சிம்பிள் ஸ்டெப்ஸ்
ஓய்வில் இருந்த ஞானகுருவை சந்திக்கவந்தார் மகேந்திரன். ‘’ஒருசிலர் மட்டுமே சாதனையாளராக மாறுகிறார்கள். அப்படிப்பட்ட சாதனை மனிதர்களின் வெற்றி ரகசியம் என்ன..?’’ என்று கேட்டார்.
‘’தங்கள் பலம் எது, பலவீனம் எது என்பதை சாதனையாளர்கள் தெளிவாக அறிந்திருப்பார்கள். தன் பலத்தை அதிகரித்து, பலவீனத்தை பிறருக்குத் தெரியாமல் மறைத்துவைப்பார்கள். அதனால்தான், அவர்களை எதிரிகளால் எளிதில் வெல்ல முடிவதில்லை…’’ என்றார் ஞானகுரு.
‘’பலவீனத்தை வெளியே காட்டாமல் இருக்க முடியுமா..? எளிதாக கண்டுபிடித்துவிடுகிறார்களே….’’
‘’பிறர் கண்டுபிடிக்கவே தேவையில்லை, பெரும்பாலோர் தாங்களாகவே பலவீனத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கின்றனர். இதனால், அவர்களுடைய திறமையை வெளியே காட்டவே முடியாமல் தோல்விகளைச் சந்திக்க நேரிடுகிறது.
எப்போதாவது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், நம் எதிரேயிருக்கும் நபரைவிட, நாம் தாழ்வாக உணர்வது தாழ்வு மனப்பான்மை அல்ல. எப்போதும், எவர் முன்பும், நான் அவருக்கு நிகர் இல்லையோ என்று பயந்து ஒதுங்குவதுதான் தாழ்வு மனப்பான்மை.
தாழ்வு மனப்பான்மை என்பது முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்ட விஷயம். அது, எல்லோருக்கும் ஏதேனும் ஒரு கணத்தில் வரவே செய்யும். திறமைசாலிகள் அதனை மறைத்துவிடுகிறார்கள். மற்றவர்களால் முடிவதில்லை. தாழ்வு மனப்பான்மை உள்ளவருக்கு வாழ்க்கையில் எல்லாமே இருந்தாலும், எதுவும் நிறைவாகத் தோன்றாது, குறிப்பாக நிம்மதி இருக்காது.
பொதுவாக தாழ்வு மனப்பான்மை இளம்வயதிலேயே உருவாகிறது. பெற்றோர், ஆசிரியர், தோழர்கள் மீண்டும் மீண்டும் சீண்டும்போது தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். ஆனால், இது தவிர்க்கக்கூடியது, வெற்றிபெறக் கூடியதுதான்.
ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்திலிருந்து வந்த தன்னை யாரும் மதிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தால், அது தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடும். தன்னிடம் உள்ள குறை, விபத்து அல்லது அதிர்ச்சியான சம்பவத்தின் பாதிப்பும் தாழ்வு மனப்பான்மைக்குக் காரணமாக அமையலாம். இந்த எண்ணம் உள்ளவர்கள், யாரிடமும் அதிகம் பேச மாட்டார்கள். மற்றவர்களிடமிருந்தும் ஒதுங்கியே வாழ்வார்கள். இவர்கள் எப்போதும் வேண்டாத சிந்தனைகளில் மூழ்கித் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்வார்கள். இதனால் கல்வி, உத்தியோகம், உடல் நலன் ஆகியன பாதிக்கப்படும்.
இதிலிருந்து விடுபடுவது மிக எளிது. ஆம், எந்த காரணத்தைக் கொண்டும் பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது. நம்மை நாம் மதிக்க வேண்டும். நான் நல்லவன், வல்லவன், சிறந்தவன் என்று நம் மீது நம்பிக்கை வைத்தால் போதும், தாழ்வு மனப்பான்மை போய்விடும்.
நம்மை அடுத்தவர் மதிக்கவில்லை என்பதால் வருவது தாழ்வு மனப்பான்மை அல்ல, நம்மை நாம் மதிக்காததினால் வருவதுதான் தாழ்வு மனப்பான்மை. அறியாமையும், அடிமைத்தனத்தையும் ஒழித்தால் தாழ்வு மனப்பான்மை வராது. ஆகையால், முதலில் நம்மை, நாமே மதிக்க வேண்டும். நம்மைப்போல் யாரும் இல்லை. யாரைப் போலவும் வாழ நான் வரவில்லை. அப்படியிருக்கையில், நான் ஏன் அடுத்தவர்போல வாழ நினைக்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும்.
நான் யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல, நான் யாருக்கும் உயர்ந்தவனும் இல்லை. எல்லோரும் என்னைப் போல ஒருவர்தான் என்ற சிந்தனையை மனதில் ஆழப்பதிந்துவிட்டால், தாழ்வு மனப்பான்மை ஓடியே போய்விடும்…’’ என்றார் ஞான்குரு.












