எட்டு அச்சங்களில் இருந்து விடுதலை

கேள்வி : தொழிலில் நஷ்டம் அடைந்துவிட்டேன். எல்லோரும் என்னை கேவலமாகப் பார்க்கிறார்கள். இந்த அவமானத்தில் இருந்து மீள்வது எப்படி..?

  • சி.விஜயகுமார், திருவனந்தபுரம்.

ஞானகுரு :

மனிதர்களின் பெரும்பாலான அச்சங்கள் கற்பனையானவை. அதாவது நஷ்டத்தால் எதிர்காலம் அழிந்துவிட்டது, எல்லோரும் கேவலமாகப் பார்க்கிறார்கள் என்பவை எல்லாமே நிஜம் அல்ல, கற்பனைகள். மனிதர்களால் வெல்லக்கூடிய எட்டு அச்சங்களைப் பார்க்கலாம்.

நஷ்டம்

பணம் இழக்கலாம். தொழில் தோற்கலாம். சொத்துகள் போகலாம். ஆனால் எல்லாமே மீண்டும் சம்பாதிக்க முடியும். திவாலாகி மீண்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதனால் பணத்தை இழப்பது வாழ்க்கையை இழப்பது அல்ல.

அவமானம்

அவமானத்திற்கு எல்லோரும் அஞ்சுகிறார்கள். உண்மை என்னவென்றால், மக்கள் அடுத்தவர்கள் பற்றி அதிகம் ஞாபகம் வைத்திருப்பதில்லை. இன்றைய அவமானம் ஒரு வாரத்தில் மறைந்துவிடும். எனவே, அவமானத்தை மனதில் சுமக்க வேண்டாம்.

நிராகரிப்பு


காதல், வேலை, வாய்ப்பு, உறவுகளில் நிராகரிப்புக்கு அஞ்சுகிறார்கள். தலைவர்கள்,  கலைஞர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் கூட நிராகரிக்கப்படுகிறார்கள். நிராகரிப்பு என்பது தகுதியற்றவர் என்பதற்கான சான்று அல்ல; சரியான இடத்தை அடையவில்லை என்பதே அர்த்தம்.

தோல்வி


ஒரு தோல்வியால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று முடிவுக்கு வருகிறார்கள்.    தோல்வி என்பது பாதையின் ஒரு பகுதி மட்டுமே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்பவர்கள் வெல்கிறார்கள். தோல்வி என்பது முடிவல்ல, ஒரு திருப்பம்.

விமர்சனம்


சிலர் பாராட்டுவார்கள், சிலர் விமர்சிப்பார்கள். எனவே, பிறர் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவதற்குப் பதிலாக, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில்தான் கவனம் இருக்க வேண்டும்.

பிரிவு


வாழ்க்கையில் எல்லோரும் கடைசி வரை ஒன்றாகப் பயணிக்கப் போவதில்லை. சிலர் பாடம் கற்றுத்தகிறார்கள். சில பிரிவுகள் வேதனை தரலாம். ஆனால் காலம் எல்லா காயங்களையும் ஆற்றிவிடும்.

தவறுகள்


தவறு செய்வது மனித இயல்பு. நாம் உயிருடன் இருக்கும் வரை தவறு செய்வதும், அதிலிருந்து மீண்டு வருவதும் சாத்தியம். தவறு என்பது வாழ்க்கையின் ஆசிரியர்.

மரணம்


செல்வந்தர், ஞானி, கலைஞர், மருத்துவர் என்றாலும் முடிவு மரணம் மட்டும்தான்.   இதில் யாரும் தப்பிக்கவோ, தவிர்க்கவோ முடியாது. எனவே, மரணம் வரும் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதே புத்திசாலித்தனம்.

மனிதர்கள் செய்த தவறுகளைவிட, செய்யாமல் விட்ட வாய்ப்புகளையே அதிகம் நினைத்து வருந்துகிறார்கள். எனவே, தோல்வி, அவமானம், பிரிவு என எதுவும் நிரந்தரமானவை அல்ல. பணத்தை மீட்டெடுக்கலாம். அவமானத்தை மறந்துவிடலாம். தோல்வியிலிருந்து எழுந்துவிடலாம். தவறுகளைச் சரிசெய்துவிடலாம். சிலரை இழந்தாலும் புதிய மனிதர்கள் வாழ்க்கைக்குள் வருவார்கள்.

அதனால் இழப்பது மிகவும் குறைவு; பெறுவதற்கு அளவற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment