இங்கு யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஒருவர் இடம் காலியானதும் இன்னொருவரைக் கொண்டு நிரப்பிக் கொள்கிறது இந்த உலகம்.

மந்திரச்சொல்

நான் இல்லைன்னா ஆபிஸில் எதுவும் சரியாக நடக்காது, நான் இல்லைன்னா வீட்டுல வேலை அப்படியே கிடந்திடும், நான் இல்லைன்னா இதையெல்லாம் யாரும் எடுத்துச் செய்ய வர மாட்டாங்க என்றெல்லாம் சிலர் கடுமையாக உழைத்துக்கொண்டே இருப்பார்கள். தங்களைப் பற்றி பெருமையாக நினைத்துக்கொள்வார்கள்.

ஆனால், இது நிஜம் அல்ல. குடும்பம், அலுவலகம், வெளியுலகம் என எதுவும் தனி ஒரு மனிதரை நம்பி இயங்குவதே இல்லை. ஒரு மனிதர் இல்லாததால் உலகம் நின்றுவிடாது. குடும்பமாக இருந்தாலும், அலுவலகமாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும், சமூகமாக இருந்தாலும் வாழ்க்கை தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும்.

எப்படிப்பட்ட இழப்பு என்றாலும் மனித மூளை இழப்பையும் மாற்றத்தையும் மெதுவாக ஏற்றுக்கொண்டு, புதிய சூழ்நிலைக்கு தன்னைப் பழக்கிக் கொள்கிறது. அதனால்தான் மிகப்பெரிய துயரத்திற்குப் பிறகும் காலப்போக்கில் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள்.

மனிதர்கள் இயற்கையாகவே ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கிறார்கள். அதேநேரம் ஒரு உறவு முடிந்துவிட்டால், அந்த வெற்றிடத்தை புதிய உறவுகள், புதிய நண்பர்களைக் கொண்டு நிரப்பிக் கொள்கிறார்கள். இது துரோகம் அல்ல. தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறை.

அலுவலகத்தில் பல ஆண்டுகள் உழைத்த ஒருவர் ஓய்வு பெறும் நேரத்தில், அவரைப் போன்று அனுபவசாலி வேறு யாரும் இல்லை என்று பாராட்டுவார்கள். அவருடைய ஆலோசனையை கண்டிப்பாக கேட்போம், உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வார்கள். அதை உண்மை என்றே ஓய்வு பெறுபவரும் நினைப்பார்.

ஆனால், அவருக்குப் பின் வரும் நபர் எப்படிப்பட்ட பிரச்னை என்றாலும் அவராகவே தீர்ப்பதற்கு முயற்சி செய்வாரே தவிர, ஓய்வு பெற்றவரின் ஆலோசனையைக் கேட்க மாட்டார். தவறுகள் செய்தாவது பாடம் கற்றுக்கொள்வார். இதுதான் நடைமுறை உண்மை. தன்னுடைய ஆலோசனை இல்லாமல் புதியவரால் எதையும் செய்ய முடியாது என்று ஓய்வு பெற்றவர் நினைத்தால், அது அறியாமை. நீண்ட காலம் கழித்தே, தன்னுடைய ஆலோசனை யாருக்கும் தேவை இல்லை என்ற உண்மையை அவர் உணர்வார்.

குடும்பத்தில் மனைவி, குழந்தையை வெளியுலகம் தெரியாமலே கணவர் வளர்த்திருப்பார். திடீரென அவர் மரணம் அடைந்ததும் அந்த குடும்பமே அவ்வளவுதான் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், மனைவி அல்லது பிள்ளை விரைவில் அப்பாவின் இடத்தை நிரப்பிவிடுவார்கள். ஒருவர் இல்லாதபோது மற்றவர்கள் அவரது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கை சக்கரம் யாருக்காகவும் நின்றுவிடாது என்பதையே இது உணர்த்துகிறது.

அதேநேரம் இந்த தத்துவத்தை, ’யாரும் யாரையும் நேசிப்பதில்லை’ என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளக் கூடாது. வாழ்க்கை தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதே உயிர்களின் அடிப்படை இயல்பு. ஒருவரை இழந்தாலும், அந்த இழப்போடு வாழக் கற்றுக்கொண்டு புதிய அர்த்தத்தை உருவாக்கும் திறன் மனிதருக்கு இருக்கிறது.

அதனால், ‘நான் இல்லையென்றால் எல்லாம் முடிந்துவிடும்’ என்ற எண்ணம் ஒரு மாயை. ஜனாதிபதி, பிரதமர், முதல் அமைச்சர் என்று யார் இறந்தாலும் அரசு இயந்திரம் ஸ்தம்பித்து நிற்பதில்லை. யாரும் இந்த உலகில் முக்கியமான நபர் இல்லை. எத்தனை பெரிய அரசியல்வாதி, எத்தனை பெரிய தொழிலதிபர், எத்தனை பெரிய மருத்துவர் என்றாலும், அவர் இழப்புக்குப் பிறகு அடுத்தவர் வந்துவிடுவார்.  

உலகம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பது உண்மை. ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் வந்துவிடலாம் என்ற உண்மை புரிந்த மனிதர் ஆணவம், செருக்குடன் நடந்துகொள்ள மாட்டார்.

ஒருவருக்குப் பதில் இன்னொருவர் என்பது இயற்கை. அதேநேரம் அன்பு, நேர்மை, கருணை, நம்பகத்தன்மை, மனிதநேயம், உதவி போன்ற குணங்களால் ஒருவர் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை, வேறு எந்த மனிதராலும் அத்தனை சீக்கிரம் நிரப்ப முடியாது. அதனால்தான் காதல் தோல்வி, லைஃப் பார்ட்னர் இறந்த துயரத்தில் இருந்து நிறைய பேர் எளிதாக மீள்வதில்லை. அவர்கள் நினைவிலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள்.

மரத்தில் ஒரு இலை விழுந்தவுடன் இன்னொரு இலை துளிர்க்கும். எனவே, விழுவதற்கு கலங்க வேண்டியதில்லை, முளைப்பதற்கு ஆர்ப்பரிக்கத் தேவையில்லை. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment