டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை
டிப்ரசன் என்பதுதான் இப்போது பெருகிவரும் பிரச்னை. சின்னக் குழந்தை கூட டென்ஷன், டிபரசன் என்று பேசத் தொடங்கியுள்ளனர். இதற்கு ஒரு வித்தியாசமான வழிகாட்டுதல் காட்டுகிறார்.
நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொறுத்து நமது மன அமைதி அமைகிறது.
இருப்பினும் குழந்தையாய் பேதையாய் இருக்கும் போது நாம் உறங்கிய உறக்கம் இப்போது நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப்போகிறது. உறக்கம் என்பது இயற்கையானது
அந்த உறக்கம் வரமறுப்பது என்பது மனநோயின் ஆரம்ப அறிகுறி. குழந்தை பருவத்தில் எளிதாக வந்த உறக்கம் ஏன் வயதாக வயதாக வரமறுக்கிறது? இதற்கு உடல் சார்ந்த மூளையில் உள்ள ரசாயன மாற்றங்கள் காரணமாக இருக்கின்றன.
இருப்பினும் நம் மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவையிரண்டையும் தனித்தனியாக பார்க்கவே முடியாது. உடலும் மனமும் ஒன்றோடு இணைந்ததே நம் உயிர் வாழ்க்கை. மனதின் நோய் உடலையும் உடலின் நோய் மனதையும் பாதிக்கிறது. மன அமைதியின்மை என்பது பெரும்பாலும் நம்மிடம் இருப்பதில்லை. ஆனால் அது நம்மீது நமது சமூகத்தால் திணிக்கப்படுகிறது

ஒருவரை நம்மோடு நாம் ஒப்பீடு செய்யும் போது நமது மன அமைதி கெடுகிறது. உலக வாழ்க்கையை “போட்டி மனப்பான்மையுடன் ” தொடர்ந்து அணுகுவதால் நமது மன அமைதி கெடுகிறது. நம்மை சுற்றி உள்ள ஒவ்வொருவரையும் போட்டியாளராக அணுகுவது மன அமைதிக்கு ஊறு செய்கிறது.
நமது வாழ்க்கை நமக்கு கிடைத்து செல்வங்கள். நமக்கு இறைவன் அருளியவற்றின் மீது தொடர்ந்து திருப்தியின்மை நிலவுவது நம்மை காலப்போக்கில் மனநோய்க்கு தள்ளுகிறது. இவற்றுக்கெல்லாம் நமது உடல்..மூளை.. ரசாயனங்கள் மட்டுமே காரணம் என்று கூறி நமது பங்கை தட்டிக்கழித்து விட முடியாது.
நாம் அனைவரும் வாழ்க்கையை ஒரு ரேஸ் போன்ற கண்ணோட்டத்தில் அணுகுகிறோம். ரேஸ், ஓட்டப்பந்தயம் போன்ற கண்ணோட்டத்தில் அணுகுவதால் அருகில் இருப்பவனையும் பார்த்து அவன் முந்தியா நான் முந்தியா என்று ஓடவேண்டியிருக்கிறது.
மேலும் அடுத்தவன் ட்ராக்கில் ஓடும் பழக்கம். அடுத்தவன் காலை வாரிவிடும் பழக்கமும் வருகிறது. வாழ்க்கையை ரேஸ் போன்று அணுகும் போது எப்படியாவது அடுத்தவனை முந்தி நாம் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி வருகிறது. அந்த வெறி கண்முன் இருக்கும் அத்தனையையும் மறைக்கிறது. அந்த வெறி “வெற்றியை” மட்டுமே கண்முன் காட்டுகிறது. தோல்வியை ஏற்க மறுக்கிறது. இதன் தொடர்ச்சியாக மன அமைதி சிதைகிறது.
ஆனால் உண்மை நிலை என்ன?
“வாழ்க்கை”யை என்றும் மாரத்தான் ஓட்டமாக தான் ஓட வேண்டும். மாரத்தானில் யாருக்கும் வெற்றி தோல்வி கிடையாது. அருகில் ஓடுபவர் போட்டியாளர் அல்ல. அவரும் சக பயணி.
இப்படி நினைக்கும் போது, நம்முடன் ஓடும் சக பயணிக்கு தாகம் ஏற்பட்டால் நீர் தரலாம். புண் ஏற்பட்டால் மருந்திடலாம். இருவரும் சேர்ந்து ஓடி பயண தூரத்தை கடக்கலாம்.
சக பயணிக்கு நம்மைப்போன்று ஓட காலணிகள் இல்லையென்றால் அவருக்கும் நம்மிடம் இருக்கும் எக்ஸ்ட்ரா காலணிகளை தரலாம். அவர் அவரிடம் இருக்கும் தேவைக்கு மீறிய தண்ணீரை நமக்கு பருகக்கொடுப்பார்.
மாரதான் ஓடுபவர்கள் யாரும் மிக வேகமாக அவசரமாக ஓடமாட்டார்கள், நிதானமாகவே ஓடுவார்கள். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நிதானமாக பார்த்து ரசித்து ஓடுவார்கள். காதுகளில் தனக்கு பிடித்தவற்றை ஹெட்போனில் மாட்டிக்கொண்டு ரசித்து ஓடுவார்கள்.நடப்பார்கள்.
அடுத்தவன் நம்மை விட வேகமாக ஓடுகிறான் என்றால் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். இப்படியான ஒரு வாழ்க்கையை கற்பனை செய்து பாருங்கள். மன அமைதி பறிபோகாமல் நமக்கு உறக்கம் எளிதாக வரும். பல மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபட முடியும்.
