ஞானகுரு பதில்கள்
ஆரோக்கிய உடல், அமைதியான மனம், போதிய பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைக்க வழி காட்டுபவர் ஞானகுரு. வாசகர்கள் கேள்விக்கு அவரது பதில்கள் இங்கே….
கேள்வி : ஆபத்து நேரத்தில் தற்காப்புக்கலை எந்த அளவுக்கு உதவி செய்யும்..?
- என்.பரமேஸ்வரன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஞானகுரு :
எந்த ஒரு உயிரினமும் தன்னுடைய இனத்தைப் பார்த்து அச்சப்படுவதே இல்லை. ஆனால், மனிதர்கள் மட்டுமே பிற மனிதரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தற்காப்புக் கலை கற்றுக்கொள்ளும் அவசியம் இருக்கிறது.
தற்காப்புக் கலை ஓரளவுக்கு நம்பிக்கை தரும். இதன் மூலம் தனி ஒரு நபரை வேண்டுமானால் சமாளிக்கலாம். கூட்டமாக எதிரிகள் வரும்போது தப்பிச்செல்வதே புத்திசாலித்தனம். அதேபோல் ஆயுதத்துடன் ஒருவர் வரும் நேரத்திலும் தற்காப்புக் கலையும் கை கொடுக்காது. பணம், நகை, செல்போன் ஆகியவற்றை விட உயிர் முக்கியமானது. ஆகவே, ஆபத்து நேரத்தில் உயிருக்கு எது பாதுகாப்பானதோ, அந்த முடிவையே எடுங்கள்.
கேள்வி : உடல் சக்திக்கு உணவு தேவைப்படுவது போன்று மனம் வலிமை பெறுவதற்கு என்ன தேவை..?
- ஏ.மாலினி தேவி, சசிநகர்.
ஞானகுரு :
சிந்தனைகளையே மனம் என்று சொல்கிறாம். எனவே, மனம் சக்தி பெற வேண்டும் என்றால் நல்ல சிந்தனைகளை, நம்பிக்கைகளை, பாசிடிவாக மனதில் விதைக்க வேண்டும். இதனை சாதிக்க வேண்டும் என்றால் பேராசை, ஒப்பீடு, அச்சத்தைக் கைவிட்டு, இன்றைய நாளில் வாழ வேண்டும்.
