மந்திரச்சொல்
பணம், பதவி, புகழ் போன்றவை மனிதருக்கு மகிழ்ச்சி தரலாம். ஆனால், இவை ஒருபோதும் நிம்மதி தருவதில்லை. ஏனென்றால் நிம்மதி வெளியில் கிடைப்பதில்லை. பிறருக்குக் கொடுக்கும் அன்புக்குப் பிரதிபலனாகவே நிம்மதி கிடைக்கிறது.
வாழ்க்கையில் மற்றவர்களுக்கு எந்த உணர்வைக் கொடுக்கிறோமோ, அதே உணர்வு திரும்பக் கிடைக்கிறது. அன்பை விதைப்பவர்களுக்கு அன்பு கிடைக்கும். கோபத்தை விதைத்தால் கோபமே கிடைக்கும்.
உளவியல் ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், பிறருக்கு உதவும்போது அல்லது அன்புடன் நடந்துகொள்ளும்போது, மூளையில் டோபமைன், ஆக்ஸ்டோசின், செரோடோனின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன. அன்பு பெறுபவருக்கு மட்டுமல்ல; கொடுப்பவருக்கும் மருந்தாகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது. கோபம் தணிகிறது. தனிமை எண்ணம் குறைகிறது. மனதில் அமைதி அதிகரிக்கிறது.
அதேநேரம், அன்புக்கு பிரதிபலன் எதிர்பார்த்தால் ஏமாந்து போவார்கள். அன்பு கொடுப்பது தானம் போன்றது. கொடுப்பதில் மனநிறைவு அடையவேண்டுமே தவிர, பதிலுக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அதனால் அன்பு செலுத்துவதில் கிடைக்கும் நிம்மதியே முக்கியம்.
ஒரு வீட்டில் எல்லோரும் ஒருவரை ஒருவர் மதிக்கிறார்கள். அன்பாக, ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றால், எந்த ஒரு பிரச்னை வந்தாலும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமாளிப்பார்கள். அன்பு இருக்கும் இடத்தில் பிரச்சினைகள் பெரிதாகத் தெரியாது; அன்பு இல்லாத இடத்தில் சிறிய பிரச்சினைகள்கூட பெரும் கவலையாக மாறி துன்புறுத்தும்.
ஒருவர் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களிடம் அன்பாக இருக்கிறார் என்றால், அவரை எல்லோரும் மதிக்கிறார்கள். அவருக்கு ஒரு பிரச்னை அல்லது நோய் வரும்போது உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் வந்து ஆறுதலாக நிற்கிறார்கள். பணம், அதிகாரத்தை விட இந்த ஆறுதலே மிகப்பெரும் நிம்மதி. அவர் விதைத்த அன்பை அறுவடை செய்கிறார்.
அதேநேரம், நான் கொடுத்த அளவுக்கு அன்பு திரும்பக் கிடைக்கவில்லை என்ற எண்ணம் தவறானது. அன்பு என்பது வியாபாரம் அல்ல. இதில் லாப, நஷ்டம் கணக்குப் பார்க்கத் தேவையில்லை. அன்பு செலுத்துவது மட்டுமே போதும், அதற்கு பரிசு வெளியில் இருந்து எதிர்பார்க்க வேண்டாம். அந்த அன்புக்கான பரிசை மனமே கொடுத்துவிடும். அதுவே, நிஜமான நிம்மதி.
அன்பு என்பது பிறருக்கு அளிக்கும் பரிசு மட்டுமல்ல, மன அமைதிக்கான முதலீடு.
வெறுப்பை விதைத்தால் பகை வளர்கிறது.
கோபத்தை விதைத்தால் தனிமை வளர்கிறது.
பொறாமை விதைத்தால் மன அழுத்தம் வருகிறார்.
ஆனால் அன்பை விதைத்தால் உறவுகள் மலர்கிறது. உறவுகள் மலரும்போது மனம் நிம்மதியை அறுவடை செய்கிறது.
மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
