முதியோர் ஓய்வு நேரம் பிஸியாக இருக்கட்டும்

மகிழ்ச்சிக்கு சிம்பிள் டிப்ஸ்

ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருந்த மனிதர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வது என்பதே பிடிபடுவதில்லை. அதனாலே மீண்டும் ஏதேனும் வேலைக்குப் போகலாமா என்று தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.

பொழுது போகவில்லை என்று சொல்லும் நபர்களும் பொழுது போதவில்லை என்ற அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

  1. விருப்பப்பாடம்

பெற்றோர் விருப்பப்படியே பெரும்பாலான நபர்கள் பாடம் எடுத்துப் படித்திருப்பார்கள். இப்போது தடை சொல்வதற்கு யாரும் இல்லை. எனவே, விருப்பமான வரலாறு, புவியியல், கணிதம், உயிரியல், தமிழ், ஆங்கிலம் போன்றவற்றைக் கற்கத் தொடங்குங்கள். இந்த வயதில் படித்து என்ன செய்யப்போகிறோம் என்று நினைக்காமல் கற்கத் தொடங்குங்கள். கல்விக்கு எல்லை இல்லை,  

  • ஆவணங்கள்

சினிமா, பாடல்கள் போன்றவை ஒரு கட்டத்தில் போரடித்துவிடும். எனவே, உங்களுக்குப் பிடித்த ஆவணப்படங்களை தேடிப்பிடித்து பாருங்கள். நேஷனல் ஜியோகிராஃபிக் ஆவணப்படங்களைப் பார்க்க வயது ஒரு தடையல்ல.

  • வேலையை மறந்துவிடுங்கள்

இதுவரை நீங்கள் பார்த்த வேலை, பழகிய மனிதர்கள், அது தொடர்பான நினைவுகள் தொந்தரவு தரலாம். எனவே, இவற்றை முழுமையாக மறந்துவிட்டு, அந்த துறையில் இருந்து முழுமையாக வெளியேறுங்கள். அப்போதுதான் புதிய துறைகளில் மகிழ்ச்சியைப் பார்க்க முடியும்.

  • நமக்கு நாமே முக்கியம்

இந்த உலகத்திற்கு நாம் எந்த வகையிலும் முக்கியம் இல்லை, இந்த குடும்பத்துக்கு நாம் முக்கியம் இல்லை என்ற உண்மை முகத்தில் அடித்தது போன்று புரியும். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். யாருக்கு முக்கியம் இல்லை என்றாலும் நமக்கு நாமே முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான், வாழ்வதற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.

  • உடல்நலன்

ஓய்வுக்காலம் என்பது உடல்நலனை மீட்பதிலும், யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு என நமக்குப் பயனுள்ள வகையில் வாழக் கற்றுக்கொள்வதிலுமே இருக்கிறது.

மற்றவர்களுக்காக, நிறுவனத்திற்காக வாழ்ந்ததை நிறுத்திவிட்டு, இனி உங்களுக்குப் பிடித்த வகையில் வாழத் தொடங்குங்கள், உங்கள் சிந்தனைக்கு ஏற்ற அக்கம்பக்கத்து நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

வாழும் வரை மகிழ்ச்சி அடையலாம்.

Leave a Comment