ஒருவர் தவறு செய்தால் அவரிடம் மட்டும் கூறுங்கள். பிறரிடம் கூறுவது, அதைவிட பெரிய தவறு.

மந்திரச்சொல்

ஒருவர் செய்த தவறை அவரிடமே சொல்லுவது திருத்தும் செயல். அதையே மற்றவர்களிடம் சொல்லுவது தனது நிலையை உயர்த்தி பிறரை அவமானப்படுத்தும் செயல். அவரிடம் சொல்வது மனிதரின் மதிப்பை உயர்த்துகிறது. பிறரிடம் சொல்வதை மனதைக் காயப்படுத்துகிறது.

ஒருவரின் சிறப்புகளை மட்டும் பாராட்டுவது அன்பு அல்ல, அவருடைய தவறுகளை சுட்டிக் காட்டுவதும் அன்புதான். அதேநேரம், சுயமரியாதைக்கு மதிப்பளிக்கும் வகையில் சுட்டிக்காட்டுவதே உண்மையான அன்பு. உண்மையாக நேசிக்கும் ஒருவரை பிறர் முன் அவமானம் செய்யமாட்டார். அவரை தனியே அழைத்து, சுட்டிக்காட்டுவதே அன்பின் மொழி.

ஒருவர் தவறு பலரிடமும் பேசப்படும்போது, பாதிக்கப்பட்டவர் மனதில் இரண்டு உணர்வுகள் உருவாகின்றன. முதலாவது அவமானம். அடுத்தது பாதுகாப்பின்மை. அந்த சூழலில் தனது தவறை ஏற்றுக்கொள்ளாமல் மறைப்பார். சிலர் அதை நியாயப்படுத்தவும் சரியென்று சண்டையிடவும் முயற்சிக்கலாம். இது உறவை மேலும் சிக்கலாக்கிவிடும்.

பொதுவாகவே மனித மனம் முதலில் தன்னைப் பாதுகாக்கவே முயற்சிக்கும். தன் தவறு எப்படி கையாளப்பட்டது என்பதைப் பொறுத்தே எந்த ஒரு உறவும் பலப்படுகிறது. தனிப்பட்ட முறையில் சொல்லப்பட்ட கண்டிப்பு உறவை வலுப்படுத்தும். பொதுவெளிக் கண்டிப்பு மனதில் ஆழமான காயத்தை உருவாக்குகிறது.

அறிவு என்பது குறைகளை கண்டுபிடிப்பது மட்டுமல்ல. எப்போது, எங்கே, யாரிடம், எப்படி சொல்ல வேண்டும் என்பதை அறிந்திருப்பதுதான் மேலான அறிவு. எல்லா உண்மைகளையும் எல்லா இடங்களிலும் பேச வேண்டிய அவசியமில்லை. சில உண்மைகள் நேரடியாகச் சொல்லும்போது மருந்தாக மாறும், பிறரிடம் சொல்லும்போது விஷமாகிவிடும்.

ஒருவர் தவறை மூன்றாம் நபரிடம் கூறுவது, பெரும்பாலும் அந்த தவறை சரிசெய்வதற்கான முயற்சியாக இருப்பதில்லை. மனக்கசப்பு அல்லது குற்றம் சாட்டும் செயலாகவே அமைகிறது. சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி எதிர்மறை எண்ணம் உருவாகிறது.

ஒரு நல்ல ஆசிரியர், மாணவன் தவறு செய்தால் வகுப்பில் அவமானப்படுத்தாமல் தனியாக அழைத்து அறிவுறுத்துவார். ஒரு நல்ல பெற்றோர், பிள்ளையை உறவினர்கள் முன் திட்டாமல் தனிமையில் கண்டிப்பார்கள். ஒரு நல்ல நண்பர், குறையை மற்றவர்களிடம் பகிராமல் நேராக அவரிடமே பேசுவார். ஏனெனில் அவர்களின் நோக்கம் தவறை சரிசெய்வது மட்டும்தான்.  

ஆத்மார்த்தமான அன்பு நன்கு யோசித்துப் பேசும். வார்த்தையால் உறவு பலமாகும் என்றால் எல்லோர் முன்னிலும் பேசும். காயப்படும் என்றால் தனிமையில் பேசும். 

அதேநேரம், எதற்காகவும் தவறை சுட்டிக்காட்டாமல் மறைப்பதற்கு அவசியம் இல்லை. தவறைச் சுட்டிக்காட்ட வேண்டும்; ஆனால் சரியான நபரிடம், சரியான முறையில், சரியான நோக்கத்துடன். தவறைத் திருத்தும் இலக்காக இருக்க வேண்டும்.

தவறைச் சுட்டிக்காட்டுவது மனிதநேயம். தவறை பரப்புவது இழிவுபடுத்தும் செயல். அன்பு தவறைத் திருத்தும். அறிவு அதை மரியாதையுடன் செய்யும். முதிர்ந்த மனம் கண்ணியத்துடன். தவறை சுட்டிக்காட்டி திருத்தும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment