1984 வரலாற்றுத் தகவல்
எம்.ஜி.ஆர். மறைந்து 37 ஆண்டுகள் ஆனபிறகும் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆருக்கு ஒரு கண்ணீர் கடிதம் எழுதியிருக்கும் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர். கொண்டுவர நினைத்த இளைஞர் அமைச்சரவை பற்றிய தகவலைக் குறிப்பிட்டுள்ளார். இது தான் அவரது கடிதம்.
எங்களின் அவதார புருஷருக்கு…
• இந்தியா முழுக்க எத்தனையோ சிறப்புமிக்க முதல்வர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். ஆனால், உன்னைப் போன்று ஒருவர் கூட கொடை வள்ளலாக வாழ்ந்தது இல்லை. தமிழக மக்களுக்கு நீ செய்த நன்மைகளை எல்லாம் ஏட்டில் சுருக்கிவிட முடியாது. இறையருள் பெற்ற அவதார புருஷர் என்பதாலே நாடகம், சினிமா, அரசியல் என்று கால் பதித்த அத்தனை துறைகளிலும் மகத்தான சாதனைகள் படைத்தாய் தலைவா.
• தமிழகம் இன்று போதையில் தள்ளாடுகையில், அன்று மதுவைக் கட்டுப்படுத்த நீ கொண்டுவந்த கடுமையான சட்டத்தை நினைத்துப் பார்க்கிறேன் தலைவா. முதல்முறை மதுவிலக்கு சட்டத்தில் பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள், மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்ற அவசர சட்டத்தை அன்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்திருந்தால் தமிழகம் இன்றைய அவலநிலைக்கு ஆளாகியிருக்காது. தமிழகத்தைக் காப்பாற்றத் திட்டம் வகுத்த உன் தீர்க்கதரிசனத்தை நினைத்து சமூக ஆர்வலர்கள் வியக்கிறார்கள் தலைவா.
• ஒவ்வொரு வகுப்பிலும் சில மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை, அனைத்து மாணவர்களுக்குமான சத்துணவுத் திட்டமாக மாற்றிய கல்விப்புரட்சி பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது. கட்டிடத் தொழிலாளர், மூட்டை தூக்குவோர், ஆட்டோ ஓட்டுநர், நெசவுத் தொழிலாளர் போன்ற ஒழுங்குபடுத்தப்படாத துறையைச் சேர்ந்தவர்களின் எதிர்கால நன்மைக்காக நல வாரியங்கள் உருவாக்கிய உன் சமூக அக்கறையைக் கண்டு மக்கள் அனைவரும் வியக்கிறார்கள் தலைவா.
• மணியக்காரர், கர்ணத்துக்கு மாற்றாக நீ கொண்டுவந்த கிராம நிர்வாக அலுவலர் பதவிகள், தனியாருக்கு சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் போன்றவை தமிழக மாணவர்களின்; தலையெழுத்தையே மாற்றிவிட்டன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு 50% தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18% என 68% இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய சமூக நீதியாளன் நீ. தமிழ் எழுத்து சீர்திருத்தம், தெருப்பெயர்களில் ஜாதி ஒழிப்பு, தெலுங்கு கங்கைத் திட்டம் போன்றவை எல்லாம் உன் புகழுக்கு மகுடங்கள்.
• ஒரு முதல்வருக்குரிய சம்பளப்படி, பெட்ரோல் செலவு, வீட்டு வாடகைப்படி, இதர மருத்துவச் செலவுகளையும் அரசிடம் இருந்து நீ பெறவில்லை. உன் பாதையில் பயணித்ததாலே நானும் எந்த சலுகையும் பெறாமல் பெருநகர சென்னை மேயராக 5 ஆண்டு காலம் நேர்மையாகப் பணியாற்றியதும், ஏழைகளின் பசி போக்கும் அம்மா உணவகம் அறிமுகப்படுத்தியதும் சாத்தியமானது.
• தொண்டர்களால் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று அண்ணா தி.மு.க.வுக்கு நீ உருவாக்கிய சட்டத்துக்கு, உன்னிடம் நான் விளக்கம் கேட்ட பிறகே, அதில் நீ ஒளித்து வைத்திருக்கும் அரசியல் சூட்சுமத்தைக் கண்டு வியந்தேன். உன் அரசியல் சாணக்கியத்தனத்திற்கு தலைவணங்குகிறேன் தலைவா.
• அதேபோல், அண்ணா தி.மு.க.வுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கு 1984ல் இளைஞர்கள் 12 பேரை அமைச்சர்களாக்குவதற்குத் திட்டமிட்டாய். செங்கோட்டையன், செம்மலை, முனிரத்னம், நாட்றாம்பள்ளி அன்பழகன், எ.வ.வேலு, கே.பி ராமலிங்கம், தொண்டாமுத்தூர் சின்னராஜூ, வேடசந்தூர் பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் எனக்கும் முக்கிய இடம் கொடுத்திருந்தாய். அந்த சீர்திருத்தம் மட்டும் நிறைவேறியிருந்தால் ஆட்சியிலும், கட்சியிலும் எத்தனையோ மாற்றங்கள் வந்திருக்கும். அது நடக்காமல் போனதை நினைத்து வருந்துகிறேன் தலைவா.
- 1989 தேர்தலில் புரட்சித்தலைவி, ஜானகி எம்.ஜி.ஆர் தோல்விக்கும் 1991ல் புரட்சித்தலைவி வெற்றிக்கும் உன் இரட்டை இலை செல்வாக்கே காரணம் என்ற உண்மையை மக்கள் உணர்த்தினார்கள். இன்றும் அந்த செல்வாக்கு நீடிப்பதைக் கண்டு அரசியல் ஆய்வாளர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள் தலைவா.
• 1973-ல் சேவையின் பாதையில் பொதுவாழ்வை அமைத்துக்கொள் என்று எனக்கு அறிவுரை கூறினாய். அதன்படி நான் தொடங்கிய இலவச நோட்டு புத்தகம், இலவச ஜெராக்ஸ் திட்டத்தின் மூலம் மாணவர்களும், பொதுமக்களும் பயன்படுகிறார்கள் என்ற செய்தியை அறிந்து, என்னை அழைத்து, கட்டிப்பிடித்து, உச்சந்தலையில் முத்தமிட்டுப் பாராட்டியதை எண்ணி நெகிழ்கிறேன். இன்று, சொந்த நிதியில் நான் தொடங்கி நடத்திவரும் மனிதநேய இலவச ஐஏஎஸ் அறக்கட்டளையின் சேவையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், அவர்கள் குடும்பமும் பயன்படுவதை அறிந்தால் எப்படி மகிழ்ந்து பாராட்டுவாய் என்பதை எண்ணும்போதே கண்ணீர் சிந்துகிறேன்.
• அ.தி.மு.க. எனும் பேரியக்கம் உருவாக விதை போட்டதும், உனது ஈமக்கிரியையில் சந்தனக்கட்டை போட்டு எரியூட்டும் வாய்ப்பு கிடைத்ததையும் விட மிகப்பெரும் பாக்கியம் எனக்கு வேறு எதுவுமில்லை தலைவா. ‘உயிருடன் இருக்கும் அண்ணா தி.மு.க.வின் முதல் தியாகி’ ‘அண்ணா தி.மு.க.வின் பகத்சிங்’ என்று எனது தியாகத்துக்கு நீ கொடுத்த அங்கீகாரத்தை நினைத்து நினைத்து இன்றும் கண்ணீர் சிந்துகிறேன்.
என்றும் உன் பக்தன்
சைதை சா.துரைசாமி