நடிகர் ஒய். ஜி. மகேந்திரன்
நாடக உலகில் 64 ஆண்டுகள், திரையுலகில் 54 ஆண்டுகள், 500 திரைப்படங்கள், 10 ஆயிரம் மேடைநாடகங்கள் என்று இன்றும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஒய். ஜி மகேந்திரன்,தனது ஆரோக்கிய ரகசியங்களை பகிர்ந்துகொள்கிறார்.
“எனது ஆரோக்கியத்தில் ரகசியம் என்ன? இப்படிக் கேட்டால் அப்படி ஒன்று இருக்கிறதா என்ன என்று நினைப்பேன். நான் என்றும் சுறுசுறுப்பாக இருக்கிறேன், நல்ல உடல் நலத்துடன், மனநலத்துடன் இருக்கிறேன். இதில் ரகசியம் என்று கேட்டால், அப்படி எதுவும் இல்லை என்று தான் சொல்வேன். இப்படித்தான் எனது பழக்க வழக்கங்கள், எனது வாழ்க்கை முறை இருக்கிறது என்று சொன்னால் யாரும் அதை நம்ப மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை.
நான் இயல்பாக இருக்கிறேன். எனது ஆரோக்கியத்தின் ரகசியம் எனது மனநலம்தான். என் மனதை எப்போதும் நான் இலகுவாக வைத்திருக்கிறேன். மனதில் எந்த அழுக்கும் சேராமல் பார்த்துக் கொள்கிறேன். அடுத்தவர்கள் பற்றி நினைப்பதே கிடையாது, அடுத்தவர்கள் பற்றி பொறாமைப்படுவதோ, அவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதோ, அவர்களை தாழ்த்த வேண்டும் என்றோ, வீழ்த்த வேண்டும் என்றோ நான் நினைப்பதே கிடையாது

.நீங்கள் ஒன்றை நினைத்துப் பாருங்கள் எல்லாரும் அடுத்தவர்கள் பற்றித் தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அதுதான் அவர்களது ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. நான் மற்றவர்களைப் பற்றி என் மனதில் போட்டுக் கொள்வதே இல்லை.உண்மையைச் சொன்னால் அந்த மனம் தான் எனது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்பேன். நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. எனவே பொறாமையும் உருவாவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனதில் அழுத்தம் இருந்தால் முகத்தில் சுருக்கம் வரும். மனதில் உள்ள கவலையும் அழுத்தமும் பொறாமையும் முகத்தில் தெரியும். அப்படி எதுவும் எனக்குள் இல்லை என்பதால் எனது முகம் தெளிவாக இருக்கிறது
உணவுப் பழக்க வழக்கம் என்றால் நான் சுத்த சைவம். குறிப்பாக இந்த ஐந்தாறு ஆண்டுகளாக முழு சைவமாகிவிட்டேன். நான் எப்போதும் எனக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவேன். அதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் வைத்துக் கொள்வதில்லை. விரும்பிய உணவை விரும்பிய நேரத்தில் சாப்பிடுவேன். அதனால் எந்தப் பிரச்சினையும் எனக்கு வந்ததில்லை. பிடித்த எல்லாவற்றையும் சாப்பிடுவேன். ஆனால் அதற்கு ஒரு அளவு வைத்துக் கொள்வேன்.
எனக்கு மிக மிகப் பிடித்தது என்றால் உருளைக்கிழங்குதான். அதை அளவில்லாமல் சாப்பிட மனம் விரும்பினாலும் அதற்கு ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொள்வேன். அதனால் அதைக்கூட நான் அளவோடு தான் சாப்பிடுவேன். நான் நாடகம் மேடையேற்றுவதை முன்னிட்டு உலகம் முழுவதும் சுற்றி இருக்கிறேன். உலகில் தமிழ் பேசும் மக்கள் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். எந்தெந்த நாடுகள் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
மலேசியா, சிங்கப்பூர் தொடங்கி அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, கென்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் என்று உலகில் தமிழர்கள் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் நான் சென்று நாடகங்கள் மேடை ஏற்றியிருக்கிறேன். அமெரிக்காவுக்கே 16 முறை சென்றிருக்கிறேன். மலேசியா சிங்கப்பூருக்கு எத்தனை முறை என்று கணக்கே கிடையாது.
