ஞானகுரு பதில்கள்
கேள்வி : திறமைசாலிகள் சிலர் மதுவுக்கு அடிமையாக இருப்பது பற்றி தங்கள் கருத்து..?
- டி.வனராஜன், கோட்டையூர்.
ஞானகுரு :
மது குடிப்பதற்கும் அடிமையாக இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. திறமைசாலியாக இருந்தால் அவர் நிச்சயம் மதுவுக்கு அடிமையாக இருக்க மாட்டார். தற்செயலாக அல்லது தகுதிக்கு மீறி வெற்றி பெற்ற சிலர்… தோல்வி வரும் நேரத்தில் அதிலிருந்து தப்பிக்கத் தெரியாமல் மதுவில் விழுந்து அடிமையாவதுண்டு. மதுவுக்கு மட்டுமல்ல அன்புக்கு, ஜாதிக்கு, நாட்டுக்கு, பக்திக்கு என எதற்கு அடிமையானாலும்… அதன்பிறகு தோல்வி மட்டுமே கிடைக்கும்.
கேள்வி : ஞானகுருவுக்கு எதன் மீது அதிக வெறுப்பு… எதன் மீது அதிக விருப்பு..?
- எஸ்.கண்ணபிரான், முல்லை தெரு.
ஞானகுரு :
நிறைய நிறைய தெரிந்துகொள்வதற்கு ஆசைப்படும் மனிதர்களைக் காணும்போது ஆர்வமாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. அதேநேரம், தெரிந்துகொண்ட எதையும் கடைபிடிக்காத குணம் சூடாக்குகிறது.
கேள்வி : பெண்களை பார்த்து முதலைக்கண்ணீர் வடிக்காதே என திட்டுவது ஏன்..?
- ஏ.கருப்பசாமி, பாண்டியன்நகர்.
ஞானகுரு :
முதலைகள் சாப்பிடும் தருணங்களில் தன் உடலில் அதிகப்படியாக சேர்ந்துள்ள உப்பை கண்கள் வழியே வெளியேற்றுகின்றன. அதை கண்டால் சாப்பிட்டுக்கொண்டே அழுவது போல் தோன்றும். அது நிஜ அழுகை இல்லை என்பதால் போலியாக அழுபவர்களைப் பார்த்து முதலைக் கண்ணீர் வடிப்பதாகச் சொல்கிறார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் எளிதில் அழுகை வந்துவிடுகிறது. ஆனால், இது நிஜம்.