ADHD விழிப்புணர்வு
சினிமா பிரபலங்கள் பொதுவாகவே, தங்களுக்கு வந்திருக்கும் நோய் பாதிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு விரும்புவதில்லை. இவர்களில் வித்தியாசமானவர் நடிகர் பகத் ஃபாசில்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ், மைக்கேல் ஜாச்சன் போன்ற எத்தனையோ மேதைகள் ஆட்டிசம் எனப்படும் ஏடிஹெச்டி குறைபாடு உள்ளவர்கள்தான். மிகச்சரியாக வளர்க்கப்படும் குழந்தைகள் இந்த குறைகளைத் தாண்டி சானையாளர்களாக மாறிவிட முடியும். ஆனால், நம் நாட்டில் இந்த குறைபாட்டை கண்டுபிடிக்கும் அளவுக்கு பெற்றோர்கள் வளரவில்லை. கண்டுபிடித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இல்லாமல் நாட்களை தள்ளிப் போடுகிறார்கள். அதுவே, நிறைய பிரச்னைகளுக்குக் காரணமாகிறது.
இன்று வெற்றி பெற்றுள்ள எத்தனையோ ஜீனியஸ்கள் இந்த பாதிப்பு உள்ளவர்கள் தான். ஆனால், அதை அவர்கள் வெளிப்படையாக அறிவிப்பதில்லை.
சமீபத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி விழாவில் கலந்துகொண்ட பகத் ஃபாசில் “இந்த பள்ளி வளாக மாணவர்களுக்கு இருக்கும் ADHD குறைபாட்டை குணப்படுத்த முடியுமா என விசாரித்தேன். சிறு வயதில் அந்த குறைபாட்டை கண்டுபிடித்து விட்டால் ஓரளவுக்கு குணப்படுத்த முடியும் என்றார்கள்.
அவர்களிடம், 41 வயதில் கண்டுபிடித்தால் குணப்படுத்த இயலுமா என்று கேட்டேன். ஏனென்றால் நான் 40 வயதில் தான் ADHD குறைபாட்டுக்கு மருத்துவ ரீதியாக சிகிச்சை மேற்கொண்டேன்” என்றார்.
பகத் ஃபாசில் பேசியிருக்கும் ஏடிஹெச்டி பாதிப்பு பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம்.
ஏடிஹெச்டி என்பது மூளையின் கட்டுப்பாடோடு தொடர்புடைய பிரச்னை. ஆட்டிசம், மன இறுக்கம் டிஸ்லெக்சியா போன்ற பல்வேறு வகையினில் அழைக்கப்படும் இந்த பிரச்னையை டெவெலப்மென்டல் கண்டிஷன் (Developmental Condition) என்று சொல்லலாம். ஏனென்றால் பிறந்ததிலிருந்தே இந்தப் பிரச்னை இருக்கும். AD என்பது கவனக்குறைவு (Attention Deficit); HD என்பது ஹைப்பர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Hyperactivity disorder).
ADHD என்பது நோய் அல்ல, அது நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு என்று புரிந்துகொள்ள வேண்டும். அந்த குறைப்பாட்டுக்கான அறிகுறிகள் இரண்டு வகையில் தென்படும். அதாவது மந்தமான செயல்பாடு அல்லது அதீத செயல்பாடு எனப்படும் ஹைபர் ஆக்டிவ்.
குழந்தைகள் விளையாட்டு சார்ந்த நடவடிக்கையில் கவனம் செலுத்த இயலாமல் சிரமப்படுவது, பள்ளிகளில் கொடுக்கப்படும் ஹோம் வோர்க் அல்லது பிற அசைன்மன்ட்களில் அடிக்கடி கவனக்குறைவான தவறுகள் நடப்பது, வேலை மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதில் சிரமப்படுவது, தொடர்ச்சியாக மனம் ஒன்றி ஈடுபடும் பணிகளைத் தவிர்ப்பது அல்லது விரும்பாதது போன்றவை இதற்கான அறிகுறிகளாக இருக்கிறது.
அன்றாட நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தாமை, பிறர் பேசுவதை கவனமுடன் கேட்காமை, ஆசிரியர் சொல்வதை மறந்துவிடுவது, தனது பொருட்களை பத்திரமாகக் கொண்டுவருவதில் அக்கறை காட்டாமை, யார் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமை போன்றவை முதல் வகை குறைபாடாக இருக்கிறது.
ஹைப்பர் ஆக்டிவ் செயல்பாடுகள் வேறு வகையில் இருக்கும். அதாவது, ஒரு இடத்தில் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருப்பது, கை, கால்களை அசைத்துக்கொண்டே இருப்பது, ஒரு இடத்தில் உட்கார முடியாமல் அங்கும் இங்குமாக ஓடுவது, அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய இஷ்டத்துக்கு செயல்படுவது, சத்தமாகப் பேசுவது போன்றவை அதீத செயல்பாடுகளாக கருதப்படுகிறது.
எதனால் ADHD வருகிறது என்பது இதுவரை மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் இது மரபணு ரீதியாகவும், மூளை அமைப்பு மற்றும் செயல்பாடு ரீதியாகவும், சூழலியலில் தாக்கம் சார்ந்தும் ஏற்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, குறை மாதத்தில் பிறப்பவர்கள், ADHD குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை கொண்டவர்கள், கருவில் மது அல்லது மருந்துகளின் பக்கவிளைவுகளால் இது போன்ற பாதிப்பு ஏற்படலாம்.
இரண்டு வகையினரும் பொதுவாகக் கண்களைப் பார்த்துப் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில்சொல்ல மாட்டார்கள். ஒருவர் பேசிக்கொண்டு இருக்கும்போது குறுக்கிட்டு வேறு ஏதேனும் கேட்பார்கள். இது போன்ற பிரச்னைகள் சின்ன வயதிலேயே கண்டறியும் போது சிகிச்சை அளிப்பதும், அவர்களது நடத்தையும் சீர்படுத்துவதும் எளிதாக இருக்கிறது. எனவே, சின்ன வயதில் வித்தியாசமான செயல்பாடுகளைக் கண்டாலே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். வளர்ந்துட்டா சரியாயிடும் என்று அசட்டையாக இருத்தல் கூடாது.
இந்த வகை பாதிப்பை பொதுமக்களிடம் பேசுபொருளாக்கிய பகத் ஃபாசிலுக்கு நன்றி சொல்வோம்.