இவ்வளவு நாடுகள் சுற்றிய போதிலும் எல்லா நாடுகளிலும் நான் சைவ உணவுதான் சாப்பிட்டிருக்கிறேன். சைவ உணவு உலகம் பூராவும் கிடைக்கும். நான் தென்னிந்திய உணவுகள் மட்டுமல்ல வட இந்திய உணவுகளும் விரும்பிச் சாப்பிடுவேன். தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை எனக்குப் பிடிக்கும் தான். அதற்காக வட இந்திய சப்பாத்தியும் விட்டு வைப்பதில்லை. சாப்பிடுவேன். சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிடுவேன், தாய்லாந்து உணவும் சாப்பிடுவேன். எனக்கு எல்லாமே உடலுக்கு ஒத்துக்கொள்ளும். காரணம் எல்லாமே சைவமாக இருக்கும் .ஒரு வரி தான் மனதுக்குப் பிடித்து சாப்பிட்டால் உடலுக்கு ஒன்றும் செய்யாது.

தூக்கம் பற்றி எனது நடைமுறை இதுதான். மறுநாள் படப்பிடிப்பு இருந்தால் காலையில் 6:00 மணிக்கு எழுந்து விடுவேன். இல்லையென்றால் ஏழெட்டு மணிக்கு தான் எழுவேன். நடைப் பயிற்சி கூட நான் தினமும் என்று முறையாகச் செல்வதில்லை .நேரம் இருக்கும் போது செல்வேன் மற்ற நாட்களில் செல்வதில்லை .எனது ஆரோக்கியத்தின் ரகசியம் மேடை நாடகங்களில் நான் ஈடுபடுவது என்று சொல்வேன். ஏனென்றால் அதற்கான முன் தயாரிப்புகளில் பரபரப்பாக இருப்பேன். நாடகத்திற்கான ஒத்திகைகள் அதற்கான வசனப் பயிற்சி எல்லாம் சிறந்த மனப்பயிற்சி, மனதை ஒரு முகப்படுத்தும் பயிற்சியாகும்.
ஏனென்றால் மேடைகளில் சினிமா மாதிரி ரீடேக் எடுக்க வாய்ப்பில்லை. ஒருமுறை செய்வதை ஒழுங்காகச் செய்ய வேண்டும். எனவே நாடகத்திற்கான ஒத்திகை என்பது நல்ல கவனக்குவிப்பு பயிற்சியாக அமையும். அதன் மூலம் நல்ல நினைவாற்றலுக்கான பயிற்சியும் உடல் இயங்குவதற்கான பயிற்சியும் கிடைப்பதாக நான் உணர்வேன்.
நான் இதுவரை உலகெங்கும் 10 ஆயிரம் மேடைகளில் நாடகம் போட்டு இருக்கிறேன். அதற்கான பயிற்சிகள் செயல்பாடுகளில் நான் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பேன் .காலையில் விரைவாக எழுந்து விடுவேன். நாடகம் அரங்கேற்றும் வரை மிகவும் சுறுசுறுப்பாக இருப்பேன். எப்போதும் என் உடல் புத்துணர்ச்சியோடு இருப்பதாக உணர்வேன். மற்றபடி நான் உடலுக்காக இந்த விதமான பயிற்சிகளும் செய்வதில்லை.
திரைப்படங்களில் நடிக்கும்போது படப்பிடிப்பு நாட்களில் மறுநாள் வேலை இருந்தால் இரவில் விரைவில் தூங்கச் சென்று விடுவேன். இல்லாவிட்டால் சற்று தாமதமாக உறங்கச் செல்வேன். காலையில் தாமதமாக எழுவேன்.
இத்தனை ஆண்டுக்குப் பிறகும் நான் நான் நடித்த மேடை நாடகம் ‘சாருகேசி’ திரைப்படமாக உருவாகி வருகிறது. அதை சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார்.வி ரைவில் திரைப்படமாக வரவுள்ளது. இப்போதெல்லாம் சாருகேசி திரைப்படம் பற்றிய சிந்தனையில்தான் என்மனம் இருக்கிறது.
என் வாழ்க்கையில் பின்பற்றத்தக்க விஷயங்கள் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். மனதில் அழுக்கு சேராமல் பாதுகாத்துக் கொள்வது தான் பெரிய காரியமாக நினைக்கிறேன். அப்படி நீங்கள் மனதில் அடுத்தவர்கள் பற்றி கவலைப்படாமல் சிந்திக்காமல் பொறாமைப்படாமல் வாழ்ந்து பாருங்கள். உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும் இதுதான் நான் சொல்லும் செய்தி” என்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.
சந்திப்பு : அருள்செல்வன்