• Home
  • உறவுகள்
  • மூன்றாவது மாதமே அடம் பிடிக்கத் தொடங்குறாங்க

மூன்றாவது மாதமே அடம் பிடிக்கத் தொடங்குறாங்க

Image

குழந்தை வளர்ப்பு ஆச்சர்யங்கள்

குழந்தை இல்லாத வீட்டில் மகிழ்ச்சி இருக்காது, அதேநேரம்  குழந்தை அடம்பிடித்தால் தாங்கவும் முடியாது.  சாதுவாக இருக்கும் குழந்தைகள்கூட, திடீரென அடம் பிடித்து நினைப்பதை சாதிப்பது உண்டு. அந்த நேரத்தில் குழந்தையை சமாளிக்க முடியாமல் பெற்றோர் திணறுகிறார்கள். இத்தனை அன்பு கொடுத்தாலும், சொன்னபடி கேட்காமல் அடம் பிடிக்கிறதே என்று வருத்தமும் கோபமும் கொள்வதுண்டு. குழந்தைகளை சமாளிக்க முடியாமல் மருத்துவரை சந்திக்கும் அளவுக்கு டார்ச்சர் அடைகிறார்கள்.

சரி, குழந்தை ஏன் குழந்தை அடம் பிடிக்கிறது? குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் பழக்கம் மூன்றாவது மாதத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது என்கிறார்கள், மருத்துவர்கள். அந்த நேரத்திலேயே பால் குடிப்பதிலும், சாப்பிடுவதிலும் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதுண்டு. ஆம், தங்கள் மனதில் உள்ள விஷயத்தைச் சொல்வதற்கும், செய்வதற்கும்  அவர்கள் எடுக்கும் ஆயுதமே அடம்பிடித்தல். இந்த பழக்கம் மரபணு வழியாகவும், இயற்கையாகவும் குழந்தைகளுக்கு கடத்தப்படுகிறது. இந்தப் பழக்கத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கு வரவேண்டியது முக்கியம்.

குழந்தைகள் தேவையின்றி அல்லது சூழல் புரியாமல் அடம்பிடிப்பது இல்லை. அவர்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் தேவையென்றால், அதனை அடைவதற்கு அடம்பிடிப்பார்கள்.  நினைத்தது நடக்கவில்லையென்றால் கீழே புரண்டு அழுவார்கள், சுவற்றில் முட்டி தங்களுக்கு காயம் ஏற்படுத்திக்கொள்வார்கள்.   குழந்தை அழுது அடம்பிடிப்பதை  கண்டுகொள்ளாமல் விட்டால் சரியாகிவிடும் என நினைக்கக்கூடாது. அது அவர்களுடைய மனநிலையைப் பாதிக்கும். மேலும், பெற்றோர் மீது வைத்திருக்கும்  நம்பிக்கையை இழக்கவும் வைத்துவிடும். அதற்காக அடம் பிடித்தவுடன், பிள்ளைகள் விரும்புவதை செய்துதர வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

பொதுவாக,  குழந்தைகள் அடம் பிடிக்கும்போது அதற்குப் பயந்து பெற்றோர்கள் சம்மதித்துவிடுவார்கள் அல்லது அதற்கு மாற்றாக வேறு ஏதாவது  வாக்குறுதி அளிப்பார்கள். இது இரண்டும் தவறு. அதே நேரம், சில குழந்தைகள் வீட்டில் நினைத்ததை  சாதிக்க முடியாது எனும்போது, பிறர் முன்னிலையில் அல்லது பொது இடங்களில் அடம் பிடிப்பார்கள்.

இப்படி, பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துவது, அறைகளில் வைத்துப் பூட்டுவது, பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுப்பதாக மிரட்டுவதும் தவறு. சிலர்  அடித்துவிட்டு, பின்னர் கேட்டதை வாங்கித் தருவார்கள். இவையும்  தவறான அணுகுமுறையே.

அடம் பிடிக்கும் குழந்தையிடம் மிகவும் தெளிவாகப் பேச வேண்டும். இப்போது ஏன் வாங்கித்தர முடியாது என்பதை தெளிவாக, குழந்தைகளுக்குப் புரியும் வகையில்  கூற வேண்டும். குழந்தைகளிடம் கோபப்படாமல், எரிச்சல்படாமல், அன்புடனும் அக்கறையுடனும் பேச வேண்டும். இதற்கு நிறையப் பொறுமையும், சகிப்புத்தன்மையும் தேவை.

ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை எதற்காக அழுகிறது, எப்படி அழுகிறது என்பது நன்கு தெரியவேண்டும். அந்த வகையில் குழந்தையின் உணர்வுகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு குழந்தைகளின் உணர்வுகளை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதிகமான நேரம்,  நெருக்கமாகக் கவனிக்க வேண்டும். அவர்களிடம் உரையாட வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லி உற்சாகப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் அடம்பிடிக்கும் சமயத்தில், அவர்களின் கவனத்தைத் திசை திருப்ப முயல வேண்டும்.  அவர்களுக்குப் பிடித்தமான வேறு விஷயத்தைப் பற்றிப் பேசி, இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இப்படி, உடனே குழந்தைகளை  வேறு விஷயத்துக்கு மாற்றிவிட்டால், முந்தைய பிரச்சினையை உடனே மறந்துவிடுவார்கள்.

 குழந்தைகள் அடம்பிடிக்கும்போது அவர்களுடைய விருப்பு, வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குழந்தையைத் திட்டக்கூடாது. குழந்தை படிக்க மாட்டேன் அல்லது சாப்பிட மாட்டேன் என அடம்பிடித்தால், யாராவது ஒருவர் கண்டிக்கும்போது மற்றவர் குழந்தையை அனுசரிக்கலாம். குழந்தை அடம்பிடிக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவர் கண்டிக்கவும் மற்றவர் துணை நிற்க வேண்டும்.

குழந்தைகள், அடம்பிடித்தால் கெட்டபெயர் கிடைக்கும். நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள் என அறிவுரை  கதைகள் மூலம் சொல்லிப் புரியவைக்கலாம். குழந்தைகள் எப்போதும் துருதுருவென்று விளையாடிக்கொண்டே இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு நிறைய வித்தியாசமான புதிய செயல்களைச் சொல்லிக்கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் திறமையை வளர்க்க வேண்டும். ஓடுதல், ஆடுதல், பாடுதல், வரைதல், ஓவியம் போன்ற திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடும்போது அவர்கள் தேவையற்ற நடவடிக்கைகளை  மறந்துவிடுவார்கள்.

குழந்தைகளுக்கு அவ்வப்போது ஆரோக்கியமான பரிசுகளை வாங்கிக்கொடுத்து, அதன் முக்கியத்துவத்தைப்  புரியவைக்க வேண்டும். வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று  குழந்தைகளைச் சமாதானப்படுத்தி நல்வழிப்படுத்தலாம். குறிப்பாக, குழந்தைகளிடம் அதிக கொஞ்சலும் அதிக கண்டிப்பும் இருக்கக்கூடாது. இரண்டும் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.

குழந்தை ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொண்டு வளர்ந்து வருகிறது. உங்கள் குழந்தையின் கெட்ட பழக்கவழக்கங்களை மாற்ற, அவர்களுக்கு உதவி செய்யுங்கள். சிறு வயதிலேயே குழந்தைகளின் பிடிவாதத்தை மாற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இன்றையச் சூழ்நிலையில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். அதுபோன்ற சந்தர்ப்பத்தில், குழந்தைகளின் சிறு அழுகையையும் தாங்கமுடியாமல், அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர். இப்படிச் செய்வதால், எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகள் சின்ன ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல்  பல சிக்கல்களைச் சந்திப்பார்கள் என்பதைப் பெற்றோர்கள் உணரவேண்டும்.

குழந்தையை அரவணையுங்கள்… குதூகலமாய் வாழுங்கள்!

Leave a Comment