ஜப்பானின் காய்ஸன் தத்துவம்

சின்ன முன்னேற்றம் மெகா சக்சஸ்

ஒரு குட்டியூண்டு விதை மாபெரும் மரமாக மாறுகிறது. இந்த அடிப்படையில் தொடர்ச்சியான சின்ன மாற்றம் பெரிய சாதனையை உருவாக்கும் என்பதுதான் ஜப்பானின் காய்ஸன் Kaizen தத்துவம்.

ஒரு பெரிய புத்தகம் படிப்பதற்கு மலைப்பாக இருக்கும். தினமும் ஐந்து பக்கங்கள் என்று ஆரம்பித்தால் முடிப்பது எளிது. ஒரே நாளில் பெரிய மாற்றம் என்பதற்குப் பதில் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் சிறிய முன்னேற்றம் என்பதே காய்ஸன்.

இந்த தத்துவம் எப்படி பயனளிக்கிறது தெரியுமா..?

மனித மூளை பெரிய மாற்றத்துக்கு அஞ்சுகிறது. பெரிய இலக்குகள் பலருக்கு பயம், பதட்டம், தோல்வி, கவலை தருகிறது. ஆனால், தினமும் மிகச்சிறிய முன்னேற்றத்துக்கு மனம் எளிதில் தயாராகிறது.

நாளை முதல் 1 மணி நேரம் வொர்க் அவுட் என்று தொடங்குபவர்கள், சில நாட்கள் கூட தாக்குப் பிடிப்பதில்லை. அதுவே, நாளை முதல் ஐந்து நிமிடம் வொர்க் அவுட் என்று தொடங்கினால் சுமையாகத் தெரியாது. ஒவ்வொரு நாளும் 6 நிமிடம், 7 நிமிடம் என்று அதிகரிப்பது மிகவும் எளிது.

இந்த சிறிய வெற்றிகள் டோபமைன் ஹார்மோன் சுரப்பை உண்டாக்கி உற்சாகம் தருகிறது. என்னால் முடியும், நான் முன்னேறுகிறேன் என்ற நம்பிக்கை கிடைப்பதை உளவியலில் சக்சஸ் மொமெண்டம் “Success Momentum” என்கிறார்கள்.

குடியை நிறுத்துகிறேன், கோபத்தை நிறுத்துகிறேன் என்று ஒரே நாளில் தங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு முயன்று பலரும் தோல்வி அடைகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பது எளிது. இதை ஹேபிட் ஃபார்மேஷன் சைக்காலஜி என்பார்கள்.

காய்ஸன் தத்துவத்தை சொந்த வாழ்க்கை, பணியிடம், சேமிப்பு, குழந்தை வளர்ப்பு என்று எல்லா இடங்களிலும் செயல்படுத்த முடியும். வெற்றிக்கு அவசரப்பட வேண்டாம், ஒப்பீடுகள் வேண்டாம். தினமும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினால் போதும், அதுவே நல்ல வளர்ச்சி என்கிறது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment