எதற்கு பொய் சொன்னீர்கள் என்று கேள்வி கேட்காதீர்கள். அதற்கும் ஒரு பொய் சொல்வார்கள்.

மந்திரச்சொல்

பொய் ஒருபோதும் தனியாக வராது. அது தன்னைக் காப்பாற்றுவதற்காக மேலும் பல பொய்களை அழைத்துக்கொண்டு வரும் என்பார்கள். ஏனென்றால் பொய்யை ஒப்புக்கொள்வது என்பது, வெறும் தவறை ஏற்றுக்கொள்வது மட்டும் இல்லை. தனது நம்பகத்தன்மை, மரியாதை, சுயமரியாதை ஆகிய அத்தனையும் பாதிக்கப்படுவதாக உணர்கிறார்கள்.

அதனால் உண்மையை ஒப்புக்கொள்ளாமல், அந்தப் பொய்யைக் காப்பாற்றுவதற்கு இன்னொரு பொய் சொல்கிறார்கள். இதை ஸ்னோபால் எஃபக்ட் ஆஃப் லையிங் என்கிறது உளவியல். சிறிய பொய்யை மறைப்பதற்கு இன்னொரு பொய், அதற்காக மேலும் ஒரு பொய் என்று தொடர்ச்சியாக சொல்லப்படும் போது, அந்தப் பொய் பனிப்பந்து போல பெரிதாகிறது.

பொதுவாகவே மனிதர்கள் தங்களை நல்லவர்களாக, நேர்மையானவர்களாக மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். பொய் சொன்னதை ஒப்புக்கொண்டால், அந்த நல்ல பிம்பம் உடைந்துவிடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. அதனால், உண்மையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, புதிய விளக்கங்களை உருவாக்கி தங்களை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

ஒருசிலர் பொய் சொன்னதை நியாயப்படுத்துவார்கள். அதாவது, அந்தச் சூழ்நிலையில் வேறு வழியில்லை, அவர்களுக்காக பொய் சொன்னேன், நான் சொன்னது முழு பொய் இல்லை, வேறு ஒரு விஷயத்துக்காக பொய் சொன்னேன் என்றெல்லாம் சில  காரணங்களைச் சொல்லி பொய்யை நியாயப்படுத்துவார்கள்.

இதற்கு நம் வீட்டுப் பிள்ளைகளையே உதாரணமாகச் சொல்லலாம். ஏன் மதிப்பெண் குறைந்தது என்று கேட்டால், வினாத்தாள் மிகவும் கடினம் என்று சொல்வார். மேலும் விசாரித்தால் நேரம் போதவில்லை, எழுதும்போது வயிற்று வலி என்று புதிய புதிய காரணங்கள் சொல்வார்கள். பொய் சொல்லி தப்புவதில் மாணவர் ஜெயித்துவிட்டால், ஆசிரியர், பெற்றோரை ஏமாற்றுவதாக நினைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள். தம்பதியர்கள் சாதாரண பொய்யை மறைக்க மேலும் மேலும் பொய் சொல்வதால், அந்த உறவே முறிந்து போகலாம்.

சிலர் தண்டனைக்குப் பயந்து பொய் சொல்கிறார்கள். சிலர் அவமானத்தைத் தவிர்க்கப் பொய் சொல்கிறார்கள். சிலர் மற்றவர்களை ஏமாற்றுவதற்காகத் திட்டமிட்டு பொய் சொல்கிறார்கள். காரணங்கள் வேறுபட்டாலும், ஒரு பொய்யைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயம் பலரையும் மேலும் பொய் சொல்லத் தூண்டுகிறது.

அதனால்தான், ஒருவர் பொய் சொன்னது தெரிந்தவுடன், ஏன் பொய் சொன்னாய்? என்று குற்றம் சாட்டாமல், உண்மை சொன்னால் புரிந்துகொள்வேன், நீ இப்படி பேசியதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் என்று ஆதரவாகக் கேட்பது பாதுகாப்பான சூழலை உருவாக்கும். பயம் குறைந்த இடத்தில் உண்மை பேசப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, குழந்தைகளிடம் இப்படியே பேச வேண்டும்.

உண்மையைச் சொல்வது சில நிமிடங்கள் வலிக்கலாம். ஆனால் ஒரு பொய்யைச் சுமந்துகொண்டு வாழ்வது பல ஆண்டுகள் மனஅழுத்தம், நம்பிக்கையிழப்பை உருவாக்கும். எனவே, பொய்யை நியாயப்படுத்தும் பழக்கத்தை விட, தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சலே நேர்மையானது. மகிழ்ச்சி தரக்கூடியது.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment