கொண்டாடும் உடன்பிறப்புகள்… திண்டாடும் சீனியர்கள்
செந்தில் பாலாஜி மட்டும் உம் என்று ஒரு வார்த்தை சொல்லி பாஜகவுல சேர்ந்திருந்தால், அந்த வாஷிங் மெஷினில் புகுந்து அடுத்த நாளே வெளியில வந்துருப்பாரு. ஆனா 471 நாள் நெஞ்சுரத்தோட இருந்தாரு பாரு அப்பவே மனுஷன் ஜெயிச்சிட்டாரு. அவரு சாதாரண தியாகி இல்லீங்க என்று தி.மு.க.வினர் கொண்டாடி வருகிறார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே தி.மு.க.வில் அதிக மரியாதை கொடுக்கப்படுகிறது என்று சொல்லும் தீவிர உடன்பிறப்புகளும் இப்போது செந்தில் பாலாஜிக்கு ஜே போடத் தொடங்கியிருக்கிறார்கள். ’’செந்தில் பாலாஜியை தமிழ்நாட்டு ஷிண்டேவாக உருவாக்கி திமுக ஆட்சியை அகற்றுவது தான் பா.ஜ.க. திட்டம் .ஏற்கெனவே கட்சி மாறி பழக்கம் உள்ளவர் என்பதாலே ஸ்கெட்ச் போட்டார்கள்.
ஆனால் பிஜேபி கும்பலின் சூழ்ச்சியால் ஏற்பட்ட / ஏற்படும் அழுத்தங்கள், நீதித் துறையில் அவருக்கு ஏற்பட்ட அநீதிகள் அதை செந்தில் பாலாஜி தரப்பு எதிர்கொண்ட விதம் எல்லாம் கொஞ்ச கொஞ்சமாக தி.மு.கவினருக்கு அவர் மீது மிகுந்த நம்பிக்கை கொடுத்துவிட்டது. ஒரு கட்டத்தில் கட்சிக்காரன் என்று இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியை பார்த்து சொல்லத் தொடங்கிவிட்டார்கள். செந்தில் பாலாஜி பிற்காலத்தில் உதயநிதிக்கு முக்கிய தளபதியாக விளங்குவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று பாராட்டி வருகிறார்கள்.
செந்தில் பாலாஜி கையில் மீண்டும் மின்சாரத்தை மட்டும் கொடுப்பது போதாது, அதை விட அழுத்தமான பெரிய பதவியைக் கொடுங்கள் என்று தி.மு.க.வினர் குரல் எழுப்புகிறார்கள். எனவே, வருவாய்த் துறையை ஒப்படைக்கும் திட்டம் இருக்கிறதாம். இதுவே சரியான பரிசு என்று சொல்கிறார்கள்.
அதேநேரம், தி.மு.க.வின் சீனியர் அமைச்சர்கள் அதிர்ந்துபோய் நிற்கிறார்கள். இப்போதே உதயநிதியின் ஆதரவாளர்கள் ஆட்டம் தாங்க முடியவில்லை, இந்த லட்சணத்தில் செந்தில் பாலாஜியும் உள்ளே இறங்கினால் டப்பா டான்ஸ் ஆடிவிடும் என்று அலறுகிறார்கள். சீனியர்கள் நேரு, பொன்முடி ஆகிய இருவருமே இப்போது ரொம்பவும் கவலையில் இருக்கிறார்கள்.