பின்னே பேசுபவர்களை கவனிக்கத் தொடங்கினால், முன்னே செல்ல முடியாது.

மந்திரச்சொல்

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் எக்கச்சக்க விமர்சனங்களை சந்தித்தார். ஒரு பெண் கல்யாணம் முடித்த பிறகு, தாயாக மாறிய பிறகு உடல் பலம் அதிகம் தேவைப்படும் குத்துச்சண்டையில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று அவர் காதுபடவே கடுமையாகப் பேசினார்கள். ஆனால் அவர் அந்தக் குரல்களைக் கேட்டு தனது பயணத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து பயிற்சி செய்து, போட்டிகளில் கலந்துகொண்டு, உலக அளவில் சாதித்தார்.

எனவே, வெற்றியாளர்கள் எல்லா விமர்சனங்களையும் கேட்பவர்கள் அல்ல, எந்தக் குரலைக் கேட்க வேண்டும், எந்தக் குரலைக் கடந்து செல்ல வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்தவர்கள்.

ஒரு புதிய முயற்சி தொடங்கும்போது, பின்னால் இருந்து சில குரல்கள் கண்டிப்பாகக் கேட்கும். அதாவது, இவரால் முடியுமா?, இதெல்லாம் எதற்கு?, ஏற்கெனவே பலர் முயற்சி செய்து தோற்றுவிட்டார்கள், இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றெல்லாம் விமர்சனங்கள் எழுவது சகஜம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கும்போது, கவனம் செயலில் இருந்து மதிப்பீட்டுக்கு மாறிவிடுகிறது.

இதனால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசிக்கத் தோன்றிவிடும். மற்றவர்களின் சந்தேகத்தை மதிக்கும்போது, தன்னம்பிக்கை குறைந்துவிடும். அதனால் மேற்கொண்டு நகராமல் தேங்கி நின்றுவிடுகிறார்கள்.  

உண்மையான விமர்சனத்துக்கும் பின்னால் பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எல்லாவற்றையும் கேட்க வேண்டும். அதில், வளர்ச்சிக்கு உதவும் விமர்சனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தவறை சுட்டிக்காட்டும் ஒருவரை எதிரியாகப் பார்க்கக்கூடாது. அதேநேரம், முன்னேற விடாமல் செய்யும் கேலி, அவமதிப்பு, தேவையற்ற பேச்சு முயற்சியை மாற்றிவிடக்கூடாது. அதனால் பின்னே குரல் கேட்கும்போது, இது என்னை திருத்துகிறதா அல்லது தடுக்கிறதா என்று கேள்வி கேட்கத் தொடங்கினால் போதும். என்ன செய்யவேண்டும் என்பது தெரிந்துவிடும்.

பின்னே நின்று பேசுபவர்களை தடுக்க முடியாது. அதேநேரம், அவர்கள் தோல்வியின் வலியை சுமக்கப் போவதில்லை. முயற்சியின் சுமையை ஏற்கப் போவதில்லை. பிறகு எதற்கு அந்த வார்த்தைகளை கவனிக்க வேண்டும்? பேசுபவர்கள் பேசட்டும். சந்தேகிப்பவர்கள் சந்தேகிக்கட்டும். விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். உங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்து, இலக்கை நோக்கி நகருங்கள்.

ஏனென்றால், பின்னால் பேசுபவர்களின் குரல் எதிர்காலத்தை உருவாக்காது.
நீங்கள் இன்று எடுக்கும் முடிவுகள்தான் வெற்றியை உருவாக்கும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment