வெள்ளத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்!

என்ன செய்தார் சைதை துரைசாமி – 454

சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார் மேயர் சைதை துரைசாமி. இதுகுறித்து மாமன்றக் கூட்டத்தில் பேசினார்.

மேயர் சைதை துரைசாமி உரையில், ‘’சென்னை பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. அதன்படி முதல்வர் அறிவித்த நிவாரண உதவித் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

வெள்ளப் பாதிப்பால் குடிசைகளை இழந்த  குடும்பத்தினருக்கு குடிசைக்கு 5,000 ரூபாயும், சிறப்பு நிவாரணத் தொகை 5,000 ரூபாயுமாக 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதுதவிர 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை வழஙகப்பட்டுள்ளது.

நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணமும் 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி, சேலை வழங்கப்பட்டது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு பார்க்காமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

கன மழை வெள்ளத்தால் கால்நடைகளை இழந்தவர்களுக்கு, ஒவ்வொரு கால்நடைக்கும் ரூ.30,000 இழப்பீடும், ஆடு, பன்றி இழப்புக்கு ரூபாய் 3,000 வீதமும், கோழி இழப்புக்கு ரூ.100 வீதமும் வழங்கப்பட்டன.

வெள்ளத்தால் வீடு இழந்த அனைவருக்கும் வீடு வழங்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய கரையோரம் வசித்த மக்களுக்கு குடிசைகளுக்கு மாற்றாக நிரந்தர வீடுகள் கட்டித்தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 50,000 வீடுகளும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 50,000 வீடுகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் முதல்கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள், அடையாறு கரையோரங்களில் வசித்த குடிசை மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. குடிசைப் பகுதி மக்கள் இடமாறுதல் செய்யும்போது, இடமாற்றப் படியாக 5,000 ரூபாயும், மாதம் 2,500 வீதம் ஓர் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் பிழைப்புப் படியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது…’’ என்றார்.

நாளை பார்க்கலாம்.

Leave a Comment