அப்புறமா சாப்பிடுறேம்மா….

Image
  • வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் வன்முறை

 

அம்மா அல்லது மனைவி சமையலை முடித்துவிட்டு, ‘’சாப்பாடு ரெடி…’’ என்று அழைக்கும்போது, ‘’அப்புறமா சாப்பிடுறேன்…’’ என்று அழைப்பை தட்டிக் கழிக்கும் ஆண் நீங்களா..? உணவுக்கான அழைப்பை நிராகரிக்கும் ஆண்களை அராஜகவாதி என்றும் பெண்களை கொடுமைப்படுத்தும் குரூரப் புத்தி கொண்டவர்கள் என்றும் விமர்சனம் செய்கிறார் ஞானகுரு.

அதெப்படி… காலம் காலமாக இப்படித்தானே நடக்கிறது. என் அப்பாவும் இப்படித்தான் செய்தார்… நானும் அப்படித்தான் செய்கிறேன். வேலையை முடித்துவிட்டு பிறகு சாப்பிடலாம் என்று சொல்வது ஒரு குற்றமா…? என்று அப்பாவி போன்று ஆண்கள் கேட்கிறார்கள். இது ஆணவக் குற்றம் என்பதுகூட தெரியாத அளவுக்கு ஆண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். இது அடிமைத்தனத்தின் நீட்சி என்பதை உணராமல் பெண்ணும் இருக்கிறாள்.

சமையல் கட்டு இன்றும் பெண்களுக்கு மட்டுமே உரித்தான சொத்தாக கருதப்படுகிறது. சில ஆண்கள் பெண்களுக்கு சமையலில் உதவுகிறார்கள் என்றாலும் பெரும் பொறுப்பு பெண்ணுக்கே இருக்கிறது. அங்கு அவள் ராணியாக இருந்தாலும் அதெல்லாம் மாயை மட்டுமே. ஞாயிறு மதியம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மீனை சுத்தம் செய்து, குழம்புவைத்தும், பொறித்துவைத்தும் சூடாக பரிமாறுவதற்கு விரும்பி அழைப்பார் மனைவி. பெரும்பாலும் ஆண்கள் முதல் குரலுக்கு வருவதில்லை. லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாலும், தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு இருந்தாலும் உடனடியாக அழைப்பை ஏற்பதில்லை. சிலர் உடனடியாக பதில்கூட சொல்வதில்லை.  

‘’இதோ பத்து நிமிஷத்துல வந்துடுறேன்…’’ என்பார்கள். அப்பாவை பார்த்து பிள்ளைகளும் அதே போன்று ஒரு பதிலை சொல்லும். விடுமுறை தினத்தில் நிதானமாக சாப்பிடட்டும் என்ற மனநிலையில் அதனை ஏற்றுக்கொள்வார். சமையல் அறையில் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு, ஓய்வு எடுப்பதற்கு மனைவி அக்கடா என்று உட்கார்ந்த சில நிமிடங்களில், ‘’சாப்பாடு போடுங்க’’ என்று குரல் வரும். உடனே பதறியடித்து பெண் செல்ல வேண்டியிருக்கும். இப்போதும் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் வருவதில்லை. எல்லோரையும் மீண்டும் மீண்டும் சத்தம் போட்டு அழைத்து பரிமாற வேண்டியிருக்கும்.

‘’மீன் ஆறிப்போயிருக்கே… கொஞ்சம் லேசா சுட வைச்சுக் குடு…’’ என்று ஆசையாகக் கேட்கும்போது, உடலில் சோர்வு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் மீண்டும் அடுப்பை பற்றவைத்துக் கொடுக்க வேண்டியிருக்கும். அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு மிச்சம் மீதி இருப்பதை சாப்பிட்டுவிட்டு, பாத்திரங்களை ஒதுக்கி முடிப்பதற்குள் அடுத்த ஒரு மணி நேரம் காணாமல் போயிருக்கும். நேரத்துடன் உடல் உழைப்பும் உறிஞ்சப்படுகிறது. ஆகவே, பெண்ணின் அகராதியில் ஞாயிறு என்பது விடுமுறை அல்ல.  

‘’எல்லாம் சமைச்சு வைச்சாச்சு… எடுத்துப் போட்டு சாப்பிட்டுக்கோங்க..’’ என்று சொன்னால், ‘’இவ்வளவு செஞ்சீங்க.. சாப்பாடுகூட பரிமாற மாட்டீங்களா..?’’ என்று அன்பாகவும், அதிகாரமாகவும், அதட்டலாகவும் கேட்பார்கள்.

‘’பொம்பளைக்கு சாப்பாடு சமைக்கிறதைவிட, அதை பாசத்தோடு பரிமாறுவதுதான் முக்கியம்…’’ என்று பாடம் நடத்துவார்கள்.  

சில ஆண்களுக்கு சப்பாத்தியோ, தோசையோ, அடுப்பிலிருந்து நேராக சுடச்சுட தட்டுக்கு வர வேண்டும். முன்கூட்டியே சுட்டு வைப்பதை சாப்பிடவே மாட்டார்கள். இவர்கள் எப்போது சாப்பாட்டு மேஜைக்கு வருவார்கள் என்று பெண் காத்திருந்து சுட்டுத்தர வேண்டும். இதெல்லாம் ஒரு கொடுமை என்று தெரியாமலே பெண்களை கொடுமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

பெண்ணின் அழைப்பை அசட்டை செய்வது சாதாரண அவமானம் மட்டுமல்ல. பெண் என்பவள் எல்லா காலங்களிலும் அடிமை என்பதை அழுத்தம்திருத்தமாக புரியவைக்கும் ஒரு முயற்சி. எனவே, ‘’வேலைக்குப் போகாம வீட்டுலதான இருக்காங்க… இதை செய்றதுதானே பொம்பள வேலை…’’ என்று விட்டேத்தியாகச் சொல்கிறார்கள்.

‘’ஆம்பிளைப் பிள்ளைங்க போலவே பொம்பளைப் பிள்ளைங்களும் லேட்டாத்தானே சாப்பிடுறாங்க…’’ என்றால், அந்த பெண் பிள்ளைகள் செய்வதும் துன்புறுத்தலே. தாயையும் மனைவியையும் அடிமை போன்று நடத்துவதில் அப்படி என்ன இன்பம் கிடைத்துவிடப் போகிறது..? எனவே, ’சாப்பிட வாங்க…’ என்று குரல் கேட்டவுடன், சந்தோஷமாக சாப்பிடச் செல்லுங்கள். சாப்பாடு எடுத்து வைப்பதற்கும், பரிமாறுவதற்கும் உதவி செய்யுங்கள். உணவின் சுவை பற்றி மனம் திறந்து பேசுங்கள்.

அதுதான் பெண்ணுக்கும் உணவுக்கும் தரவேண்டிய மரியாதை.

 

 

 

Leave a Comment