

அதனால் கோபம் வந்தவுடன் செயலாற்ற வேண்டாம். அமைதியாக இருக்கலாம். அந்த இடத்திலிருந்து விலகலாம். தண்ணீர் குடிக்கலாம். இப்போது பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, யோசித்துச் சொல்கிறேன் என்று நிதானம் காட்டலாம்.  இந்த அமைதியும் பொறுமையும் உறவுகளைக் காப்பாற்றும்.  


உடல்நோய்க்கு மருந்து தேவைப்படுவது போன்று மனதின் கோபத்துக்கு பொறுமையே மருந்து. கோபம் நம்மை வேகமாக பேச வைக்கும். ஆனால், பொறுமை சரியாக பேச வைக்கும். எனவே, கோபம் வந்தவுடன் பொறுமையை கவசமாக அணிந்துகொள்ளுங்கள். எல்லாம் நலமாகிவிடும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment