வாழ்க்கைத் தேர்வில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வினாத்தாள்கள். அதனால் அடுத்தவரை காப்பியடிக்காதீர்கள்.

 மந்திரச்சொல்.

உருவத்திலும், உள்ளத்திலும் ஒருவர் போன்று இன்னொருவர் இருப்பதில்லை. ஒவ்வொரு நபருக்கும் தனிப் பண்புகள். பிறப்பு, வளர்ப்பு, சூழ்நிலை, திறமை, பொறுப்பு, இலக்கு ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்டவை. ஆனால், ஒவ்வொருவரும் தனிப் பாதையில் செல்வதற்கு அஞ்சுகிறார்கள். அடுத்தவரைப் போன்று வாழ்வதற்கு ஆசைப்படுகிறார்கள்.

தங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். சில ஒப்பீடுகள் ஊக்கம் தரலாம். ஆனால், தொடர்ந்து பிறரை அளவுகோலாகக் கொண்டு வாழத் தொடங்கினால், மனஅழுத்தம், தாழ்வு மனப்பான்மை, பொறாமை, தன்னம்பிக்கை குறைவுதான் கிடைக்கும்.

ஏனென்றால் மற்றவர்களின் வெற்றி மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அவர்களுடைய உழைப்பு போராட்டம், தியாகம், தோல்விகள், குடும்பச் சூழல், வாய்ப்புகள் வெளியே தெரிவதில்லை.  

மூங்கில், முருங்கை என இரண்டையும் ஒரே மண்ணில், ஒரே நாளில் நட்டாலும்  அவை ஒரே வேகத்தில் வளர்வதில்லை. ஒவ்வொன்றும் அதன் இயல்புக்கு ஏற்பவே வளரும்.

மனித வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கவேண்டும். பிறர் வாழ்க்கையை பின்பற்ற முயற்சிக்கும்போது, நமது உண்மையான திறமைகளைப் புறக்கணிக்கிறோம்.

எனவே, வாழ்க்கையை பிறர் போன்று வடிவமைக்க வேண்டாம். அவரவர் திறமை, அவரவர் விருப்பத்திற்கேற்ப தேர்வு இருக்கட்டும். தோல்வி அடைந்தாலும், அது நமது தோல்வியாக இருக்கும். வெற்றி கிடைத்தால் நமது தனித்தன்மைக்கான வெற்றியாக இருக்கும்.

வாழ்க்கை ஒரு தனித்துவமான வினாத்தாள். அதன் சரியான பதில்களை எழுதக்கூடிய ஒரே நபர் நீங்கள்தான். அதனால், பிறரைப் பார்த்து பொறாமைப்பட வேண்டாம்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் அனுபவம், உங்கள் இலக்குகளை பதிலாக எழுதுங்கள். வெற்றி பெறுங்கள்.

Leave a Comment