மந்திரச்சொல்
இந்த உலகிலேயே மிகப் பெரிய முரண்பாடு என்பதற்கு உதாரணமாக இருக்கிறது மனிதரின் மனம். மனம் ஒரு சின்ன வார்த்தையைக் கேட்டு உடைந்து போகிறது. அதே மனம் யாராலும் தடுக்கவே முடியாத அசாத்தியமான சாதனைகளை செய்து முடிக்கிறது. அதனால்தான், மனதை விட பலவீனமானதும் இல்லை; வலிமையானதும் இல்லை என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
மனிதனின் வாழ்க்கையை வெளிப்புறச் சம்பவங்கள் முழுமையாக தீர்மானிப்பதில்லை. அந்தச் சம்பவங்களை அவரது மனம் எப்படி புரிந்துகொள்கிறது, எப்படி அர்த்தப்படுத்துகிறது என்பதுதான் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கிறது.
சிறிய விமர்சனத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல், மறக்க முடியாமல் வாழ்நாள் முழுவதும் மனவேதனையில் மூழ்குபவர்கள் இருக்கிறார்கள். பரிட்சையில் தோல்வி அடைந்ததும் ஊரை விடு ஓடுகிறார்கள். நோய் ஏற்பட்டதும் துவண்டு போகிறார்கள். காதல் தோல்விக்கு உயிரைக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு தோல்வி ஏற்பட்டதும், தகுதி குறைந்து, தன்னம்பிக்கை குறைந்து பலவீனமாக உணர்கிறார்கள். சின்னஞ்சிறு நிகழ்வை மனம் பெரிதாக்கி, நம்பிக்கையை, தன்னம்பிக்கையை சிதைத்துவிடுகிறது.
ஆனால் சில நேரங்களில் மனம் அபார வலிமையுடன் திகழ்கிறது. எத்தனை பெரிய இடர் வந்தாலும் எதிர்த்து நிற்கிறது. கடுமையான வறுமையிலிருந்து உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள் உருவாகிறார்கள். ‘என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை ஆயிரம் தடைகளையும் தாண்டிச் செல்லும் சக்தியாக மாறுகிறது.
கண்ணுக்கு முன் நடக்கும் ஒரு சம்பவம் ஒருவரிடம் எந்த அளவுக்குத் தாக்கம் உருவாக்குகிறது என்பதே முக்கியம். வெயிலுக்குப் பயந்து வெளியே செல்லாத மனிதர்கள் உண்டு. வெயில் என்ற எண்ணமே இல்லாமல் அலைந்து திரிபவர்கள் உண்டு. விபத்தில் கால் முறிவு ஏற்பட்டுவிட்டால் கதறி அழுபவர்கள் உண்டு. அந்த வேதனையை தாங்கிக்கொண்டு சிரித்தபடி மருத்துவமனைக்குச் செல்பவர்களும் உண்டு. இதுவே, மனதின் அற்புதம்.
மீண்டு வரும் ஆற்றல் ஒருவருக்கு எத்தனை சீக்கிரம் கிடைக்கிறது என்பதும் முக்கியமானது. நேசித்த ஒருவரை இழப்பது, தொழிலில் தோல்வியடைவது, உடல்நலப் பிரச்சினைகளை சந்திப்பது போன்றவைகளை வாழ்நாள் பிரச்னையாகப் பார்ப்பவர்கள் உண்டு. அப்படியே தூக்கிப்போட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்பவர்களும் உண்டு. மனதின் இந்த வலிமையே ஒருவரை வெற்றியாளராக மாற்றுகிறது.
ஆனால், இந்த வலிமை தானாக உருவாகாது. நல்ல சிந்தனை, தன்னம்பிக்கை, உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன், தோல்வியை அனுபவமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், ஆதரவான உறவுகள் போன்றவை மனதை வலுப்படுத்துகின்றன. அதே நேரத்தில், எதிர்மறை சிந்தனை, தொடர்ச்சியான ஒப்பீடு, அளவுக்கு மீறிய பயம், தன்னைத் தானே குற்றம் சொல்லும் பழக்கம் மனதை மிகவும் பலவீனமாக மாற்றுகின்றன.
ஓவியர் வான்கோ மிகச்சிறந்த கலைஞராக இருந்தார். ஆனால், மனதளவில் அவர் பலவீனமாக இருந்ததால் நோய், வறுமையை சமாளிக்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி உயிரை இழந்தார்.
அதேநேரம், 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டாலும் மன உறுதியும் நம்பிக்கையும் குறையாமல் வெளியே வந்த நெல்சன் மண்டேலா மிகச்சிறந்த தலைவராக உயர்ந்தார்.
மனம் நல்ல நண்பராக கை கொடுக்கலாம் அல்லது கொடூரமான எதிரியாக துன்பம் தரலாம். எப்படிப்பட்ட எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதுவே மனதின் பலமாக அல்லது பலவீனமாக மாறுகிறது. உடலுக்கு உடற்பயிற்சி தேவைப்படுவது போல, மனதிற்கும் நல்ல சிந்தனை, சிரிப்பு, சுயபரிசோதனை, நன்றியுணர்வு, அன்பு, நம்பிக்கை அவசியமாகிறது.
ஒருவரை உயர்த்துவதும் மனம்தான், தாழ்த்துவதும் மனம்தான். பலவீனமான மனம் தடைகளை மட்டுமே பார்க்கும். வலிமையான மனம் அதே தடைகளில் ஒளிந்திருக்கும் வாய்ப்புகளைப் பார்க்கும். ஆகவே, வாழ்க்கையை மாற்ற நினைப்பவர்கள் முதலில் சூழ்நிலையை மாற்ற வேண்டாம், மனநிலையை மாற்றினால் போதும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
