எத்தனை பேர் செய்தாலும் தவறு என்றால் தவறுதான். யாருமே செய்யவில்லை என்றாலும் சரி என்றால் சரிதான்.

மந்திரச்சொல்

பொய்கள் சுவாரஸ்யமானவை. கென்யாவில் ஏலியன் நடமாட்டம் என்று சோஷியல் மீடியாவில் ஒரு படம் வெளியானால், அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் லட்சக்கணக்கானோர் அப்படியே பகிர்கிறார்கள்.

அது உண்மை இல்லை என்று அடுத்துவரும் செய்தியை அவர்கள் கண்டுகொள்வதில்லை. பொய் செய்தி பகிர்ந்தமைக்கு கொஞ்சமும் குற்றவுணர்ச்சி அடைவதில்லை. எல்லோரும் பகிர்ந்தார்கள், நானும் பகிர்ந்தேன் என்று அசட்டையாக எடுத்துக்கொள்கிறார்கள்.

பெரும்பான்மை மக்கள் நம்புகிறார்கள் என்பதால், அவை எல்லாமே உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. வரலாற்றில் பல சமூக அநீதிகள் பெரும்பான்மை மக்களால் ஏற்கப்பட்டவை.

பெண் படிக்கத் தேவையில்லை, கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும் என்பதெல்லாம் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள்.

உலகம் நீளமானது, சூரியனே பூமியை சுற்றிவருகிறது என்றே பெரும்பான்மை மக்கள் நம்பினார்கள். உண்மையை முதலில் சொன்ன விஞ்ஞானியை கொலை செய்தார்கள். பின்னர் அறிவியல் ரீதியில் உறுதி செய்யப்பட்டதும் தவறு என்று உலகமே ஒப்புக்கொண்டது. இதுவே கூட்டம் எப்போதும் சரியாக இருக்காது என்பதற்கான சான்று.

எல்லோரும் குடிக்கிறார்கள், நான் குடித்தால் தப்பா..? எல்லோரும் சிக்னலில் நிற்காமல் போகிறார்கள், நான் போனால் தவறா..? எல்லோரும் காப்பியடித்து எழுதுகிறார்கள், நான் எழுதினால் என்ன? என்பது போன்று கேள்வி கேட்கும் பலவீனம் நிறைய பேரிடம் இருக்கிறது.

நிறைய பேர் இதை செய்வதால், நாம் செய்வதும் தவறு இல்லை என்று மனம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறது. இதனால்தான் கலவரம் நடக்கும்போது ஒட்டுமொத்த கூட்டமும் ஏதேனும் கடைக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடுகிறார்கள். அவரவருக்குத் தேவையானதை அள்ளிக் கொள்கிறார்கள். கூட்டமாக தவறு செய்தால் யாரையும் பிடிக்க முடியாது என்று மூளை ஆசையைத் தூண்டுகிறது.

சரியான பாதையில் நடப்பவர்கள் மிகவும் குறைவாக இருக்கலாம். அதாவது நேர்மையாக வரி செலுத்துபவர், லஞ்சம் கொடுக்க மறுப்பவர், தேர்வில் காப்பி அடிக்காமல் எழுதுபவர், போக்குவரத்து விதிகளை யாரும் பார்க்காத நேரத்திலும் கடைபிடிப்பவர்களைப் பார்ப்பதற்கு விசித்திரமாகத் தோன்றலாம். சரியான செயலை ஒருவர் மட்டுமே செய்தாலும் அதன் மதிப்பு குறையாது.

ஒழுக்கம் என்பது பெரும்பான்மையால் தீர்மானிக்கப்படுவதில்லை; மனசாட்சியால் தீர்மானிக்கப்படுகிறது. மன உறுதி கொண்டவர்கள், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்காமல் தங்கள் மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் கூட்டத்தைப் பின்பற்ற மாட்டார்கள்.

தவறை பலர் செய்தாலும் அது தவறுதான். சரியை ஒருவர் மட்டுமே செய்தாலும் அது சரிதான். உண்மையான வெற்றி என்பது கூட்டத்தோடு செல்வதில் இல்லை; உண்மையுடன் நிற்பதில்தான் இருக்கிறது.

Leave a Comment