ஞானகுரு பதில்கள்
ஆரோக்கிய உடல், அமைதியான மனம், போதிய பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைக்க வழி காட்டுபவர் ஞானகுரு. வாசகர்கள் கேள்விக்கு அவரது பதில்கள் இங்கே….
கேள்வி : மனதில் அன்பு இருக்கிறது. ஆனால், மனைவி, பிள்ளைகளிடம் அதை சொல்வதற்கு முடியவில்லை. ஏன்..?
- எஸ்.பெரியசாமி, மேல்மருவத்தூர்.
ஞானகுரு :
ஆண் என்றால் கம்பீரம், குடும்பத் தலைவர் அதிகம் பேசக்கூடாது, அன்பை வெளிப்படுத்துவது பலவீனம் என்று நிறைய ஆண்கள் கற்பனைக் கோட்டை கட்டிக் கொள்கிறார்கள். அன்பாக இருப்பதை வார்த்தையால் சொல்லத் தேவையில்லை, அவர்களுக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறேன் என்பதிலிருந்தே புரிந்துகொள்வார்கள் என்றே பலரும் நினைக்கிறார்கள். இது சரியான செயல் இல்லை.
சிப்பிக்குள் முத்து இருக்கிறது என்பதை திறந்து காட்டினால் மட்டுமே தெரியவரும். அதேபோல் நல்ல புத்தகம் என்பதும் படித்துப்பார்த்தால் மட்டுமே தெரியவரும். எனவே அன்பான நபர் என்பதை வார்த்தையாலும், செய்கையாலும் பிறருக்குத் தெரிவிக்க வேண்டியது மிகமிக அவசியம்.
அன்பு என்பது ஒரு விதை போன்றது. அதை அப்படியே வைத்திருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. மண்ணில் புதைத்து, நீர் ஊற்றி, பாதுகாத்தால் மட்டுமே அன்பு என்பதை அனுபவிக்க முடியும். எனவே, சின்னச்சின்ன வார்த்தைகளில், பரிசுகளில், தொடுதல் மூலமாக அன்பைக் காட்டிக்கொண்டே இருங்கள். அன்பு என்பது அவமானம் அல்ல, வெகுமானம்.
