மந்திரச்சொல்
மனித வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம் பணம், பதவி அல்ல, கற்றுக்கொள்ளும் மனப்பான்மை. ஏனெனில், கற்றல் மட்டுமே மனிதனை ஒவ்வொரு நாளும் அடுத்தகட்ட உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
பலர் தங்கள் கனவுகளைத் தொடங்காமல் இருப்பதற்குக் காரணம் திறமையின்மை அல்ல. இப்போது வயதாகிவிட்டது, என் சூழல் சரியில்லை, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, உதவி செய்வதற்கு யாருமில்லை என்பது போன்ற காரணங்களை நம்புவதுதான்.
உண்மையில், வயது என்பது காலண்டரில் எழுதப்பட்ட ஒரு எண் மட்டுமே. அறிவு பெறுவதற்கு வயது எல்லையே இல்லை. உலக வரலாற்றில் அறுபது, எழுபது வயதிலும் புதிய தொழிலைத் தொடங்கி வெற்றி பெற்றவர்கள், ஓய்வு பெற்ற பிறகு புத்தகங்கள் எழுதி புகழ்பெற்றவர்கள் ஏராளம். அதேபோல், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள் தொடர் கற்றல் மூலமே உலகமே வியக்கும் உயரத்தை அடைந்திருக்கிறார்கள். எனவே, கற்க நினைப்பவருக்கு அவரது மனம் தவிர வேறு எதுவும் தடையாக இருப்பதில்லை.
மனித மூளைக்கு வாழ்நாள் முழுவதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் திறன் உள்ளது. புதிய விஷயங்கள் கற்றுக்கொள்வது மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. அனுபவமும் புதிய திறனும் ஒன்று சேர்கையில் வெற்றி சாத்தியமாகிறது.
நாம் தொடர்ந்து பயிற்சி செய்தால், புதிய அறிவை ஏற்றுக்கொண்டு புதிய திறன்களை உருவாக்க மூளை எப்போதும் தயாராக இருக்கும். எனவே, என்னால் முடியாது என்று நினைப்பதே மிகப்பெரிய தடையாக இருக்கிறது. நான் புரிந்துகொள்வேன், நான் கற்றுக்கொள்வேன் என்று முயற்சி செய்வதே வெற்றியின் தொடக்கம்.
கர்னல் ஹார்லாண்ட் சாண்டர்ஸ் 65வது வயதில் அவரது புதிய மெனுவான ஃப்ரைடு சிக்கன் செய்முறையை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்பினார். இதற்கென புதிய வழிமுறைகளைக் கற்றுக்கொண்டு வணிகத்தை மேம்படுத்தினார். இதுவே கே.எஃப்.சி.யாக இன்றும் உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.
அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ்க்கு 70 வயதுக்கு மேல் மூட்டுவலியால் தையல் செய்ய முடியாமல் போனது. எனவே, ஓவியங்கள் வரையத் தொடங்கினார். 78 வயதில் அவரது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உலகப் புகழ்பெற்ற ஓவியராக உயர்ந்தார்.
எனவே, திறமையை வெளிப்படுத்த சரியான வயது என்று எதுவும் இல்லை. தொடங்கும் மனம்தான் சரியான நேரம். பல நேரங்களில் நமக்குத் தேவையானது பெரிய மாற்றமல்ல; சிறிய தொடக்கம்தான். தினமும் பத்து நிமிடங்கள் ஒரு புத்தகம் படிப்பது, ஒரு புதிய சொல்லைக் கற்றுக்கொள்வது, ஒரு புதிய திறனைப் பயிற்சி செய்வது போன்ற சிறிய முயற்சிகளே நாளடைவில் பெரிய மாற்றங்களாக
வெற்றி என்பது ஒரே நாளில் நிகழும் அதிசயம் அல்ல. தினமும் கற்றுக்கொள்வதன் மூலம் உருவாகும் பழக்கத்தின் பலன். இன்று கற்றுக்கொள்ளும் ஒரு சிறிய திறன், நாளைய வாழ்க்கையின் திசையை மாற்றக்கூடும். கற்றலைத் தொடங்கும் அந்த ஒரு முடிவே, வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறும்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
