மந்திரச்சொல்
வடைக்கு ஆசைப்பட்டு எலி பொறியில் மாட்டிக் கொள்கிறது. புழுவுக்கு ஆசைப்பட்டு மீன் தூண்டிலில் சிக்கிக்கொள்கிறது. எளிதில் கிடைக்கும் இலவசம் எல்லாமே இலவசம் அல்ல, பொறிகளாக இருக்கலாம்.
இலவசம், சலுகை, தள்ளுபடி போன்ற வார்த்தைகள் மனிதரை ஈர்க்கின்றன. இலவசமாகக் கிடைப்பதை எடுத்துக்கொள்வதில் என்ன தவறு என்று ஆசைப்படுகிறார்கள்.
இலவசம் என்றாலும் அதற்கு ஒரு விலை இருக்கும். பணம் கொடுக்கவில்லை என்றாலும், வேறு ஏதேனும் ஒன்று கொடுக்க வேண்டியிருக்கும். அதாவது, நேரம், கவனம், சுதந்திரம், நிம்மதி, சுயமரியாதை என எதையேனும் கொடுத்தே இலவசத்தைப் பெற முடியும். இதுவே, இலவசத்தின் பின்னே மறைந்திருக்கும் விலை
எந்த ஒரு பொருள் என்றாலும் அதை தயாரிக்கவும், கொண்டு வரவும், வழங்கவும் யாரோ ஒருவர் செலவு செய்திருப்பார். எனவே, இலவசமாக வழங்கப்படும் எல்லாவற்றுக்கும் பின்னே ஏதேனும் ஒரு நோக்கம் இருக்கவே செய்யும்.
அதேபோல் வாழ்க்கையில் மூன்றாவது மனிதர் யாராவது ஒருவர், அளவுக்கு அதிகமாக உதவி செய்கிறார் என்றால், சிந்திக்க வேண்டும். அவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் விழிப்புணர்வு வேண்டும்.
உதவி என்பது அன்பாக இருக்கலாம். ஆனால் அதே அன்பு எதிர்பார்ப்பாக, கட்டுப்பாடாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. இன்று நான் உனக்கு இதைச் செய்கிறேன், நாளை எனக்கு நீ ஒன்று செய்ய வேண்டும் என்று கேட்கலாம். ஆகவே, எந்த உதவியும் இலவசம் அல்ல, எதிர்காலத்தில் வசூலிக்கப்பட வேண்டிய கடனாக இருக்கலாம்.
இன்று பல டிஜிட்டல் சேவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இதற்கு நாம் பணம் செலுத்துவதில்லை. ஆனால் நமது நேரம் செலவாகிறது. நமது கவனம் மாறுகிறது. நமது நடவடிக்கைகள் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. என்ன பார்க்கிறோம், எதை விரும்புகிறோம், எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் போன்ற தகவல்களுக்கு பொருளாதார மதிப்பு இருக்கிறது.
உறவுகளிலும் இந்த உண்மை இருக்கிறது. சில மனிதர்கள் நம்மை மிகவும் அன்பாக அணுகுவார்கள். எப்போதும் உதவி செய்வார்கள். நமக்காக நிற்பார்கள். அது உண்மையான அன்பாக இருக்கலாம் என்றாலும், ’இந்த அன்புக்கு பின்னால் எதிர்பார்ப்பு இருக்கிறதா?’ என்ற கேள்வியை மட்டும் மறந்துவிடக்கூடாது:
உண்மையான அன்பு நம்மை சுதந்திரமாக்கும். பொய்யான அன்பு நம்மை கடன்பட்டவர்களாக உணரச் செய்யும். அதேநேரம், பெற்றோரின் அன்பு இலவசம். நண்பனின் உண்மையான ஆதரவு இலவசமாக இருக்கலாம். ஒரு அந்நியர் காட்டும் மனிதநேய உதவி இலவசமாக இருக்கலாம். ஒரு ஆசிரியர் தரும் அறிவு இலவசமாகக் கிடைக்கலாம்.
எதுவாக இருந்தாலும் சந்தேகப்படுவது தவறு அல்ல, தெளிவடைவது முக்கியம்.
சில விஷயங்கள் ஆரம்பத்தில் இலவசமாகத் தோன்றும். பின்னர் அவற்றின் விலையை செலுத்த வேண்டியிருக்கும். அளவுக்கு மீறிய இலவச வசதி சுயசார்பைக் குறைக்கலாம். எப்போதும் கிடைக்கும் இலவச பொழுதுபோக்கு நேரத்தைத் திருடலாம். நிபந்தனையுடன் வரும் இலவச அன்பு மன அமைதியைப் பறிக்கலாம்.
அதனால் வாழ்க்கையில் ஒரு முக்கியமான விதியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பணம் கொடுக்காமல் கிடைக்கும் எல்லாவற்றையும் ஏற்கத் தேவையில்லை. வேண்டாம் என்று சொல்வது சுயமரியாதை. வேண்டாம் என்று சொல்வது மிகப்பெரிய சுதந்திரம்.
நமக்குத் தேவையானதை உழைப்பால் வாங்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டால், இலவசத்தின் கவர்ச்சி குறைந்து விடும்.
புத்திசாலித்தனமான வாழ்க்கை என்பது இலவசமாகக் கிடைப்பதை எல்லாம் ஏற்பது அல்ல, எவற்றை மட்டும் ஏற்கலாம் என்ற தெளிவே முக்கியம்.
– எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
