மந்திரச்சொல்
நான் எல்லோரையும், எல்லாவற்றையும் புரிந்துகொண்டேன். ஆனால், என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணம் பெரும்பாலோர் மனதில் இருக்கிறது. இந்த உளவியலே உறவுக் குழப்பங்களுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.
தங்கள் அறிவு, அனுபவம், பதவி, வயது, பணத்தின் அடிப்படையில் மற்றவர்களை மதிப்பிடத் தொடங்குகிறார்கள். “எனக்குத் தெரியும்”, “இவர்களுக்கு என்ன தெரியும்?” என்ற மனநிலை அகந்தையாகவும் வெறுப்பாகவும் மாறுகிறது.
உண்மை என்னவென்றால், ஒவ்வொரு மனிதரும் தனித்தனி பல்கலைக்கழகம். நீங்கள் அறியாத ஒன்றை, சாதாரண நபர் ஒருவர் கற்றிருக்கலாம்.
நமக்குத் தெரிந்த விஷயம் எல்லோருக்கும் தெரியாது என்று நினைப்பு வருவதால், மற்றவர்கள் அறிந்திருக்கும் விஷயங்களை கவனிக்க முடியாமல் போகிறது. இந்த மனநிலை உள்ளவர்கள் பிறர் கேட்பதைக் கேட்பதில்லை. தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று பேசிக்கொண்டே இருப்பார்கள். இதனால் தனி நபர் உறவுகளும், நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி அடைவது நின்றுவிடும்.
உண்மையான புத்திசாலித்தனம் என்பது எல்லாம் தெரியும் என்று நம்புவதில் இல்லை. எனக்குத் தெரியாதது நிறைய இருக்கிறது என்று ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. ஒரு விவசாயியிடம் வாழ்க்கை அறிவு இருக்கலாம். ஒரு தொழிலாளியிடம் நேர்த்தியின் வழிமுறை இருக்கலாம்.
மற்றவர்களை குறைத்து மதிப்பிடுபவர்கள் எதையும் கற்பதில்லை. மற்றவர் அறிவையும் அனுபவத்தையும் மதிப்பவர் வளர்கிறார். அறிவாளியாகிறார். எனவே, எவரையும் மட்டம் தட்ட வேண்டாம். எல்லோரிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும். எனவே, வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருங்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக மலரும்.
