• Home
  • உறவுகள்
  • உறவினருக்குப் பணம் கொடுங்கள்… கடன் கொடுக்காதீர்கள்

உறவினருக்குப் பணம் கொடுங்கள்… கடன் கொடுக்காதீர்கள்

Image

உறவுகள் நீடிக்கும் வழி

ஒருவர் பணம் சம்பாதிக்கும் முன்னரே உருவானதுதான் உறவுகள். அப்படிப்பட்ட உறவுகளில் ஒருவருக்கு ஏதேனும் அவசியம், அவசரம் எனும்போது பணம் கடன் கொடுக்கலாமா? என்ற கேள்வியை எதிர்கொள்ளாத மனிதர்கள் யாருமே இல்லை. ஆனால், இதனை வெற்றிகரமாக சமாளிப்பவர்கள் மிகமிகக் குறைவுதான். ஏன் தெரியுமா? அவர்கள் உறவின் மதிப்பை பார்ப்பார்கள், பணத்தின் மதிப்பை மறந்துவிடுவார்கள். இரண்டையும் சீர் தூக்கி கடன் கொடுப்பவர் மட்டுமே நிம்மதியாக இருக்க முடியும்.

உங்கள் செலவுகளுக்கு மீறிய பணம் கைவசம் அல்லது வங்கியில் இருக்கிறதா என்பதில்தான் இந்தக் கேள்விக்கான முதல் பதில் உள்ளது. ஆம், உங்களிடம் பணம் இல்லாத பட்சத்தில், யாருக்கும் எந்த காரணம் கொண்டும் கடன் தர வேண்டியதில்லை. வேறு எங்காவது கடன் வாங்கி, கடன் கொடுப்பதில்லை என்பதில் எப்போதும் உறுதியுடன் நிற்க வேண்டும்.

கடன் எதற்காக..?

அதேபோன்று உறவினர் என்ன காரணத்திற்காக கடன் கேட்கிறார் என்பது அடுத்த கேள்வி. கல்விக்கு, திருமணத்துக்கு, மருத்துவமனைக்கு போன்ற அத்தியாவசிய செலவு என்றால் கொடுக்கலாம். கார் வாங்கப் போகிறோம், டூர் போகிறோம் என்பது போன்ற வெட்டிச் செலவு என்றால் இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிடலாம்.

அடுத்ததாக, கடன் கொடுத்தால் வசூல் செய்ய முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அவரால் எப்போதும் கடனை திருப்பித்தர முடியாது, அதே நேரம் நல்ல உறவினர் என்றால், உங்களால் முடிந்த சிறு தொகையை கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடலாம். அது, வந்தால் லாபம், வரவில்லை என்றால் உறவுக்கு செய்த உதவி என்று நிம்மதி அடையலாம்.

நாணயஸ்தரா..?

நிச்சயம் பணத்தை திருப்பிக் கொடுப்பார், நாணயஸ்தர் என்று தெரிந்தால் மட்டும் கடன் கொடுக்கலாம். அதேநேரம், எப்போது திரும்பக் கொடுப்பார் என்று கேட்டு, சரியாக அந்த நேரத்தில் திருப்பிக் கேட்பதற்கு தயங்கவே கூடாது. கேளாத பணம் வீடு வந்து சேராது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் கொடுப்பது பணம் மட்டுமல்ல, உங்கள் நம்பிக்கையையும். அதனால், கடன் என்றால் நேரத்துக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டுமே தவிர, எல்லா நேரமும் இல்லை என்றும் சொல்ல வேண்டாம், இருக்கிறது என்று கொடுக்கவும் வேண்டாம்.

Leave a Comment